Saturday, August 1, 2009

கடவுளே!!

கடவுள் பற்றிய கேள்வி, மற்றும் அதனால் எழுந்த விவாதங்கள் அருமை!! நானும் என் பங்குக்கு சொதப்பலாம்னு இருக்கேன்!!ஜெயந்தியின் பதிவிற்கு சுரேஷின் பதில்களுக்கு என் 'ஷொட்டு '!! என் பதிவு ஒரு வகையான குறிக்கோள் இல்லாத, 'சத்தமான சிந்தனைகள்'.....
கேள்வியில் சொல்லப்படாதது 'கடவுள்' என்றால் என்ன என்பது. தோராயமாக கடவுளை இப்படி சொல்லலாமா?

1. கிரீடம் மற்றும் ஆபரணங்கள் அணிந்து அசத்தலாய் இருப்பார்
2. வானமண்டலத்தில் எங்கோ சஞ்சரித்திருப்பார்...கோவிலிலும் இருப்பார்
3. பூஜை புனஸ்காரம் செய்தால் ஏற்று மகிழ்வார்...பலன் தருவார்
4. மேல்கண்ட பூஜைகளை தவறாய் செய்தால் கோபிப்பார் (தெய்வ குற்றம்?)
5. எலி, புலி முதலான மிருகங்கள் மேல் பயணிப்பார்
6. நம்மை கண்காணித்து, நாம் செய்யும் நல்லது கெட்டதுகளை கணக்கு வைத்து கடைசி காலத்தில் கணக்கு தீர்ப்பார்
7. மந்திரம் தந்திரம் செய்யும் வலிமை உடையவர்
8. எல்லாவற்றுக்கும் மேலான ஒரு சக்தி
9. நீர், நிலம், காற்று, இத்யாதி இத்யாதி அவர்தான்

