Showing posts with label Suresh. Show all posts
Showing posts with label Suresh. Show all posts

Thursday, May 31, 2012

எண்ணத்தை பதிவு செய்



இந்த பதிவு தலைப்ப “என்னத்த பதிவு செய்ய?” அப்படின்னுதான் வெக்கனும்னு நெனச்சேன் ஆனா கொஞ்சம் கவித்துவமா இருக்கட்டுமேன்னு தான் மாத்தினேன்.

 என் தனிவலையில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். முற்றிலுமாக என சொல்ல முடியாது அவ்வப்போது தோன்றுவதை கேள்விப்படுவதை 140 எழுத்துக்களில் எழுதிக் கொண்டுதானிருக்கிறேன். நான் தொழில்முறை எழுத்தாளன் இல்லை பாருங்கள். சில சமயம் நீ ஒஹோன்னு எழுதரன்னு ஒன்னு ரெண்டு பேர் பாராட்டிட்டாங்கன்னா, மேலும் எதையாவது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் கூட வந்ததுண்டு. ஆனா கூடவே காதில் விழும் அடுத்தவன் கைத்தட்டலுக்காக எழுதுபவன் கேளிக்கையாளன் தாளகதிக்கேற்ப சதிர் மாறும் அப்படின்னு வேர தோன்றியதால் எழுதுவது குறைந்து கிட்டத் தட்ட நின்றே போனது. ஆனால் உள்ளே எதுவோ நெம்பி தள்ளும் போது அவ்வப்போது அஞ்சலில் எழுதுவதோட சரி. என் கதி இப்படி இருக்க இந்த வகுப்பறைல யாரும் எழுதரது இல்லேன்னு குறை சொல்லவா முடியும்??. எழுதுவது என்பது எப்படி என்றால் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட நார் போல அத எடுத்தாதான் நிம்மதியா இருக்கும். அது மாதிரி ஒரு சின்ன பொறி மனசுல தோன்றி அத எழுதிமுடிச்சுட்டுதான் மறுவேலை என்பது போன்ற நிலை வந்தாலே எழுத முடியும். எழுத ஆரம்பிப்பதற்கு முன் நிறைய படிப்பது மிக மிக அவசியம். படிப்பதற்கா பஞ்சம்? எவ்வளவு இருக்கிறது. படிக்க நமக்கு இந்த ஆயுள்தான் போதாது, கண்களில் ஒளியிருக்கும் போதே படிப்பது நல்லது.

அட இருகங்கப்பா அப்படியே மெளச க்ளிக் பண்ணி வேர பக்கத்துக்கு போயிராதீங்க. 

வகுப்பறையில் ஒரு புள்ளிவிவரம் எடுத்தா சிவா, ஜெயந்தி, நான் எப்பவாவது தல, தாமு, இவர்களை தவிர வேர யாரும் எழுதுவது இல்லை (படிப்பதும் இல்லை அப்படின்னு ஒரு கோரஸ் கேக்குது). ஆனா இப்படி ஒரு நாலு பேர் வந்ததே பெரும் விஷயம் என்றுதான் தோண்றுகிறது.

கலந்து கட்டியாக நான் கண்டது கேட்டது படித்ததிலிருந்து சில:

ஒருவன் பல கொலைக் குற்றம் செய்து வந்ததன் பயனாய்ச் சர்க்காரால் தூக்கிலிடப்பட்டான். அவன் மகன் வெளியிட்ட கருமாதிப் பத்திரிகையின் படி அந்தக் கொலைகாரன் வைகுண்டம் போனதாய்த் தெரிகிறது. தக்க போலீஸ் காபந்து இருந்தாலொழிய, வைகுண்டத்திற்கு எவரும் போகவேண்டாம்!
-பாவேந்தர் பாரதிதாசன் ”விடுதலை” நாளிழதில்

மேலும் இப்ப சமீபத்துல நாம் விவாதிச்சிட்டு இருக்குறது சமூக சேவை பற்றி, இதப் பத்தி பாவேந்தர் எழுதியிருக்கும் கவிதைய பாப்போம்: குடும்ப விளக்கு தொகுதியிலிருந்து:

பொதுத்தொண்டு செய்தோமா?

அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?

"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.

சும்மா அப்படியே சுளுக்கெடுத்தா மாதிரி இருந்தாலும்..படிச்சுட்டு டீவிய போட்டு விஜய் சூப்பர் சிங்கர்ல மூழ்கிட்டோம்னா அப்புறம் தெளிவடஞ்சுடுவோம். இப்படியேதான போய்டிருக்கு வாழ்க்க.

அநேகமா எல்லோரும் ஒத்து வர மாதிரி சொல்லியிருப்பது ஏற்கனவே இந்த மாதிரி சமூக சேவை செய்யும் நிறுவனமோ இல்லை குழு மூலமாக நாம் உதவலாம் என்பது. நம்மிடையே நேரடியாக சமூகப் பணியில் அனுபவம் பெற்றவர்கள் யாரும் (எனக்கு தெரிந்து) இல்லாததால் இந்த வழி சரியாகப் படுகிறது. இப்பதான் வேதாளம் மரமேர ஆரம்பிக்கும், அதாவது நான் சொல்லும் நிறுவனமே சிறந்தது இவர்களுக்குத்தான் உதவ வேண்டும் என்று முயலுக்கு மூணே கால் என நிறுவ தோன்றும், இதை யோசித்துதான் சாமுவேல் தயங்குகிறான் என நினைக்கிறேன்.

மதுரை சந்திப்பின்போது மிக சிறிதே பேச கிடைத்த சந்தர்பத்தில் அசோக் சமூக சேவையில் நேரடியான அனுபவம் உள்ளவன் என தெரிந்துகொண்டேன். பல திட்டங்களும் உள்ளது என சொன்னதாக ஞாபகம். எதிர் காலத்தில் அரசியலிலும் ஈடுபடுவேன் என சிரித்துக்கொண்டே சொன்னதால் சீரியசாக சொன்னானா என தெரியவில்லை. எனினும் நாம் செய்ய நினைக்கும் சமூக சேவையை பற்றி அசோகனிடமும் கலந்தாலோசிக்கலாம்.

மேலும்  சமீபத்தில் பார்த்த அமீர்கானின் சத்யமேவ ஜெயதே தொடரில் சொல்லியது போல் பொதுவான மாத்திரை மருந்துகளை மலிவான விலையில் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் சேவையை செய்யலாம், இதற்காக முன்வரும் சமூக சேவை நிறுவனங்களுக்கு இரசாயனம் மற்றும் உரதொழிலக அமைச்சகம் ரூ. 50,000 உதவித்தொகயை மலிவு விலை மருந்தகம் அமைக்க வழங்குகிறது. இது பற்றி மேல் விவரங்கள் இங்கு. சற்று வித்தாயாசமாக் செய்ய நினைத்தால் இந்த சேவையை பற்றி யோசிக்கலாம். தமிழ் நாடு முழுவதும் கிளைகள் உண்டாக்க உதவலாம்...பெரிய கனவுதான் (நம்ம கலாம் சொன்னா மாதிரி)

மற்றும் ஒரு நிறுவனம் நியுஸிலாந்து (பெண்)எழுத்தாளர் ஜீன் வாட்சன் என்பவரால் 1991ல் திண்டுகல் மாவட்டம் நிலக்கோட்டையில் நிறுவ பட்ட கருணை இல்லம். இவர்களது சமுக சேவை பற்றி எனக்கு ஜீன் வாட்சன் மூலம் தெரியும். தான் இருந்த வீட்டை விற்று, தனக்கான செலவுகளை குறைத்துக் கொண்டு அங்கு கருணை இல்லத்துக்காக சேமித்து நிதி அனுப்புகிறார். இங்கு தமிழ் சமூகமும், இன்னும் பல தனி ஆர்வகலர்களும்,  எதாவது கலைவிழா, ஓடுவது சைக்கிள் ஓட்டுவது மூலம் நிதி திரட்டி உதவுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கு. இது மிகவும் நம்பிக்கையான ஒரு சமூக நிறுவனம்.

நான் இட்டது சில புள்ளிகள்,
அன்பர்கள் மேலும் கூட்டலாம்
ஒன்றாய் இணைந்து கோடுகள் வரையலாம்
புதுக் கோலம் ஒன்று  மலரந்திடவே!