இங்கு கடவுளை நம்புபவர் என்று கூறுபவர் யாவரும் 'நான் அவரை 8, மற்றும் 9 ஆகத்தான் பார்க்கிறேன் என்று சத்தியம் செய்தாலும், ஒன்று முதல் ஏழு வரையிலான 'கடவுள் விஷயங்களில்' மறைமுகமாக நம்பிக்கை வைத்திருப்பார்கள் (without sounding judgmental!)....வீட்டில் பூஜை அறை இருக்கும்....அதில் பலவித சாமி படங்கள் இருக்கும்....அவற்றிற்கு பூஜைகள் நடக்கும்!
ஐந்தாம் வகுப்பில், என்னுடைய கிறித்துவ வாத்தியார் "எப்படியடா குரங்கில் இருந்து மனிதன் வரும்? எங்காவது கேட்டிருக்கிறாயா குரங்கு வளர்ந்து சுப்ரமணியன் ஆனான் என்று?" என்று கேட்டபோது, கையை தட்டி ஆர்பரிதிருக்கிறேன்...அன்று! இன்று என்னுடன் கால்நடை மருத்துவம் படித்த டாக்டர்கள் பலரும் அதே வாதத்தை முன் வைக்கும் பொது, பரிணாம வளர்ச்சி என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதில் உள்ள கஷ்டம் என்ன என்பது தெரிகிறது. மூலக்கூறு உயிரியல் (Molecular biology) படித்த யாரும் எளிதில் சொல்வார்கள்...மனிதனுக்கும், சிம்பன்சிக்கும், சில்வண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒரு வகையில் மேலோட்டம் ஆனதாகும். நமது அணுவுக்கும், ஒரு பூண்டின் அணுவுக்கும் உள்ளே உள்ள 'வீடு காக்கும் சுரப்புகளின்' (அப்படிப்போடு!!) (House keeping enzymes) அடிப்படையான மரபியல் கைஎழுத்து (DNA sequence) அப்படி ஒன்றும் வித்யாசமானது இல்லை!! ஒரு செடியின் சுரப்புகளை ஆட்டின் மடியில் சுரக்கும் பாலில் வரச்செய்ய முடியும்!! ஒரு செடியை பால் 'கறக்க' செய்யவும் முடியும்....உயிர்தொழில்நுட்பத்தல்!!என்ன சொல்ல வருகிறேன் என்றால்....உயிருள்ளவை யாவுமே ஒரே 'blueprint' இல் உருவானவை ..அது மனிதனாகட்டும், கொசுவாகட்டும்!! ஓரணு உயிரில் இருந்து மனிதன் உருவானதற்கு ஆதாரங்கள் ஏராளம். பரிணாம வளர்ச்சி பற்றி ஆணித்தரமான (irrefutable and unequivocal) ஆதாரங்கள் இருந்தும், இன்னும் கடவுள் தான் படைத்தார் என்று மொட்டை வாதங்கள்!! இதில் கொடுமை என்னவென்றால், மூலக்கூறு உயிரியல் மற்றும் paleontological ஆதாரங்களை தவறான மேற்க்கோள் காட்டி, கடவுள் இருப்பதற்கு ஆதாரமாக பேசுவது ஆத்திகர்களின் வழக்கம் ஆகிவிட்டது. உதாரணம்- குப்பை மரபமிலம் (junk DNA) பற்றிய சர்ச்சை!! ....
http://video.google.com/videoplay?docid=3052574599084753240 மற்றும்
http://www.godandscience.org/evolution/junkdna.html
...கொடுமையடா கடவுளே!!
ஆத்திக வாதம் 'நம்பிக்கை' யை அஸ்திவாரமாகக் கொண்டது. "கடவுள் இருக்கிறார். நான் நம்புகிறேன்" அவ்வளவுதான்!! நாத்திகனின் பொறுப்போ ரொம்ப ஜாஸ்தி....ஆத்திகனின் கேள்விகளுக்கு பதில் சொல்லணும்....அதுவும் எந்த மாதிரி கேள்விகள்? "அதுக்கப்புறம்?" அதுக்கும் அப்புறம்? அதுக்கு முன்னாடி?" இவ்வளவுதான்!! அதாவது, ஒரு கேள்விக்கு திருப்த்தியான பதில் கொடுத்து விட்டால், உடனே "அதுக்கப்புறம்?" அல்லது "அதுக்கும் முன்னே?" என்பதுதான் கேள்வியாக இருக்கும்!! பண்டைய நாத்திகனுக்கு சூரிய கிரிகனத்திர்க்கு சரியான பதில் இல்லைதான்!! ராகு, கேது, பாம்பு கதைகளை ஆத்திகன் விடும் பொது, கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற தலை விதி!! இன்று அப்படியில்லை! ஆகவே அறிவியலுக்கு அனைத்தையும் விளக்கும் தன்மை உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!!இன்று கிடைக்காமல் போகலாம்.....நாளை கட்டாயமாக பதில் கிடைக்கும்!! Science IS God!!!
"கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் எனக்கு இன்னின்னது கொடுத்தார்' என்பது எத்தனை கொச்சையான கூற்று? ஸ்துதி செய்தால் பலன் தருவது கடவுள் செயலா? இல்லையே! கடவுள், உங்கள் பிரார்த்தனையை கேட்டு, உங்களை விட திறமை சாலிக்கு கொடுக்காமல்,உங்களுக்கு ஒரு promotion கொடுத்தால் அதை விட அநியாயம் உண்டா?அதற்க்கு அந்த பிரார்த்தனையை என் மேலதிகாரிக்கு செய்தால் இன்னும் பலன் கிடைக்குமே? ஏன் உங்கள் திறமையினால் வந்த பலன் என்று கூற மாட்டீர்கிறீர்கள்? நான் கடலூர் அருகே குள்ளஞ்சாவடி என்னும் கிராமத்தில் கால்நடை மருத்துவனாக சிலகாலம் பணி செய்தேன். காலை மணி எட்டு முதல் மலை ஐந்து வரை மருந்தகத்தில் தான் கிடப்பேன் ! இன்னும் சொல்லப்போனால் வன்னியர் சங்க போராட்ட காலத்தில் பேருந்துகள் ஓடாத நாட்களில் பதினெட்டு கிமி சைக்கிளில்மூச்சு வாங்க மிதித்து செல்வேன். என்னுடைய அருகாமையில் இருந்த மருந்தகத்தில் என் கல்லூரித்தோழன்....கடவுள் பக்தன்!! நோன்புக்க்காகவும், பிரர்த்தனைக்க்காகவும் மருந்தகத்தை மூடி கோவில் செல்வான்.அவனுடைய வாதம்-கடவுள் பிரார்த்தனை செய்தால் போதும்...நேரத்தில் கால்நடை மருந்தகம் வந்து மக்களுக்கு பணி செய்வதை விட அது புண்ணியம் தேடி தரும் என்பது!! எவ்வளவு குதர்க்கம்?
கண்ணன் 'stem cell therapy' பற்றி சொன்னான்!! இதைப் பற்றி செந்தில் விளக்கினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். சுருக்கமாக சொன்னால், கருவில் ஒரு அணுவில் இருந்து, பல வித்தியாசமான அணுக்கள் கொண்ட உயிர் உருவாகிறது. முதலில் தோன்றும் அணுக்கள் பல்முனைத்திரன் (pluripotency) கொண்டவை. அவை சிறப்பு நிலை (specialized) அணுக்களாக (அதாவது, மூளை அணு-neuron, தசை அணு-myocyte, மற்றும் பல ) மாறுகின்றன. சிறப்பு நிலை அடைந்த பின் அவை அவ்வளவாக பெருகுவதில்லை (limited or no cell division). அதனால் மூளை அணு இறந்தால் அம்போ தான் (நாம் ஒவ்வொரு நிமிஷமுன் பலஆயிரம் மூளை அணுக்களை இழக்கிறோம் என்பது வேறு விஷயம்!!) ஆனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது களையப்படும் நச்சு (placenta...what an irony that the medium that transfers nutrition and oxygen to the fetus is termed as 'poison' in Tamil!!) மற்றும் தொப்புள் கொடியில் பல்முனைத்திரன் கொண்ட stem cells பல வீணாகின்றன. அதை பத்திரப்படுத்தி வைத்தால் பிற்க்கலத்தில் அந்த குழந்தை வளர்ந்த பின் சில நோய்களுக்கு அந்த அணுக்களை உபயோகப்படுத்தலாம். (அந்த வகை அணுக்களை ஏற்றுக்கொள்ளும் பிறருக்கும் உபயோகப்படும்). Adult stem cell-சற்றேறக்குறைய இது போலத்தான்...ஆனால் பெரியவர்களின் (அதாவது adults!) கொழுப்பு அணுக்கள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் ஆத்திகவாதிகள் இதில் மரபு மீறல் (ethical considerations) உள்ளது என்று கூக்குரல் இடுகிறார்கள்!! இவர்கள் தொல்லை தாங்காமல் அரசும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள்....ஆராய்ச்சி முடங்கும் அளவிற்கு!!
"அவனின்றி அமையாது உலகு" என்பார்கள்!! இப்போது அவனால் உலகம் அழியும் அளவிற்கு ஆகிவிட்டது! இன்று உலகைப் பிடித்து ஆட்டும் பிரச்சனைகள் யாவுமே கடவுள்அடிப்படயாகக் கொண்டது!! என் மதம் பெரியதா, உன் மதம் பெரியதா? என்பது தான்!! பாலஸ்த்தீனம், கொசவோ, ஜின்ஜியாங், கிழக்கு திமோர், அயர்லாந்து காஷ்மீர்....இங்கெல்லாம் மக்கள் கடவுளால் மாக்கள் ஆகிவிட்டார்கள்!! மற்ற காரணங்களால் எழும் பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடுகின்றன. ஆனால் இது தீருவது ரொம்ப சிரமம் ......ஏனென்றால் சிலர்க்கு கடவுள் பக்திக்கும் கடவுள் வெறிக்கும் நூலிழை வித்தியாசம் தான் என்றாகி விட்டது!!
கடவுளை மற! மனிதனை நினை! என்பது எவ்வளவு மேன்மையானது?
(பி. கு.) நான் முன்னமே விண்ணப்பித்து பெற்ற முன் ஜாமீன் இன்னும் நடப்பில் உள்ளது என்றும், இப்போது ஊட்டியில் செம மழை....அடிக்க வர சரியான நேரம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்!!!
......இன்னும் வரலாம்!!