Thursday, February 3, 2011

தெலுங்கு பட வில்லர்கள்

நம்ம தாமு படம் போட்டு கலக்கினதுனால, நாமளும் படம் போடலாம்னா என் கிட்ட கறுப்பு வெள்ளை காலத்து பழைய படமொன்னும் சிக்கல. அட என்ன பண்ணலாம்னு யோசிக்ரதுக்குள்ள சிவா உள்ள புகுந்து ரெண்டு பதிவ போட்டு புத்தகத்த பத்தி எழுதுங்கோ அப்படின்னு சொன்னதுன்னால புத்தக பெட்டிய தேடப் போக பழைய புகைப்பட ஆல்பங்கள் சில சிக்கின அதை நோட்டம் விட்ட போது ஒரு படம் கிடைத்தது. அது கீழே



எப்பூடி, சும்மா தெலுங்கு பட போஸ் மாதிரி நமமுக்கு ரெண்டு பக்கமும் வில்லன்கள் நிக்கிறாய்ங்க பாரு.

படத்தில் வலப்புறம் நிற்பவரை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நம்ம துரைசாமிதான். இந்தப் படம் மும்பையில் மாதேரன் என்னும் மலைப்பகுதியில் எடுத்தது. ஒரு நல்ல மழை நாள் அதாவது ஜுலை-யோ ஆகஸ்ட் மாதமோ, அப்பப்ப நாம ட்ரெக்கிங் மலையேறுதல் என்று போவது போல் இந்த இருவரும் எங்களையும் அப்படி கூட்டிட்டு போ-ன்னு சொன்னதால மாத்தேரன் கிளம்பிப் போனோம். அப்போது துரை பாரீஸ் இன்ஜியரிங்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வருடம் 1994.

சரி இடது புறம் இருப்பவரை யாருக்காவது அடையாளம் தெரிகிறதா?
கொஞ்சம் கஷ்டம்தான்.

தற்சமயம் ”முதல்வர் மகாத்மா” என்னும் படத்தை இயக்குபவரும் பெருந்தலைவர் காமராஜ்ரை பற்றி கிங் மேக்கர் காமராஜ் என்ற படத்தையும் இயக்கியவருமான அ. பாலகிருஷ்ணன். இவர் எனக்கு நண்பரானது சுவாரஸ்மான பின்னனி. மும்பையில் மாதா மாதம் கணையாழி வாங்குவது வழக்கம். கணையாழி, மும்பையில் மாட்டுங்காவில் உள்ள தமிழ் கடைகளில் மட்டுமே கிடைக்கும். ஒரு முறை அப்படி வாங்கிய போது உள்ள ஒரு சிறு அச்சடிக்கப்பட்ட காகிதம் அதில்:

நீங்கள் மும்பை தெருக்களில் ஜமுனாவை தேடியிருக்கிறீகளா? தி.ஜாவை வாசிப்பவரா? கந்தசாமிபிள்ளையை போல் யாரையாவது சந்தித்திருக்கிறீர்களா?
லா.சா.ரா வின் த்வனியில் காணாமல் போனவரா? அப்படியானால் நாம் மாதத்தில் ஒரு நாள் சந்தித்து இது பற்றி பேசலாம், விவாதிக்கலாம்,
இல்லக்கியப் பாலம் என்ற அமைப்பு உங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறது வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு போத்தார் கல்லூரியில் சந்திப்போம்

என்ற தூண்டில் மூலம் இலக்கிய பாலத்துக்கு போன போது ஏற்பட்ட நட்பு, பின்பு வாரா வாரம் சந்திக்கும் அளவுக்கு கூடிப்போனது. இப்படியே போய் நாமும் படமெடுத்தால் என்ன என்று பல கதைகளை விவாதிப்போம்.

இப்படி ஒரு கிறுக்காக சுற்றிக்கொண்டிருந்த போது சுவாரசியமான ஒரு சம்பவம். மாதுங்காவில் தமிழ் படம் வெளியாகும் ஒரே தியேட்டர் ஆன அரோராவின் சொந்தக்காரர், தியேர்டருக்கு அருகிலேயே ஒரு வீடியோ காடையும் வைத்திருந்தார். ஒரு ஞாயிறு மதியம் நாங்கள் அந்த கடையில் இருந்த போது உள்ளே ஒருவர் வந்தார். பார்ப்பதற்கு மிகச் சாதரண மாக இருந்தார். அப்போது அவரை அவ்வளவு தெரியாது. யாரென்று பாத்தால் மணிரத்தினம்!!. அந்த கடைக்கு அடிக்கடி வந்து போவாராம். இப்படி திடீரென்று வந்ததால் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அட படத்துல ஒரு சான்ஸாவது கேட்டிருக்கலாம்.

அதன் பின் பாலா சென்னையிலிருந்து படத்தை வாங்கிவந்து வெளியிடலாம் என யோசனை சொன்னார். அந்த முயற்சியாக சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் அப்போது வந்த அமைதிப்படையை அதன் தயாரிப்பாளர் மணிவண்ணனிடமிருந்து சுமார் ரூ. 40,000 க்கு வாங்கி அரோராவில் வெளியிட்டோம். அதில் வசூல் ஆனது ரூ. 95,000!! முதல் முயற்சியிலேயே லாபம் என்பது போதை. அதைத் தொடர்ந்து பாலா நாமே படமெடுப்பது என முடிவு செய்து மும்பையிலிருந்து சென்னை கோடம்பாக்கத்துக்கு அருகே குடியேறினார்.

அதன் பின் கோடம்பாக்கத்தின் மறுபக்கம் எப்படிப் பட்டது என்பதை அனுபவப்பட்டு, அவர் ஒரு வழியாக காமரஜரை வெளியிட்டபோது 5 வருடங்கள் கழிந்துவிட்டது. கதையை வைத்துக்கொண்டு இவர் வாய்ப்பு கேட்டு போன ஒரு தயாரிப்பாளர்களில் சந்திரசேகரும் உண்டு. ஆமாம் இளையதளபதி விஜயின் அப்பாவேதான். கதையை கேட்டுவிட்டு நல்லா இருக்கு, ஒரே கண்டீஷன் விஜயை வைத்து எடுக்க வேண்டும் என்பது. அப்போது விஜய் வளர்ந்து வரும் நடிகர், ஸ்டெப் கட்டிங் வைத்த கிராப் வைத்துக் கொண்டு பார்க்க தாமாஷாக இருப்பார். பாலா முடியாது என்று வந்துவிட்டார். இப்போதும் மசாலா படமியக்குவதில்லை என்ற தன் கொள்கையில் மாறாமல் இருக்கிறார். அதானாலேயே அடையாளம் தெரியாமலும் இருக்கிறார். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு மும்பைக்கு வந்து, இப்படி வரும் எல்லோருக்கும் அடைக்கலம் தரும் தாராவியில் ஊருகாய் வியாபரத்தில் தொடங்கி இப்போது கோடம்பாக்கத்தில் முதவர் மகாத்மவுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.

அந்த முதல் லாப போதையில் நானும் வேலையை விட்டு விட்டு சென்னைக்கு வருகிறேன் என்று கூறியவனை, தடுத்து உன்னைப் போல் படித்த மக்கள் அங்கு வர வேண்டாம், இப்படியே உன் வாழ்கையை தொடரு என்று பாலா அறிவுறுத்தாவிட்டால், வெற்றி பெற்றால் மட்டுமே முகவரி கிடக்கும் கோடம்பாக்கதில் அடையாளமே இல்லாமல் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேன்.

Friday, October 8, 2010

சி. பரீட்சை கேள்விகளும் அ. பதிலும் தொடர்ச்சி

விட்டுப்போனவை...

என நண்பன் சற்று தாமதமாக அனுப்பியதால், சில அறிய தமிழ் விடைத்தாள்களை சென்ற பதிவில் கொடுக்க முடியவில்லை, அதை இங்கு காணலாம். நல்ல அழகான கையெழுத்தில், மஹா காமெடியாக பதில் எழுதியிருக்கும் அந்த மாணவருக்கு குறும்பு ஜாஸ்தி..









Thursday, October 7, 2010

சில பரீட்சை கேள்விகளும் அதற்கான பதிலும்

பரீட்சையின் போது ஒன்று ஒழுங்காக படித்திருந்தால் பதில் எழுதுவதில் பிரச்சினை இருக்காது. இல்லை பிட் எடுத்துச் சென்றிருந்தாலாவது சமாளித்து விடலாம். ஆனால் இது இரண்டையும் செய்யாது போனால்??

நமது (எனது) ஹீரோ வாத்தியார் சு.சு. ஒரு கதை சொல்வார். தமிழ் பரீட்சையின் போது ஒரு பையன் மாடும் அதன் பயன்களும் பற்றி நன்றாக நெட்டுரு போட்டு சென்றிருந்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக கேள்வி மரமும் அதன் பயன்களும் பற்றி வந்து விட்டது. என்ன செய்ய? பையன் அசரவில்லை, மரம் இருந்தால என ஆரம்பித்து, பின்பு இரண்டு பக்கங்களுக்கு மாட்டைப் பற்றி விளாவாரியா எழுதிய பின், கட்டுரையின் கடைசியில் இப்படிப்பட்ட மாட்டை இந்த மரத்தில் கட்டி வைக்ககலாம் என முடித்திருந்தான். ஆக இந்த மாதிரியான புத்திசாலித்தனம் வேண்டும். உதாரணத்துக்கு இதே மாதிரியான ஆங்கில கேள்விக்கு என்ன மாதிரியான பதில் எழுதியிருக்கிறார்கள் என கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.




இந்த பதிலை திருத்தி அதற்கும் அரை மதிப்பெண் கொடுத்துள்ள வாத்தியாரை பாராட்டத்தான் வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் கேட்டாலும் ஹிந்தியிலும் பதில் எழுதி கலக்குவது...




பின்பு தனக்கு பிடித்ததை வெளிப்படையாக சொல்லி திருத்தும் வாத்தியாருக்கு ஜொள்ளு வருமளவிற்கு விவரித்து அவரையும் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவது..



ஆங்கலம் இப்படி என்றால், கணித புலிகள் சில அளிக்கும் பதில் புல்லரிக்க வைக்கும், உதாரணத்துக்கு சில:










ஆக மக்களே படிக்கும் போது இப்படி எல்லாம் பதில் அளிக்கலாம் என தெரியாமல் போயிருந்தால் இப்போது உங்க பசங்க உங்களை கேள்வி கேட்டா இந்த மாதிரி பதில் சொல்லி சமாளிக்க தெரிஞ்சுக்கோங்க.

[பிகு: இந்த படங்களை நான் ஏற்கனவே பாத்துட்டேன், என பின்னூட்டம் விடறவங்களுக்கு, ஆயிரம் கேள்வி அனுப்பி பதில் எழுத வெக்கப்படும் ஜாக்கிரதை.]

Thursday, September 30, 2010

வருடத்தில் ஒரு பதிவு

நம்ம ஜெயந்தி ரொம்ப ஃபீலிங் ஆகி அறிக்கைவிட்டு இருக்கிறபடியால் சரி நம்மளால ஆனது ஒரு பதிவ எழுதி வெப்போம்னு,

மறு மறுபடி இத பத்தியே எழுத வேண்டியிருக்கு,

என்னவோ ஒரு கையாலாகாத்தனம் என நமக்கு நாமே ஒரு காரணத்தை நம்பிக்கொண்டு மிக குறுகிய வட்டத்தில் இயங்கும் நம் சொந்த வாழ்க்கையை செவ்வனே செய்து பழகிவிட்டோம். இதற்கு வெளியே செய்வதற்கு நம்மால் முடியவே முடியாது என்ற அசைவற்ற முடிவும், நம்மை போலவே அநேகமாக எல்லோரும் செய்வதால் இது தப்பில்லை என்ற சமாதானமும் புதிதாக நம்மை எதுவுமே செய்ய விடப்போவதில்லை.

டிசம்பர் 2008ல் தேனுர் சிவாஜியை பற்றி எழுதியது ஞாபகமிருக்கலாம், இப்போது இதே போல இன்னொரு சமூக சேவை பற்றி, இது நிஜம்மாவே தண்ணியில்லா காட்டில் தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும் ஒரு அமெரிக்கனின் தொண்டு பற்றியது.

டான் மாரிசன் போன்றவர்கள் தொடங்கியிருக்கும் Citizen Effect செய்து வரும் சேவையை பற்றி படிக்கும் போது தோன்றும் ஆற்றாமை வெறும் அந்த நொடியின் நிலையாக மட்டும் இருந்து பின் அதைப்பற்றி மறந்து விடுகிறது..

இப்போதைக்கு என்றாவது, ஏதோ ஒரு புள்ளியில் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மிச்சம்.

சரி போகட்டும், என்னோட ராசிக்கு சனிக்கிழம எந்திரன் பாக்கலேன்னா மோட்சத்துக்கு போக முடியாதுன்னு சன் டிவில சோசியர் சொன்னாப்டி, அதனால நாமும் சோதில கலந்துரலாம்னு, டிக்கெட் சொல்லியிருக்கேன்,

உழச்சு சம்பாதிச்சத இப்படி ஊதாரித்தனமா விலவெச்ச (NZ$20 per ticket!!) படத்துக்கு போகனுமான்னு ஒரு பக்கம் பட்சி சொல்லிக்கிட்டே இருக்கு,

அட போங்கடா நாமெல்லாம் ’மர’ தமிழரல்லவா

Monday, February 15, 2010

சமூக சேவை செஞ்சே ஆகணும்னு ஒத்த கால்ல நிக்கிரவங்களுக்கு

பதிவு தலைப்பே பதிவு மாதிரி இருக்கேன்னு நினைக்கப்பிடாது,

சென்னை வாழ் மக்களே, இந்த பதிவுல போய் படிச்சு பாருங்க:

http://scribes-readers.blogspot.com/2007/08/reading-session-for-visually-challenged.html

இந்த மேற்படி சேவை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறதா என்று தெரியவில்லை, எனினும் யாராவது முயற்சித்தால் அதை பற்றி எழுதவும்..

Wednesday, November 11, 2009

புதிய தொழில்நுட்பங்கள்

புதுசா கத்துக்கிட்டத முயற்சி பண்ணி பாக்கலாமேன்னு இந்த் பதிவு. இந்த பிடிஎஃப் கோப்பை எப்படி வலையில் இணைக்கிறதுன்னு தேடினப்ப இந்த நண்பர் விளக்கியிருந்தாரு. சரி நாம பெற்ற இன்பம் மத்தவங்களுக்கும் உபயோகப்படட்டுமேன்னு இங்க பதிஞ்சு வெக்கிறேன்.

மேலும் இந்த மர்ஃபியின் விதிகள் மிக சுவாரசியமாக இருப்பதால், அதுவும் ஒருத்தர் தமிழில் மொழிபெயர்த்து கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பு (நன்றி திரு S. ரத்தனகிரி) அதை இங்கே உங்களுக்காக:
மர்ஃபியின் விதிகள்





நேரம் கிடைக்கிரப்ப படிச்சிட்டு உங்களுக்கு பிடிச்ச விதிகள பின்னூட்டத்துல கொடுக்கலாம்..

Tuesday, October 27, 2009

நமது பள்ளியின் வலைத்தளம்

டிவிஎஸ்-ன் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே தளத்தில் இணைத்து, அதில் பழைய மாணவர்களும் (Alumni) இணைந்து/ பகிர்ந்து கொள்ள வசதி எற்படுத்தியுள்ளார்கள். அதை இங்கே சென்று பார்க்கலாம். முடிஞ்சா இதிலும் இணைந்துகொள்ளுங்க மக்கா.

TVS Forum-ல் நமது இந்த வகுப்பறைகு தொடுப்பு கொடுத்துள்ளேன்.

நாம் செய்ய நினைக்கும் சேவையை பள்ளி நிர்வாகத்தினரையும் கலந்தாலோசித்து செய்ய முடியுமா? இந்த தளத்தை அதற்காக பயன் படுத்த முடியும் என்று தோன்றுகிறது.

தல நேரம் கிடைக்கும் போது இதைப்பற்றி மேலும் தகவல் சேர்க்க முடியுமா?

Wednesday, October 14, 2009

ஒரு பள்ளியை பற்றி

பாரதி, வ. உ.சி, டி.வி. சுந்தரம் ஐயங்கார், புதுமைபித்தன், பி.ஸ்ரீ (தினமணி ஆசிரியர்) கர்நாடக இசை பாடகர் சடகோபன் இவர்களுக்குள் உள்ள ஒரு ஒற்றுமை என்ன?

இவர்கள் அனைவரும் திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் (MDT)ஹிந்து உயர்நிலை பள்ளி, மாணவர்கள். இப்படி ஒரு பள்ளியா என ஆச்சர்யபடவைக்கும் பல புகழ் பெற்றவர்களை உருவாக்கியது தனிப்பெரும் பெருமை.