3 comments:

கிவியன் said...

கடவுள் இப்படி பாடாய் படுத்துகிறாரே??

மிக ஆணித்தரமான வாதங்களுடன் சற்றே அங்கும் இங்கும் அலை பாயும் பதிவு ஸ்ரீ மேலும் எதிர்பார்கிறேன்.

அந்த முதல் வீடியோ தொடுப்பு வேலை செய்யவில்லை முகவரி சரியா என பார்.

//இங்கெல்லாம் மக்கள் கடவுளால் மாக்கள் ஆகிவிட்டார்கள்!! // வாவ் ஸ்ரீ என்ன ஒரு பன்ச்..

மரபு மீறல் ஒவ்வொரு கலிலியோ காலத்தில் ஒரு மாதிரி டார்வின் சந்தித்தது ஒரு விதம் இப்போது அந்த அளவுக்கு இல்லை என்றாலும் ஆராய்ச்சியின் மென்னியை பிடித்து நிறுத்தும் அளவு சக்தி கொண்டதுதான்.

சரி அது போகட்டும், மனிதன் எதன் மீதாவது நம்பிக்கை வைத்துத்தானே ஆகவேண்டும்?? ஒன்று விஞ்ஞானத்தில் இல்லை மனிதன் மீதே

நம்மிடம் இப்போதைக்கு இருப்பது கேள்விகள் கேள்விகள் மட்டுமே

sreesnake said...

here goes it!
http://video.google.com/videoplay?docid=3052574599084753240

கிவியன் said...

கடவுள இப்படியே விட முடியுமா?

சில கேள்விகள்:

ஒரு விஞ்ஞானம்=மெய்ஞானம்???

விஞ்ஞானத்தில் பல யூகங்கள், ஆராய்ச்சிகள், சான்றுகள், இருந்தாலும், தோட்டம் இருந்தால் தோட்டக்காரன் இருந்தே ஆகவேண்டும் என்ற கோட்பாட்டையும் நமக்கு கற்று கொடுத்ததும் அதே விஞ்ஞானம்தான். When there is a design there should be a designer??


சரி இப்போது வேறு விதமாக இந்த பிரச்சனையை அனுகலாம்:

ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுதல் என்பதை நாம் அனைவருமே தெரிந்த விஷயங்களை வைத்தே தெரியாத விஷயங்களை புரிந்துகொள்கிறோம். அதற்காகவே உவமை என்ற முறையை மனிதன் கண்டுபிடித்தான்.
ஒன்றை நாம் அறியும் முறை முன்று படிகள் கொண்டது என்பது இந்திய ஞான மரபு.

1. பிரத்தியட்சம் [ புலன் சார் அறிவு] 2. அனுமானம் [ஊகித்தல்]
3. சுருதி [முன்னரே இருக்கும் அறிவுடன் இணைத்துக்கொள்ளுதல்] நான்காவதாக உவமையையும் சேர்த்துக்கொள்ளும் சிந்தனை மரபுகள் இந்தியாவில் உள்ளன. (நன்றி: ஜெ.மோ கட்டுரையிலிருந்து),

ஆக இந்த தோட்டக்காரனை இப்படி அனுகமுடியுமா?