இந்த பள்ளியை பற்றி இதில் படித்தவர்கள் பற்றி பல சுவையான நிகழ்வுகள் உண்டு. பி.ஸ்ரீ என்னும் பிச்சு ஸ்ரீநிவாச்சாரி ஒரு பன்முக வித்தகர். ஐம்பது அறுபதுகளில் தினமணியில் பணியாற்றி பின்பு ஆனந்த விகடனிலும் எழுதியவர்.

ஒரு முறை மெய்யியல் பற்றிய விவாதத்தின் போது, ஒரு தமிழர் உப்புமாவை பற்றி விவேகானந்தருக்கு எப்படி விளக்கினார் என்றால் உப்புமா என்பது சக்கரைக்கு பதில் உப்பு சேர்த்த கேசரி எனலாம். இது போலவே மெய்யியல் என்பது தெரியாததை தெரிந்ததை வைத்து உணர வைக்கும் கலை என்ற மிக அழகான விளக்கத்தை கேட்ட அந்த பள்ளி தலமை ஆசிரியர் பி.ஸ்ரீக்கு `மெய்யியல் ஆசான்` என ஒரு பட்டம் வழங்கினார்.


இந்த பள்ளியின் மாணவன் டி.வி.எஸ் ஐயங்கார் ஆரம்பித்த பள்ளியில் படித்த இப்போதைக்கு சிறு புள்ளி(ளை)களாகிய நாம்,
நம்மில் எவர் பெறும் புள்ளியாக ஆவாரோ??

அப்துல் சொன்னது போல் ’பெறும் புள்ளியாக’ கனவாவது காண்போம்..

Wednesday, October 7, 2009

அசரீரி..

இதனால் (எனக்கு) என்ன பயன்?

இந்த வகுப்பறைனால, பதிவெழுதறதுனால, அஞ்சலுக்கு பதில் போடரதால...

எதாவது லாபம் இருந்தால்தான் நாம் எதையுமே செய்ய சிறு வயது முதல் நம்மை பழக்கி விட்டார்கள். இந்த பழக்கம் நம்முடன், நாம் மண்ணுக்குள் செல்லும் வரை, நிழல் போல் கூடவே வரும் போலிருக்கிறது..

சில ஞாபகப மூட்டல்கள்:


நான் தாமு, லெச்சு, ஜெயந்தி நால்வரும் முன்பே போனில் பேசியதுபோல் நமது புதிய கூட்டணி எதாவது ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும் என்ற கருத்தையொட்டி இந்தவருடம் நம்மால் முடிந்தளவு பள்ளிசெல்லும் குழந்தைகளுக்கு books & Notebooks வழங்கலாம் என்றுள்ளோம். இந்த விஷயம் எல்லோராலும் ஏற்கப்பட்டது என்றே நான் நினைக்கிறேன். யாரால் என்ன முடிந்ததோ அந்தாளவு funds குடுக்கலாம். ( NRIs please note this). லக்ஷ்மணன் சொன்னபடி ஒரு charity account open செய்தபின் இந்த பணி தொடரும்.

ஏப்ரல்ல இப்படி சவுண்டு விட்டோமா அதுக்கும்முன்னாடி இப்படியும் வாய்ஸ் விட்டோம்..

கழக கண்மணிகளுக்கு சற்றும் இளைத்தவர்கள் நாம் இல்லை.


சரி சில நாட்டு நடப்புகளை பார்ப்போம்

அம்மா கேக்குறாங்க: இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை அளிப்பதால் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது?


அரியலூரில் டைனசோர் முட்டை கண்டுபிடிப்பு

உள்ளுர் மக்கள் முட்டை வேட்டையில் இறங்கி அந்த ஏரியாவையே துவம்சம் செய்வதாக பெரியார் பல்கலைகழக பேராசிரியர்கள்/ஆராய்ச்சி மாணவர்கள் வருத்தப் படுகிறார்கள்.

அறிவுப் பசி அண்ணாசாமி: இதுல ஆம்லெட் செய்ய முடியுங்களா?

Tuesday, September 29, 2009

ஏன் எழுதவேண்டும்???

எனக்கென்ன பயித்தியமா?

நான் எழுதும் பதிவையோ இல்லை அஞ்சலையோ யாரும் படிக்கவில்லை அல்லது படித்தாலும் பின்னூட்டமோ பதிலோ எழுதவில்லை என்றால் நான் எழுதுவதை நிறுத்திவிட வேண்டுமா?

கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லனும்னா, வாழ பிடிக்கலேன்னா மூச்சு விடுறத நிறுத்திக்கோ என்பது போல அல்லவா?

என்னை பொறுத்த வரை வலை (Internet) என்பது நீங்கள் கொடுத்தால்தான் திரும்ப பெற முடியும். Give to get.



பி கு: இதுக்கு பதில் எல்லாம் எதிர் பார்கவில்லை.

Friday, August 7, 2009

விஞ்ஞானமும்-மதமும்

இந்த இறை நம்பிக்கையை பற்றிய ஒரு சுவாரசியமான ஒரு கட்டுரை இந்த மாத Physics Worldல் படித்தேன், சரி யாம் பெற்ற இன்பம்னு இங்க பதிஞ்சு வைக்காலாம்னு..

அந்த கட்டுரையில் Robert விஞ்ஞானத்தை ஒரு செயலாக்கம் அல்லது செயலியாகவோ (process) இல்லை ஒரு நம்பிக்கையாகவோ கொள்வதற்கும் மதங்களை அதே மாதிரி ஒரு செயலியாகவோ இல்லை நம்பிக்கையாகவோ கொள்வது என வைத்து ஒரு 2 x 2 அணி (matrix)ல் ஒட்டுமொத்தமாக இப்படி கொள்கையுள்ளவர்களை அடக்கிவிட்டார்:

Courtesy :Robert P Crease, Physics World.

இதில் நீங்கள் எதாவது ஒரு கட்டத்தில் இருந்துதான் ஆகவேண்டும். மேலும் அவர் எடுத்த கருத்தாய்வில் வாசகர்களின் பதில் இப்படி இருந்தது (நேரமில்லாததால் அதை அப்படியே ஆங்கிலத்தில் உள்ளபடி): (மொத்தம் 505பேரின் பதில்களிலிருந்து)

1 I am an atheist who sees no place at all for religion in the universe — 114 responses (22.6%)

2 I am a non-believer, but I think religion and science can coexist because they each deal with separate aspects of the universe — 153 responses (30.3%)

3 I am a religious person who thinks science and religion can coexist because they each deal with separate aspects of the universe — 81 responses (16.0%)

4 I am a religious person who thinks that science and religion are different ways of looking at the same thing. My faith enhances my appreciation of science — 91 responses (18.0%)

* Other — 66 responses (13.1%)

ஒன்னு மாத்திரம் தெளிவா இருக்கு உலகத்துல மதத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்:

1,2ம் ம் மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் 52.9%

3,4ம் மதத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் 34%

ஒரு காலத்துல மதங்கள் கூட காணாமல் போகலாம் ஆன இன வேறுபாடு எப்போது மறையும்??

உதாரணத்துக்கு சமீபத்துல ஒபாமா, ஹாவார்டு பேராசிரியர் கேட்ஸ்சுக்கும் காவல் அதிகாரி க்ரெளலிக்கும் அளித்த பீர் பார்டி. (சிவா இது பத்தி பின்னூட்டத்துல எழுதுவான்னு ஒரு பட்சி சொல்லுது).

என்னதான் ஒபாமா அமெரிக்காவுக்கு ஜானதிபதியானாலும் இன வேறுபாடு இப்படி பீர் பாட்டி வெக்கர அளவுக்கு இருக்கு.

Monday, July 27, 2009

சுரேஷின் - கேள்வியும் பதிலும்

1. சமீபத்தில் எப்போது மன்னிப்பு (sorry) கேட்டாய்? இல்லை கேட்டிருக்கலாம் என்று பின்பு தோன்றிய சம்பவம்?

மிக சமீபத்தில் கேட்டது ஒரு முதுநிலை பட்ட வகுப்பு மாணவியிடம். SQUID எனப்படும் மிக நுண்ணிய அளவு காந்த சக்தியை அளக்கும் உபகரணத்தை உபயோகிக்க வேண்டி அதில் ஏற்கனவே அந்த மாணவி செய்து கொண்டிருந்த பரிசோதனை அளவையை (Test measure) நான் ஸ்டாஃப என்பதால் அதை பாதியில் நிறுத்தி என்னுடைய சோதனையை தொடங்கி வைத்தேன். இந்த ஸ்குவிட் என்பது இயங்குவதற்கு விலை அதிகமாகும் ஒரு உபகரணம். இதனை இயக்க திரவநிலையாக்கப்பட்ட நைட்ரஜனும், ஹீலியமும் தேவை. இதில் திரவ ஹீலியம் ஒரு லிட்டருக்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 250 மேல் ஆகும் . ஒரு நாளைக்கு கிட்டதட்ட 10-20லிட் ஒரு சோதனை ஓட்டத்துக்கு ஆகும். அதனால் இந்த உபகரணத்தை சும்மா வைத்திருக்க முடியாது. நான் சென்று பார்த்த போது முந்திய ஓட்டம் அதிகாலை 4 மணிக்கு முடிந்து அடுத்த சோதனை ஒட்டம் துவங்குதற்காக காத்துக்கொண்டிருந்தது. மணி காலை 11 ஆகிவிட்டிருந்தது. இந்த பெண்ணை காணவில்லை. சரிதான் இன்று வரவில்லை போல என அவளுடையதை நிறுத்தி என்னுடையதை தொடங்கிவிட்டேன். ஒரு அரை மணி கழித்து இந்த பெண் வந்து நிற்கிறாள், என்னிடம் மன்னிப்பு கேட்டு. என்னடா விஷயம் என்றால், காலையில் பல் வலி, அதனால் பல் மருத்துவரிடம் போக நேர்ந்தது, அதான் தாமதம். தான் இன்னொரு ஆராய்ச்சி மாணவரிடம் இது பற்றி போன் செய்து சொன்னதாக கூறினாள். அந்த நபர் என்னிடம் சொல்லவில்லை. எனக்கு நான் செய்தது தவறாக பட்டது. தவறு என்னுடையதுதான், உன் பரிசோதனையை நிறுத்தும் முன்பாக நான் விச்சாரித்திருக்க வேண்டும். மன்னித்து விடு என்றேன். அந்த பெண் ஐய்யோ நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கனும் நீங்க ஸ்டாஃப் ஆச்சே, நான் தான் உங்களுக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும் என்றாள். போகட்டும் என்று அப்போதுதான் துவங்கிய என் பரிசோதனையை நிறுத்தி (terminate) நீ உபயோகித்துக்கொள் என்று சொன்னேன். ஒரு பெரிய புன்னகையுடன் பல நன்றிகள் சொன்னாள். சில சமயம் சீனியர் என்கிர இறுமாப்பில் தவறுகள் நடந்துவிடுவதை எண்ணி வெட்கப்பட்டேன்.

பிறகு நம் வகுப்பு தியாகராஜனிடம் இது பற்றி விளக்க வேண்டாம் என நினைக்கிறேன். மனைவியிடம் மன்னிப்பு கேட்க்க யோசிப்பதேயில்லை. சில சமயங்களில் பையனை கோபித்துக் கொண்டு பின்பு மன்னிப்பு கேட்கலாமா வேண்டாமா என்று உள் மன போராட்டமும் பட்டதுண்டு. எனினும் மன்னிப்பு நாக்களவில் இல்லாமல் ஆத்மார்த்தமாக் இருந்தால் உங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும்.

2. தேர்தலில் ஓட்டு போட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் போடவில்லை என்று விளக்க முடியுமா? அப்படி ஓட்டு போடாத போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீங்கள் விமர்சிப்பது சரியா?

உலக சரித்திரத்தில் ஜனநாயகம்தான் ஆக சிறந்த ஆட்சி முறை என்பது இப்போது நாம் கண்கூடாக காண்பது. இந்த ஜனநாயகத்தின் உயிர்நாடி போன்றது தேர்தல். ஜனநாயக முறை உள்ள எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் நுட்பமாக பார்த்தால் குறைந்த சதவிகித மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்களே மீதி இருக்கும் பெரும் சதவிகித மக்களை ஆளும் உரிமை பெறுகிறார்கள். ஆக பணபலம் கொண்ட சக்திகள் தங்களுக்கு ஏற்ற ஆட்சியாளர்களை அமைக்க முடிந்த அளவு முயற்சி செய்வார்கள். இப்போது இந்தியாவில் ஜாதி அடிப்படையில் பல கட்சிகள் கூட்டணிகள் என்று ஆகிவிட்டதால், சிந்திக்கும் பலரும் ஓட்டு போடாமல் ஒரு ஓரமாக இருந்து கொண்டு இப்படி நடக்கிறதே அப்படி நடக்கிறதே என்றால் தவறு யாருடையது? பட்டியலில் பேர் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ளவதை பற்றி நாம் அக்கறை கொள்வதேயில்லை. எனக்கென்னவோ சில நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் (Mandatory voting) கட்டாய ஒட்டுரிமை முறையை கொண்டுவர வேண்டுமோ என்று தோண்றும். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் சாத்தியமில்லை. பின்நாளில் சாத்தியமாகலாம். மதுரையில் கல்லுரியில் படிக்கும் போது ஒரே ஒரு முறை சட்டமன்ற தேர்தலில் பழங்காநந்த்தம் தொகுதிக்காக பாணை சின்னத்தில் போட்டியிட்ட ஒரு சுயேட்சைக்கு ஓட்டு போட்டதுதான் என் முதலும் இதுவரை கடைசியும். 23 ஓட்டுக்கள் பெற்று டெபாசிட் இழந்த அந்த சுயேட்சை, யார்ரா இந்த கேனையன் என்று யோசித்திருக்க கூடும்.

நியுசி வந்த பின் நடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில் லேபருக்கு ஓட்டு போட்டது கடைசி. இப்பவோ அப்பவோ என இருக்கும் யுக்கேயில் அநேமாக அடுத்த வருடம் தேர்தல் நடக்கும் வாய்ப்பிருக்கிறது. பார்ப்போம் நமக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று. இந்த நாடுகளில் ஒருவர் புதிதாக நாட்டில் வசிக்க வந்தால் மிக முக்கியமாக் செய்வது ஓட்டாளர் பட்டியலில் உங்கள் பெயரை பதிவது. வீட்டு முகவரிக்கு கடிதத்துக்கு மேல் கடிதமெழுதி பதிவு செய்யாமல் விடமாட்டர்கள்.


3. கடவுள் நம்பிக்கை உண்டா?

மனிதனின் மிக தொன்மையான கண்டுபபிடிப்புகளில் ஒன்று கடவுள் அல்லது நம்மை மீறிய ஒரு சக்தி. வளரும் போது வீட்டில் பெற்றோர் மூலம் நமக்கு வந்து சேரும் பல ஞானங்களில் இந்த கடவுள் பக்தியும். யோசித்து பார்த்தால் நம்முடைய பல பழக்க வழக்கங்கள் நம் விருப்பு வெறுப்பின்றி நாம் வீட்டில் வளரும் சூழ்நிலையிலிருந்து ஒரு அனிச்சை செயல் போல் ஒட்டிக்கொள்ளும். உதாரணத்துக்கு சைவ உணவு பழக்கம். சாப்பாட்டில் முட்டை கூட சேர்க்காத சுத்த சைவமாக வளர்ந்தும், இப்போது ஆம்லெட் என்றால் மிகவும் விருப்பமாக இருக்கிறது. இதற்காக மன உளச்சல் எல்லாமா கொள்ள முடியும்? கிட்ட தட்ட கடவுள் நம்பிக்கையும் அப்படிதான். ஒரு காலத்தில் காலையில் எழுந்து குளித்து, பளிச் சென்று திருநீர் அணிந்து கண்மூடி தெரிந்த நாலு சுலோகங்களை சொல்லிவிட்டுதான் வெளியே செல்லும் பழக்கமிருந்தது. இப்போது பாழ் நெற்றி, எழுந்தோமா காலை சிற்றுண்டி சாப்பிடோமா வேலைக்கு ஓடினோமா என்று மாறிவிட்டது. இது பற்றியும் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆக இப்படி சில குல வழக்க வரம்புகள் மீறி வசதிகள் எல்லாம் செய்து கொண்ட பின்பும் பகவான் ஒன்றும் பெரிதாக் தண்டனை வழங்கிவிடவில்லையாதலால், இப்பொது பகவானையே நீ இருக்கியா இல்லியா என்று தர்க்கம் செய்யும் அளவுக்கு ஒரு (அசட்டு!!) தைரியம் வந்துவிட்டது. தர்க்க மனத்தில் இப்படி கேள்வி ஏதுமின்றி கடவுள் என்ற நம்பிக்கையை ஏற்க முடியாது. தண்ணீரில் நடப்பது, இல்லாததை கொண்டுவருதல் என எதாயாவது மாயை எதிர்பார்க்கும். இன்னும் சில இதையும் கண்கட்டு வித்தை என்று ஏற்க மறுக்கும். டார்வின் எல்லாம் ஒன்னுலேர்ந்துதான் வந்தது என்று காட்டினாலும் அந்த ஒன்னு எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அவர் போகவில்லை.ஆனால் அந்த கேள்விக்கு பதில் கடினம்.

ஆக உன்னால் உணர இயலவில்லை என்றால் அது இல்லை என்றாகிவிடுமா என்ற கேள்விதான் இன்றளவும் மனிதனை தேட வைத்து பல ஞானிகள், முக்தி அடைந்தவர்களை நாம் காண்கிறோம். இவர்களை எப்படி புரிந்து கொள்வது அல்லது நம்புவது? என்னை பொருத்த வரை எனக்கு நானேதான் தேடிக்கண்டுகொள்ள வேண்டும். The Guru is in you.


4. வழகத்திகலிருந்து மாறுபட்டு எப்போதாவது எதையாவது புதிதாக முயற்சித்தது உண்டா?

எதையும் ஒரு முறை என்பது எனக்குள் இருக்கும் குருகுருப்பு. தீயில் விரல் வைத்து தீண்டி பார்க்கும் குணம். அதனால் அவ்வப்போது எதையாவது செய்துவிட தோண்றும். மும்பயில் இருந்த போது சும்மா trekking என்று ஆரம்பித்தது பின்பு தீவிரமாகி, பாறை ஏற்றம், trekking route marking என்று போய் அதற்கு முத்தாய்ப்பாக உத்தர்காசியிலிருக்கும் Nehru Institute of Moutaineering மூலம் 32 நாட்கள் மலையேறும் பயிற்சி மேற்கொண்டு இமய மலைத்தொடரில் இருக்கும் 18,000 அடி உயர யமுனோத்ரி மலைதொடர் (yamunotri massif) உச்சி ஏறியது என் வாழ்வில் மிக உன்னதமான நிகழ்வு. அதன் பின்பு Mt. Kanjanjunga ஏறும் குழுவில் என்னால் தேர்வு பெற முடியாமல் போனது ஏமாற்றம். இந்தியர்களுக்கு, இந்த பக்கத்து நாடுகளில் இலைமறை காய்மறையாக Armchair sportsmen என்ற நாம கரணம் உண்டு. கிரிகெட் தவிர்த்து வேறு ஏதாவது வருமா என்று கேட்பார்கள். இதற்காகவே வெற்றி தோல்வி பற்றி கவலை படாது பங்கெடுப்பதே பெரிய விஷயம் என்று இந்த வருடம் நடந்த Edinurgh Raft Raceல் பாரத்வாஹினி என்ற பெயரில் ஒரு ஓடம் செய்து நம்ம பசங்கள வைத்து போட்டியிட்டோம்.

வலது புறம் என் பையன் அநுத்தம்


ஓடம் தயாராகிரது.

துடுப்பு made my Team Manager

பாரத்வாஹினி படை


5. சமீபத்தில் எதாவது விளையாட்டில் (வீட்டுக்கு வெளியே) ஈடுபட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் விளையாட தோண்றவில்லை என்று யோசித்தது உண்டா?

விளையாட்டு என்பது நமக்குள் இருக்கும் மிருகத்தனத்துக்கு ஒரு வடிகால் மாதிரி. அதுமட்டுமல்ல ஒரு அரைமணி நேரம் விளையாடினால் கூட நாம் விளையாடும் சமயம் நம் மனம் ஒரே சிந்தனையில் இருக்கும். அதாவது கிட்டதட்ட தியானத்தில் மனதை ஒரு முகப் படுத்துவது போல உங்கள் சிந்தை தாறு மாறாக ஓடாது. நீங்கள் அடுத்த முறை விளையாடும் போது இது பற்றி யோசித்து பாருங்கள். அதனால்தான் எதாவது விளையாட்டில் ஈடுபடுவது உடல் மற்றும் மனதுக்கு மிகவும் நல்லது.

மதிய உணவு இடைவேளையில் கால்பந்து விளையாடுவது. சமீபத்தில் விளையாடியது ரஃக்பி, க்வாஷ் (Squash) மற்றும் நீண்ட நாட்களுக்கு பின்பு மரமேறியது. பள்ளி நாட்களில் பழைய TVS பள்ளி க்ரெளண்டில் இருக்கும் மரத்தில் ஏறியது என்று ஞாபகம் அதன் பிறகு இப்போது என் குழுவில இருக்கும் ஆராய்ச்சி மாணவன் உன்னால் ஏற முடியுமா என்று சவால் விட்டதால் சரி ஏறித்தான் பார்ப்போமே என்று. முடிந்தால் ஏறிப்பாருங்கள், ஒரளவு ஏறினால் கூட மனம் ஆனந்தமாகும்.

6. கடைசியாக அழுதது எப்போது இல்லை மனம்விட்டு சிரித்தது??

முந்தாநேத்து, நூடுல்ஸ்சோ இல்லை சாண்ட்விச்சோ போதும், வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் உப்புமாதான் என்று அழிச்சாட்டியமாக என்னை அந்த பெரிய சிகப்பு வெங்காயத்தை நறுக்க சொல்லிவிட்டாள். என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை கண்களில் கண்ணீர் தாரை தாரையாக...

அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவனில்லையாதலால், எப்போது அழுதேன் என்று சரியாக கூறமுடியவில்லை. ஆனால் சிரிப்பது எப்போதுமே..எதையெடுத்தாலும் காமெடிதான்...

7. என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லை கடைசியாக படித்தது (பேப்பர்னு சொல்ல கூடாது)??

தமிழ்: ஜி. நாகரஜனின் தொகுப்பு

அங்கிலம்: Van Buitenen என்ற டச்சுகாரர் சென்ற நூற்றாண்டில் ராமானுஜரின் கீதாபாஷ்யாவை டச்சு மொழிபெயர்ப்பு செய்து பின்பு அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். மிக வித்யாசமான் கட்டமைப்பு, சென்ற நூற்றாண்டு வழக்க ஆங்கிலத்திலிருப்பதால் பொறுமையாக படிக்க வேண்டியிருக்கிறது. என்ன கொடும பாத்தியா நம்ம நாட்டு மொழில எழுதின புத்தகத்துக்கு இப்படி டச்சுகாரர் வந்து உதவ வேண்டியிருக்கு? சமஸ்கிருதத்தை ஜாதி முலாம் பூசி சாகடித்துவிட்டோம். இன்னும் வேறு எத்தனை மொழிகள் காணாமல் போகுமோ??


8.உங்களுக்கு ஏதாவது தனி திறமை இருக்கிறதா??

இந்த வலை நுட்பம் வந்த பின் நான் கண்டெடுத்தது எனக்குள் இருக்கும் எழுத்தார்வம் என்று நினைக்கிறேன். ஒரு விஷயம் (வலை நுட்பம்) நடந்தா நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நான் இத திறமைன்னு நெனச்சா, அடப்பாவி இப்படி யெல்லாம் கிளம்பிட்டாய்ங்களேன்னு படிக்கர உங்களுக்கு தோனும் ஞாயம்தான், என்ன செய்யரது??

9. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் (அ) போக விரும்பும் இடம் (அ) வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்??

பிடித்த இடம் மதுரை அழகர் கோவில் மலையில் கீழிருந்து நூபுரகங்கை வரை மரங்களடர்ந்த பாதையில் குரங்குளின் சேட்டைகளை பார்த்தபடி, கொடைக்கானல்.
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள கொல்லி மலை, அங்குள்ள கொல்லி அருவி, மும்பையில் மழைக்கால மாதேரன், பீமாசங்கர், நியுசியில் தெற்கு தீபகற்பம், அதில் ஹான்மர் ஸ்ரிங்ஸ், அகரோவா, ஸ்காட்லாந்தில் ஐல் ஆஃப ஸ்கை (Isle of Skye), Inverness.

போகவிரும்பும் இடம்: உத்தர்கண்டில் உள்ள பிதோராகட், அதன் வழியே கைலாஸ் மானசரோவர், மற்றும் பூக்கள் பள்ளத்தாக்கு (Valley of flowers) முடிந்தால் அன்டார்டிகாவும், க்ளடைர் மூலம் இவரைப் போல:

Photo copyright George Steinmetz


பாலைவனமும், நார்வேயில் Prekestolen, ஸ்விஸில் Gstaat, Sils Maria., சீன பெரும் சுவரும்.....

10. வாழ்வில் சந்தோஷம் என்பது?

ஒவ்வொரு நொடியும். தத்துவார்த்தமாக, மனிதனின் இயல்பு நிலை சந்தோஷமாகவே இருத்தல், ஆனால் ஒவ்வொரு மணித்துளியிலும் அவன் சிந்தனையில் காலத்தில் பின்னும் முன்னுமாக நகர்ந்து இந்த சந்தோஷ நிலையை விட்டு அகண்டு விடுகிறான். ஒன்று கடந்த கால அனுபவத்தை நினைத்து அல்லது அனுபவத்தின் வாயிலாக எதிர்காலத்தை அனுமானித்து இப்படியாகுமோ அப்படியாகுமோ என்று இப்போது நழுவிப்போகும் நொடியை மறந்து வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை துரத்துவதிலேயே கழிந்து விடுகிறது. வீட்டில் இரவில் வெளிச்சம் இல்லை என்றாலும் நம்மால் நடந்து போய் ஸ்விட்சை போட இயலும், இப்படி கை நீட்டினால் டவல், அப்படி நகர்ந்தால் ப்ரிட்ஜ், ஒரே பாதை வழியாக நடந்து எப்போதும் அமரும் சோபாவில் அதே இடத்தில் அமர்வது, அதே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது. காலில் பெயிண்ட் அடித்து வீட்டுக்குள் நடந்து பாருங்கள், அங்கு இங்கு பிரழாமல் ஒரு வரையருக்கப்பட்ட பாதையிலேயே நடப்போம். யோசித்து பார்த்தால் எவ்வளவு இயந்திரத்தனமாக வாழ்கிறோம். ஒரு வித ஜீவனற்ற மாதிரி தோன்றுகிறது. வெளியில் எங்கும், எதிலும் இல்லை சந்தோஷம். இருந்தாலும், ஒரு நாள் பொழுதில் அத்தனை உணர்ச்சிகளையும் தவறாமல் கடைபிடித்து நாளைக்காவது சந்தோஷமா போகனும்னு உறங்கப்போகிறோம். என்றாவது அந்த `நாளை` வரக்கூடும் என்ற கனவில் கழியுது வாழ்க்கை.

Thursday, July 23, 2009

உள்ளது உள்ளபடி

வராமல் போன ஜூனாமி: ஜுலை 22 கிரகணத்துனால சுனாமி வரும் வரும் ஒரே பில்ட் அப். வலைல அத வெச்சு எச்சரிக்கை மின்னஞ்சல் சுனாமி வந்ததோட சரி. இன்னும் 123 வருஷம் கழிச்சு வேனா வந்தாலும் வரலாம் அதுனால எதுக்கும் இப்பவே ஜாக்கிரதையா இருங்க மக்களே. பீச்சு பக்கமா போர வாய்ப்பு ஏற்பட்டுதுன்னா எப்பவும் உஜார இருங்க கடல் உள் வாங்குதான்னுட்டு.


இன்னுமொரு நபர் கண்டுபிடிப்பு: வாங்க செந்தில் நாயகன். இவர்தான் நம்ம வகுப்பு மக்கள்ல முதல் மருத்துவர் அதுவும் இருதய நிபுனர். அதனால மக்களே, நாமெல்லாம் ஜெனிடிக்கலி அதிக கார்டியாக் ரிஸ்க் உள்ள தெற்கு ஆசிய பிரஜைகளாதலால் செந்திலிடம் சில சந்தேகங்கள், உபாயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, இடது மார்பு பக்கம் வலி வந்தா அத முக்காவாசி, முந்தா நேத்து சாப்பிட்ட வாழக்கா பஜ்ஜினாலயோ இல்ல பூரியோட உள்ள தள்ளின சன்னா மசாலாவோட எபஃக்டா இருக்கலாம்னு நெனச்சி பூண்டு குழம்போ இல்ல ரசமோ பண்ணி சாப்பிட்டுட்டு அடுத்த வேலய பாக்க போய்டரோம். 30 வயசுக்கு கீழ இது ஓக்கே ஆனா 40 வயசுக்கு மேல இப்படி அசட்டையா இருக்கலாமா? என்ன மாதிரி வலி வந்தா அது இருதய கோளாறுனால வர முன்னெச்சரிக்கை என்று தெரிந்து கொள்ளமுடியும்?

வெறும ECG எடுப்பது நல்லதா இல்லை tread-millல் ஓடியபடி எடுப்பது சிறந்ததா?

டாக்டர் ஆஞ்சியோ கிராம் எடுக்க சொன்னா அஞ்சி நடுங்க தேவையில்லை என்கிறார்களே சரிதானா?

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க இட்லியில் இதயம் நல்லெண்னெய் நல்லதா இல்லை வெறும் நெய்யா?

அப்படியோ அடைப்பு ஏற்பட்டால், ஆஞ்சியோ ப்ளாஸ்டியா இல்லை பைபாஸ் சர்ஜரியா? இல்ல இந்த ரெண்ட விட வேர ஏதாவது சிறந்த உபாயம் இருக்கா?

இப்படி எக்க சக்கமா சந்தேகம் இருப்பதால் செந்தில் உடனடியா வந்து வகுப்பல சேர்ந்து பதில சொல்லுப்பா..


பரீட்சை கேள்விகள்: மூணு பேருதான் பதில் போட்டு இருக்காங்க, மத்த மக்க எல்லாம் இன்னும் மோட்டு வளய பாத்து யோச்சிட்டு இருகாங்க போல பிட் அடிச்சாவது பதில சொல்லியே ஆகனும், எச்சரிக்கை.

Friday, July 10, 2009

சும்மா கிறுக்கி தள்ளு

அட டா இப்படி அடுப்புல பூன தூங்கின கணக்கா ஆகிப் போச்சே....

அட நம்ம வழக்கப்படி மிஞ்சி போனா 13 நாள் அதுக்கப்புறம் இருக்கறவங்க வேலய பாக்கனுமப்பா..அத விட்டுட்டு இப்படி மகா தவறி போனதுல ரொம்ப பீலீங் ஆயி, தல திரும்ப வாங்கன்னு கூப்டப்புறமும் இப்படி ஒரு பயலயுங் காணோமே..

எப்பவும் எழுதர மூ&*** இவனுக்கு என்னவாச்சுன்னு எனக்கு ஒரு தனி அஞ்சல் வந்தது...

என்னா பதில் போட்டேன்னாக்க:

நம்ம ஊர்ல புது வருஷம் பொறந்ததுனா அநேகமாக பத்துல ஆறு பேருக்கு ஒரு புதுவருட டைரி வந்து சேரும். எதுக்கு அந்த டைரின்னு எனக்கு பல காலம் புரிஞ்சதில்ல. என் நண்பன் வீட்டுல அவங்க அம்மா லாண்டரிக்கு துணி போடரப்ப அந்தந்த தேதில குறிச்சு எழுதிப்பாங்க இது தவிர நான் டைரிய சரியா உபோயோகப்படுத்தர யாரயும் பாத்தது இலல. அதுமாதிரி வகுப்பறை மக்களுக்கு இந்த வலைபதிவு. இதில என்ன எழுதறதுன்னு தெரியல. இதெல்லாம் சொல்லிக் கொடுக்கவா முடியும்?

ஒலகம் பெரிசு மாமேய், அதுல நடக்குது பத்தி ஒரு வரி கூடவா எழுத முடியல??

நாளக்கி (11 July 09) நம்ம தல ஏற்பாட்டுல நம்ம பள்ளிக்கூடத்துலயே +2 செட்டு மக்க எல்லாம் கூடுறாங்கோ. அட்லீஸ்ட் அத் வெச்சாவது இங்க வந்து எதையாவது எழுதுங்கப்பா.

அய்யா ஊட்டிகாரரே, இந்த ”கண்ணகள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” பாட்ட பாடின பெல்லி ராஜ் உங்க ஊர் காரராமே? ஒரு பேட்டில சொன்னாப்டி. உன் ஞாபகம் வந்தது.

சரி இப்போதைக்கு கிறுக்கரத(நம்ம சகா ஒருத்தரு இந்த தலைப்பிலேயே வல செச்சுருக்காஹ) நிப்பாட்டிக்கறேன்...

டிஸ்.கி: இப்படி எல்லாம் ஒரு பதிவ போடாட்டின்னு முனு முனுக்றவங்களுக்கு (குடி)தண்ணி சப்ளைய நிறுத்திருவோம் ஜாக்கிரத.

Monday, April 20, 2009

அன்று வந்தது..

மிக ஆவலுடன் எதிர்பார்த்த சந்திப்பு NRIக்களுக்கு ஆறிய அவலாக முடிந்து விட்டது, எனினும் நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தது சற்று ஆறுதல். வீடியோ கான்ஃபெரன்ஸ் சதிசெய்துவிட்டது. அவ்வப்போது வந்த சில சத்தங்களோடு சரி வேறு ஒன்றும் பேச முடியாது போனது வருத்தமே.

மெனக்கெட்டு வெளியூரிலிருந்து இதற்காக வந்தவர்களை பாரட்டத்தான் வேண்டும்.


காமிரா அணிவகுப்பு முடிந்த பின் சங்கீதாவில் சாப்பாடு, பின்பு என்ன நடந்தது? ஒரு புகைப்பட பதிவு போட்டால் நல்லது.

Wednesday, April 1, 2009

பொழுது போக ஒரு புதிர்

கீழே இணைத்துள்ள ஒலித் துணுக்கை கேட்டகவும். இது என்ன இசைக் கருவி என கண்டுபிடிக்க முடியுமா?


மிக ரம்மியமான அந்த இசை இங்கே


.

மலை பாம்பு எப்படி புடிக்கனும்

இன்னிக்கி காலேல BBCக்கு போனா, ஓபாமா G20 மீட்டிங்குக்கு வந்த செய்தியவிட இந்த் மலைப்பாம்பு புடி சமாச்சாரம் சுவாரசியமா இருந்ததால, அதுவும் நம்ம ஸ்நேக்பாபு வேலயாச்சேன்னு நம்ம மக்கள் எல்லோருக்கும் இங்கு சமர்பிக்கிறேன்.






பிகு: ஸ்ரீ இதே மாதிரி பாம்புதானே 19ம் தேதி கொண்டுவரதா இருக்க?

Tuesday, March 31, 2009

19 ஏப்ரல் எஜெண்டா ?

Live map-ல், வகுப்புக்கு வருவோர் இருக்கும் இடங்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. புது தில்லி (தி-அத்தான்?), நைஜீரியா(??), லண்டன்(??), ஜெர்மனி(??), நியுயார்க்(??) என்று. ஆநேகமாக வலையில் எதையோ தேடப்போக கல்தடுக்கி வகுப்பறையில் விழுந்தவர்கள் என நினைக்கிறேன்.

இந்த
Live mapஐ சொடுக்கினால் விரியும் உலகப்படத்தின் கீழ் வரும் சதவிகிதங்கள் ஒரு நாளில் உலகின் எந்தப் பகுதியிலிருந்து வகுப்புக்கு விஜயம் செய்தார்கள் என்ற புள்ளிவிவரமும், எந்த பதிவை அதிகம் பார்த்தார்கள் என்ற புள்ளிவிவரமும் கொடுக்கும்( ஜெ புரிந்ததா?)

அதனால், ஒருவார்த்தை, இல்லை ஒரு வரி பதிவை தாண்டி சற்று சுவாரசியமாக எழுதினால் நலம்.

எல்லோரும் ஏப்ரல் 19தை மிகுந்த ஆவலாக எதிர்பார்த்து இருப்பது போல் தெரிகிறது.

லீடர், அன்று என்ன செய்வதாக உத்தேசம்? ஏதேனும் நிகழ்ச்சி நிரல் உள்ளதா?

ஆனந்த பவன் மிக்ஸர், ஸ்ரீகிருஷ்ணா மைசூர் பாக்கும் பின்பு சரவணா காபியும் சொல்லிவிடவும், (எல்லோருக்கும் 40 வயதை தாண்டி விட்டதால் சக்கரையை** குறைத்து அல்லது முடிந்தால் போடாமலேயே ஆர்டர் செய்யவும்) அதாவது SKC.

குழந்ததைகள் உடன் வருவார்கள் என்பதால் நம்ம ஸ்நேக்பாபு, அவர்களை என்கேஜ் செய்வதற்காக கடிச்சா விஷமேராத இல்லை பல் விழுந்த அல்லது புடுங்கின ஸ்நேக்ஸ் (இது வேர ஸ்நேக்ஸ் மேல குறிப்பிட்டுள்ள அடையார், ஸ்ரீகி சமாச்சாரங்களுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது) கொண்டுவர இருப்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது, அவ்வ்வ்...

அப்புறம் அப்படியே எலக்சன் பத்தி பேசலாம். மருத்துவர் மறுபடி உட்டாலக்கடியாக அம்மா&கோவுக்கு மாறிவிட்டார், காப்டன் தனியாக போவது என முடிவு கட்டிட்டார், கலைஞர் கனிமொழிக்கும் குழந்த பிறந்து அதுக்கும் ஒரு பதவி குத்துட்டுதான் போவது என்ற முடிவிலிருக்கார், சூப்பர்ஸ்டார் வாய்ஸ் எல்லாம் ஓஞ்சுபோய் கைய கடிக்காம ரோபோ ஓடினா சரின்னு சைலண்ட்டாயிட்டாரு, இப்ப யாருக்குன்னு ஓட்டு போடரது?

ரொம்ம குழப்பமா இருந்தா எல்லோரும் ஓ-போடலாம்.

உங்களில் எத்தனை பேருக்கு 49-O பத்தி தெரியும்?

















**
மைசூ.பா விதிவிலக்கு

Tuesday, March 10, 2009

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்

சமீபத்தில் நான் கடவுள் படம் பார்த்தேன். அதில் போலீஸ் ஸ்டேஷன் சீனில், சிவாஜி “ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்” என்ற பாடுவார். இந்த பாடல் எப்போது கேட்டாலும் எனக்கு நான் ஏழாவதோ எட்டாவதோ படிக்கும் போது, அப்போது மதுரையில் ஓடிய வேல்முருகன் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி முதலாளியின் வாரிசு வேல்முருகன், மூக்கு குத்தியிருப்பான், நமக்கெல்லாம் சீனியர் செய்த கலாய்த்தல்தான் ஞாபகத்துக்கு வரும்.

ஒரு நாள் மதிய இடைவேளை போது, தமிழய்யா சங்கரன், ஸ்டாஃப் ரூமிலிருந்து ப்ளாஸ்க்குடன் வெளியே வந்து கைப்பிடி சுவற்றில் அதன் மூடியை வைத்து டம்பளரில் காப்பியை ஊற்றிக்கொண்டிருந்த போது, அந்த பக்கம் வந்த வேல்முருகன் என்ன தோன்றியது என தெரியவில்லை, அந்த ப்ளாஸ் மூடியை எடுத்துக்கொண்டு,

”ஐய்யா எனக்கும் கொஞ்சம்” என நீட்டினான், இதுவே கொஞ்சம் லொள்ளுதான், ஆனால்

சங்கரன் வாத்தியார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்துவிட்டு போனால் போகட்டும் என்றி காப்பியை ஊற்ற, வேல்முருகன் இன்னும் கொஞ்சம் ஓவராக போய்,

”ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன் ஏன்” என பாட ஆரம்பித்தபோதுதான், கோபப்பட்டே பார்க்காத சங்கரன் வாத்தியாரை அன்றுதான் மிக ரெளத்திரமாகப் பார்த்தேன், சாது மிரண்டால் போல. ஆனால் என்ன செய்வதென்று தெரியாமல் முறைத்து விட்டு ஸ்டாஃப் ரூமுக்குள் சென்றுவிட்டார். ஆனால் எப்போது இந்த பாட்டு கேட்டாலும் சங்கரன் தான் நினைவுக்கு வருகிறார்.


பிகு: தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட, போஜராசா, ப்யுலா, சங்கரி, ஆஷா அழைப்பும் அனுப்பியும் இன்னும் வந்து ஏன் சேரவில்லை என வகுப்பில் இருக்கும் எல்லோரும் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு இந்த தளத்தில் சேர்வதற்கு ஏதேனும் தயக்கமிருந்தால் தனி அஞ்சலில் தெரிவிக்கவும், இல்லை தொழில்நுட்ப சந்தேகமிருந்தால் இங்குள்ள எவரையும் தொடர்புகொள்ளலாம், உதவ காத்துக்கொண்டிருக்கிறோம். நட்புக்கு கைய கொடுங்கப்பா...

நட்பென்பதேயல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே