Showing posts with label Jayanthi. Show all posts
Showing posts with label Jayanthi. Show all posts

Tuesday, September 16, 2014

சும்மா மாலுக்கு போனப்ப ஒரு அப்பா பண்ணின அலும்ப பார்த்து எழுதினது

எதிரில் அமர்ந்து ஆசையாக தான் கேட்ட சாக்லேட் கேக்கை எடுக்கப் போன மூன்று வயது மகனையும், அவனை கேக்கை தொட விடாமல் கையில் ஸ்பூனையும் ஃபோர்க்கையும் கொடுத்து எப்படி சாப்பிடனும்னு க்ளாஸ் எடுக்கும் கணவன் அருணையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஸ்வேதா... சிறிது வாய்க்கு வெளியே வந்தாலும் டிஷ்யூ வைத்து தொடைத்து விட்டுதான் அடுத்து சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்...

அவன் அப்படித்தான்...

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறை, நாசுக்கு ... அதனால் ஒரு வேலையை முடிக்க தாமதமானாலும் பரவாயில்லை...

மணமான புதிதில் பைக்கில் ஏறி ஆசையாக அவன் இடுப்பை வளைத்து பிடித்தபடி அமர்ந்தவுடன், "எதுக்கு இப்ப சட்டையை கசக்கற .. பின்னால ஹேண்டில் இருக்கு அத பிடிச்சுக்கோ"

தரையில உட்காரக் கூடாது, சேர், சோபாலதான் உட்காரனும் ... எல்லா பொருட்களும் அந்தந்த இடத்தை விட்டு சிறிதும் இடம் மாறக் கூடாது... சோஃபால சிட்டிங் போஸ்ட்சர் மட்டும்தான்... கொஞ்சம் ரிலாக்ஸ்டா காலை நீட்டி சாயக் கூடாது..

"ஓ மை காட்... மாம்ஸ் என்ன பண்றீங்க" என்ற சத்தமான குரல் கேட்டு நிமிர்ந்தாள்...

அருணுடைய அக்கா மகன் ஆகாஷ்... ப்ளஸ் டூ படிக்கறான் . "மாம்ஸ் குழந்தைய ஃப்ரீயா விடுங்க" என்றவன் ரிஷபை தூக்கிக் கொண்டு போய் நன்றாக கை கழுவி விட்டு, மீண்டும் கேக் முன்னால் உட்கார வைத்து, "குட்டி பையா இப்ப கையால எடுத்து சாப்பிடு" என்றான்..

"டேய் என்னடா பண்ற, அவன் கை முழுக்க கிரீமாயிடும். அதோட முகம் சட்டை எல்லாம் கேக் ஆக்கிடுவான்.. பாக்கவே அசிங்கமா.."

"என்ன மாம்ஸ் இப்படி சொல்றீங்க, குழந்தை கேக், ஐஸ்க்ரீமெல்லாம் முகம் முழுக்க அப்பிக்கறது எவ்வளவு அழகு தெரியுமா .. ஃப்ரீயா விடுங்க மாமா.. கைய சுத்தமா கழுவி விட்டுட்டு சாப்ட வைங்க.. விளையாடற நேரத்துல விளையாட விடுங்க...
ரொம்ப மிலிட்டரி ரூல் இருந்தா லைஃப்ல எதையுமே ரசிக்க முடியாது... சரி மாம்ஸ் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க .. ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு ஸ்டடிஸ்னு ஃப்ரெண்ட்ஸ்லாம் ஒரு ப்ரேக்குக்காக இங்க மாலுக்கு வந்தோம்... இங்க உங்களப் பார்த்த உடன ஹாய் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்... பை மாம்ஸ், பை ஆண்டி, பை பை குட்டி பையா"
சிரித்தபடியே வெளியே காத்திருந்த நண்பர்களுடன் சென்று விட்டான்..

"அட இந்த சின்ன பையனுக்கு தோணினது தனக்கு தோணவில்லையே, குறந்தபட்சமாகக் கூட அருணுக்கு புரிய வைக்க நான் முயற்சிக்கவில்லயே" என்று நினைத்தபடியே கணவனை பார்த்தாள்..

அவன் அமைதியாக இருந்தான். யோசிக்கட்டும்.. தெளிவு பிறக்கும்..

Friday, March 21, 2014

பரீட்சை

சிறுகதை முயற்சி... ஆட்டோவில் ஆள் அனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...


காலை எழுந்திருக்கும் போதே ஒரே அசதி… தலை வலி. சரியாக தூங்காதது காரணமாக இருக்கலாம். முதல் நாள் கேள்விப்பட்ட ஒரு செய்தி இரவு தூங்க விட வில்லை. நேற்று, முன்பு என் வீட்டின் அருகில் குடி இருந்த பெண்மணியை பார்த்தேன்… முதலில் அவள் என்னை தவிர்த்த மாதிரி தெரிந்தது.. பிறகு நானே வலிய சென்று பேசிய பின் முதலில் தயங்கி தயங்கி பேசி பின் வீட்டுக்கு வரச் சொன்னாள்… எனக்கும் வீட்டில் முக்கிய வேலை எதுவும் இல்லாததால் அவளுடன் சென்றேன்.
அங்கே, அவளுடைய மகள் பெட் ரூம்ல தூங்கிக்கொண்டு இருந்தாள்…

நான் அவர்களை சந்தித்து நாலு வருஷம் இருக்கும். அப்பத்தான் அவ பொண்ணு பத்தாவது பாஸ் பண்ணி இருந்தாள்.. ஸ்கூல் ஃஃபர்ஸ்ட்… ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்… ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஒன்றாம் வகுப்பில் இருந்து க்ளாஸில் முதலில் வரும் பெண்தான்.
அவர்களுக்கு ஒரே பெண் குழந்தை அவள்.. கணவன், மனைவி இருவருக்கும் அவள் மட்டும்தான் உலகம். படிப்பு, படிப்பு படிப்பு…. விளயாடக் கூட அதிகம் விட மாட்டார்கள்.. அப்படியே சில சமயம் அனுமதித்தாலும், அம்மா, அப்பா கூடவே இருப்பார்கள்.. அதுவும் சமத்துக் குழந்தையாய் அம்மா அப்பாவ சொல் படி கேட்டு முதல் மதிப்பெண்ணே வாங்கி வந்தது.. அதனால் இந்த ரிஸல்ட் நான் எதிர்பார்த்ததுதான்.

அப்ப வாழ்த்தி விட்டு போன பின் இப்பத்தான் சந்திக்கிறேன்.
“என்ன… ஐஸ்வர்யாக்கு காலேஜ் இல்ல”

நான் கேட்டதுதான் தாமதம்… அந்த பெண் பெருசா அழ ஆரம்பித்து விட்டாள்.. எனக்கு ஒண்ணும் புரியவில்லை.. சத்தம் கேட்டு ஐஸ்வர்யா வெளில வந்து அவ அம்மாவ மலங்க மலங்க பார்த்துட்டு ஒண்ணும் பேசாமல் உள்ளே போய் கதவை சாத்திக் கொண்டு விட்டாள்…

எனக்கு டென்ஷனாயிடுத்து… மெதுவாக அவள் தோளத் தொட்டு, “என்ன ஆச்சு”

“நிறைய நடந்து போச்சு.. எங்க இருந்து ஆரம்பிக்கறதுன்னு தெரியல”

“முதல்ல தண்ணி குடிங்க, அப்புறம் பேசலாம்” என்று சொல்லி ஃப்ரிஜ்ஜைத் திறந்து தண்ணி பாட்டிலை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தேன்..

மட மடவென்று தண்ணிய குடிச்சுட்டு, முகத்த தொடச்சுண்டு ஆரம்பித்தாள்…

”இவள ப்ளஸ் ஒன் அதே ஸ்கூல்ல சயன்ஸ் க்ரூப்ல சேர்த்தோம்… எங்களுக்கு அவள டாக்டராக்கனும்னு ஆச… மொதல்ல க்ளாஸ் டெஸ்ட் நல்லா செஞ்சா எப்பவும் போல… குவார்ட்டர்லி எக்ஸாம்ல, ஏன்னு புரியல.. ஃபிஸிக்ஸ்ல ஃபெயில் மார்க் வாங்கிட்டா… எங்களுக்கு ரொம்ப ஷாக்கா ஆயிடுத்து.. அவளுக்கும்தான்.. நாங்க இன்னும் அதிகமா ப்ரெஷர் கொடுத்து படிக்க சொல்லிண்டே இருந்தோம்… அவளும் ராத்திரியும் லேட்டா கண் முழிச்சு, காலைலயும் சீக்கிரம்மா எழுந்து ரொம்பவே கோவாப்பரேட் பண்ணிதான் படிச்சா… என்னனு தெரியல, அவளுக்கு எப்பப்பாரு ஒரு பயம், படிச்சது மறந்துடுமோன்னு… அதே போல்தான் ஆச்சு.. ஹாஃப் இயர்லில மேத்ஸ், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ட்ரி மூணுலயும் ஃபெயில் ஆயிட்டா… நாங்க ரொம்ப ஆடிப் போயிட்டோம் என்ன பண்றதுன்னே புரியல… அதுக்குள்ள இன்னொரு ஷாக்.. அவ புஸ்தகம் கிட்ட போகவே பயப்பட ஆரம்பிச்சா.. ஸ்கூல் போகனும்ன ஒரு அழுகை.. கட்டாயப்படுத்தி ஸ்கூல் அனுப்பிட்டு, ஸ்கூல் வாசல்லயே காத்துண்டு இருப்பேன், முக்கால்வாசி நேரம் அவ ரொம்ப அழறா வந்து கூட்டிட்டு போங்கன்னு கால் வரும்… அப்படியே மார்ச் மாசம் வந்தது.. கெஞ்சி தாஜா பண்ணி கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல உக்கார்ந்து படிக்க வச்சு எக்ஸாம்க்கு ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி நானும் அவ எக்ஸாம் எழுதற ரூம் வாசல்ல போய் வெயிட் பண்ணினேன்… எக்ஸாம் கொஸ்டின் பேப்பர கொடுத்த உடனயே, பயந்துண்டு அழுதுண்டே ஓடி வந்துட்டா… அப்புறம் மத்த பரீட்சைலாம் எழுதல….
பிறகு எஜுகேஷன் கவுன்சிலர் கிட்ட அழச்சுட்டு போய் கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட்.. படிக்க பயம் குறைஞ்சுருக்கு… அவள அப்படியே ஃப்ரீயா கொஞ்ச நாள் விடுங்க.. அப்புறம் அவளே தெளிவாகி வருவாள்னு சொல்லி இருக்காங்க… அவ கூட படிச்சவங்க எல்லாம் இப்ப காலேஜ் படிக்கறாங்க.. இவளப் பாருங்க இப்படி பிரம்ம பிடிச்ச மாதிரி இருக்கா.. உங்கள கூட அடையாளம் தெரியல பாருங்க… ஒரு வருஷமா வீட்ட விட்டே எங்கயும் போகாதிருந்தேன்… இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளில தலைய காமிக்கறேன்… இவர் நடை பிணமா ஆபிஸ் போய் வந்து கொண்டிருக்கார்.”

நானும் ஸ்தம்பித்துத்தான் போனேன். சிறிது நேரம் அவளுடன் பேசி எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் சொல்லி விட்டு ஐஸ்வர்யாவை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் அவள் ரூமை பார்த்துக் கொண்டே விடை பெற்று வந்து விட்டேன்…
இரவு முழுக்க இதுவே மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் சரியான தூக்கம் இல்லை….

“என்னம்மா நாழியாச்சே எழுந்து காபி போடலயா” இவர் குரல் கேட்டு எழுந்து வேலைகளை ஆரம்பித்தேன்
சாயங்காலம் காலேஜ்ல இருந்து வந்த மகன் தயங்கி தயங்கி நின்றான்..
“என்னடா”
“வந்து….. நேத்தே செம் ரிஸல்ட் வந்துடுச்சு… “
குறுக்கே வந்த கணவர், “ இல்லம்மா நேத்தே என் கிட்ட சொல்லிட்டான்.. நீ வெளில போய்ட்டு டயர்டா வந்தியா அதான் அப்புறம் சொல்லிக்கலாம்னு…..”
நான் அவனை பார்த்து,
“சொல்லு”
“ அது…. ஒரே ஒரு பேப்பர்ல …… மட்டும் அரியர் மா”
“அதுனால என்ன கண்ணா அடுத்தாப்ல எழுதி க்ளியர் பண்ணிக்கலாம்”
என்ன ஆச்சு இவளுக்கு என்ற குழப்பத்துடன் இவரும், எஸ்கேப்பான சந்தோஷத்துடன் அவனும் இடத்தை காலி பண்ணினார்கள்.

Monday, March 3, 2014

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

எப்பவுமே ஸ்க்ரூ. ட்ரைவர பார்த்தா எனக்கு கை நமநமன்னும்.. எதாவது வீட்ல ரிப்பேர் வொர்க் இருக்கான்னு பார்த்துண்ட்டே இருப்பேன்.. பெருசா எதுவும் தெரியாது.. கழட்டித்தான் பார்ப்பொமேன்னு தோணும்.. அதுல சில சமயம் க்ளிக் ஆயிடும் .. அதனால எதாவது சரியில்லன்ன (இத வச்சு பசங்கள ஒண்ணும் சரி பண்ண முடியல) நம்மலத்தான் கூப்டுவாங்க.. வீட்ல வொயிட் வாஷ் பண்ணினதுல லாண்ட் லைன் ஒரு மாசமா வொர்க் பண்ணல.. "நீங்க எல்லாரும் ஆளுக்கு ஒரு செல் போன் வச்சுண்டு இருக்கேள் .. எல்லாரும் வெளில போய்ட்டா எனக்கு பேச இந்த போன சரி பண்ணித்தரக்கூடாதா" .... மாமியார்..
சரின்னு என்னோட திறமைய வச்சு, மாடில போய் மெயின் போஸ்ட்லேர்ந்து வர டெலிபோன் வயரயும், கீழே டெலிபோன் கிட்ட ஜாயின் ஆகிற வயரையும் மொதல்ல இணைக்கலாம் போனேன்.. கீழ போன் கிட்ட போற வயர கத்திய வச்சு கிழிச்சா அதுக்குள்ள ஆறேழு வயர்கள்.. அதுல நாலு வெள்ளை.. சரி குழப்பமே இல்லாம இருக்கட்டும்னு ஒரு பச்சை வயரையும், நீல வயரையும் மாடிலயும் கீழயும் கனெக்ட் பண்ணிட்டு பெருமையோட கீழ வந்தா, அத விட பெருமை முகத்தோட இவர் என்னயப்பார்த்து, "என்ன முடிச்சுட்டயா"
போன எடுத்துப்பார்த்தா இன்னும் உயிர் வரல...
"அதுக்குத்தான் டெலிபோன் ஆள வந்து பாக்கச்சொன்னேன்" _ மாமியார்..
நடுவில் வந்த எலெக்ட்ரீஷியனும், இதெல்லாம் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வந்து பார்க்கனும்னு சார்னு சொல்லிட்டு போய்ட்டான்...
எல்லாம் சரியாத்தானே பண்ணிணோம் ஏன் வரலைன்னு , ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், கத்தியும் கையுமா மாடிக்கும் கீழுக்கும் அலஞ்சு ஒண்ணும் நடக்கல .. இன்னிக்கி திடீர்னு ஒரு ஸ்பார்க் அடிச்சது .. மாடியில் டெலிபோன் போஸ்ட்லேர்ந்து வந்த வயர அறுந்து போய்டக்கூடாதுன்னு, ரொம்ப பாதுகாப்பா, முதலில் தனித்தனியாக ரெண்டு வயரயும் கனெக்ட் பண்ணி அப்ப்புறம் ஒட்டுமொத்தமாக எல்லாத்தயும் முறுக்கு முறுக்குனு முறுக்கி வச்சுருக்கேன்.. அத ஃப்ரீயா வீட்டு ரெண்டு வயர மட்டும் கனெக்ட் பண்ணினனா, மேட்டர் ஓவர்....
இப்ப என்ன தொல்லன்ன, டி.வி , கம்ப்யூட்டர் எது ரிப்பேர்னாலும் என்னயே தொல்ல பண்ணுவாங்க.. எப்படி சமாளிக்கறதுன்னு புரியல..

Wednesday, July 17, 2013

தென்றல்

இயற்கையின் செல்லக் குழந்தையாய்
தவழ்ந்து வந்து
மலையில் ஏறி
நதியில் நீந்தி
மரம் செடியுடன் கை குலுக்கி
பகல் நேர வெப்பம் தணித்து
எனைக் குளிர வைக்க
ஓடோடி வந்த தென்றலே

மலர்களை தழுவி வந்து
எங்கும் மணம் பரப்பி
இனிய பாடலொன்றை
இதமாய் சுமந்து வந்து
உறங்கிய என்னை தட்டி எழுப்பி
கூந்தலை வருடி
காதோடு ரகசியம் சொன்ன
எனதருமை தென்றலே....

Tuesday, July 16, 2013

கலங்காதிரு மனமே

யாரோ சொல்றாங்கனு மனம் கலங்கிடப்டாது மக்களே...
தொடர்ந்து வரும் தொல்லைகளை படித்துத்தான் ஆக வேண்டும்....
நீங்களே கலங்கி நின்னா,
நான் வேற எங்க போவேன்...


அலைகள்

ஆழ்கடல் மேடையிலே
அசைந்தாடும் நர்த்தகி போல்
நளினமாய் நடனமிட்டு
கரை தொடும் பேரலையே..

ஆழ்கடல் வீதியில்
துள்ளி விளையாடும் சிறு பிள்ளை
தாயாக கரையை எண்ணி
முத்தமிடும் பேரலையே..

ஆழ்கடல் களத்தினிலே
போரிடும் வீரனை போல்
ஆக்ரோஷமாய் சண்டையிட்டு
கரை கண்டு அமைதியான பேரலையே..

ஆழ்கடலெனும் தாய்க்கு
அடங்காது ஓடி வந்து
கரையெனும் தகப்பனுக்கு பயந்து
பின் செல்லும் பேரலையே..

ஆழ்கடல் ப்ரஞ்சத்தில்
புயலாய் ஆர்ப்பரித்து, பின்
தென்றலாய் அசைந்து வந்து, என்
பாதம் கழுவும் பேரலையே



மழை

வானமகள் விடும் கண்ணீரில்
பூமித்தாய்க்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி??


ஊனம்

நெடிதொரு கனவில்
ஆழ்கடலில் நீந்தினேன்
மலையின் சிகரம் எட்டினேன்
பாலைவனத்தில் கால் புதைய நடந்தேன்
மகிழ்ச்சியில் திளைத்தேன்
விழிப்பு வந்து
மரக்கால் தரையில் ஊனும் வரை


Monday, July 15, 2013

கவிதை மாதிரி ஒரு முயற்சி

என்னை நானே அடிக்க மாட்டேன் என்பதால் என் டைரியிலும், நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க அடிக்கனும்னு நினைக்க கூட மாட்டீர்கள் என்பதால் வகுப்பறையிலும் இதை எழுதுகிறேன்.

வானம் எனும் கடலினிலே
விண்மீன்கள் நீந்தி வர
வெண்ணிற ஓடமாக நீ
எங்கு செல்கிறாய் வெள்ளி நிலவே.

வானம் எனும் வீதியிலே
நட்சத்திர சொந்தம் தொடர்ந்து வர
ஊர்வலமாக நீயும்
எங்கு செல்கிறாய் வண்ண நிலவே

வானம் எனும் மெத்தையிலே
மேகமெனும் தலையணை மேல்
நிம்மதியாய் உறங்காமல் நீ
எங்கு செல்கிறாய் வெண்ணிலவே

வானம் எனும் சிறையினிலே
விண்மீன்கள் காவலாக
எத்தனை நாள்
அடைந்திருப்பாய் வெண்ணிலவே

ஆவலுடன் உனைக்காண இங்கு நான் காத்திருக்க
மேகத்திரையின் மறைவினிலே
கண்ணாமூச்சி விளையாட்டாய
எங்கு ஒளிகின்றாய் பிள்ளை நிலவே...


ஆட்டோ, டாடா சுமோ லாம். வீட்டு பக்கம் வரப்டாது சொல்லிட்டேன்....

Tuesday, May 7, 2013

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சியில், சில வாரங்களாக நாட்டு மக்களை மகிழ்விக்க ப்ரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

முதலில் பத்மஸ்ரீ கமலஹாசன். இந்த ஆளு அலும்பு தாங்க முடியலப்பா.
வர வர கமல் பேட்டி கூட ஹாலில் குடும்பத்துடன் பார்த்தால் நடு நடுவில் நெளிய வேண்டி இருக்கிறது. இதில் தான் நாஸ்திகன் தான் எனபதை யாருக்கு புரிய வைக்க இவ்வளவு ப்ரயத்தனம்னு தெரியல. இருந்துக்கோ.. யார் வேணாம்னு சொன்னாங்க?? வடிவேலு, நானும் ரெளடிதான் நானும் ரெளடி தான்னு சொல்ற மாதிரி… இதுல இன்னொரு காமெடி (என்னப்பா யாரோ கேஸ் போடப் போறாங்கனு சொன்னாங்க), மெட்ரோ ப்ரியா அண்ட் டிடி யால் வந்தது.
கமல் - “எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது” தொடர்ந்து, “ இந்த ப்ரியா டிடி மட்டும் அல்ல பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு என்னிடம் உள்ள ஈர்ப்புக்கு நான் நன்றிக் கடன் பற்றிருக்கிறேன், , , தொடர்ந்து நிறய கமா போட்டு பெரிய வாக்கியமா உங்கள் கற்பனைக்கு அமைத்து கமல் குரலில் சொல்லி கொள்ளவும்.

அடுத்து அரவிந்சாமி – இது கொஞ்சம் சென்சிபிலா இருந்தது. நடிகனை தாண்டி அவருடைய பண்முகம் வெளிக் கொணரப்பட்டது. நடிக்காத காலத்தில் பசங்களுக்கு கணக்கு ட்யூஷன் எடுத்ததாக சொன்னார். - “இந்த மாதிரி ட்யூஷன்லாம் என்னய சேக்கறச்ச உனக்கு தெரியாதே” - என்னுடைய மகள்...

அடுத்து நம் அனைவரின் ஃபேவரைட் மயிலு…. இப்ப இருக்கும் ஸ்ரீதேவி முகத்தில் மயிலை பொறுத்திக் கொண்டே முழு நிகழ்ச்சியும் பார்த்தேன். மூன்று முடிச்சில் 13 வயதுதான் என்ற போது மூர்ச்சை யாகித்தான் போனேன்.
இங்கு நடித்ததில் அல்மோஸ்ட் எல்லா படமும் ஹிட் கொடுத்த ஸ்ரீதேவி பார்க்க பார்க்க பேச பேச பிடித்தது.

லாஸ்ட்டா ரயிலு ராதிகா. சின்ன வயசுல பார்த்தாலே கோபம் வரும். பின்ன மயில பார்த்த கண்ணால ரயிலா….. ஆனா இப்பலாம் பிடிக்கும்
மிகவும் ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் பேச்சு. நோ நான்சென்ஸ். அப்புறம் அந்த தைரியம்.

முக்கியமா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு எழுத காரணம் ராதிகாவ பார்த்த அப்புறம்தான். ஏன் தெரியுமா. அந்த பேச்சும், ஒரு விஷயத்த சொன்ன உடன் புரிந்ததா என்ற பார்வையும், அப்புறம் எல்லாவற்றிகும் மேலாக அந்த சிரிப்பும் நம் தோழி ஒருவரை நினைவு படுத்தியது. எஸ்…. சங்கரிதான் அது. உங்கள் யாருக்காவது அப்படி தோன்றி இருக்கா??

சங்கரி, உன்னிடம் யாராவது சொல்லி இருக்கிறார்களா???

Monday, October 1, 2012

தாண்டவம்




இப்பதான் சமீபத்தில் யாரோ ஒருவர், தன்னுடய திரைக்கதையை யு டீ வீ ப்ரொடக்ஷன்ஸ் தனஞ்சயனிடம் கொடுத்ததாகவும், அதை அவர் டைரக்டர் விஜய்யை வைத்து தாண்டவமாக எடுத்து விட்டதாகவும், அதற்காக அவர் போராடி வருவதாகவும் படித்தேன்.
படத்தை பார்த்தவுடன் இந்த திரைக்கதைக்கா இவ்வளவு போராட்டம் என்று தோன்றியது.

கூடுதலாக வயசான தோற்றத்தில் உள்ள விகரம் பார்க்க பாவமாக இருந்தது. கண் தெரியாத விக்ரமிடம், ஒரு காசி, தெய்வத்திருமகன் கலந்த உடல் மொழி இருந்தது. கமலைப் போல இவனும் படுத்த ஆரம்பிப்பானோ என்ற பயம் வருகிறது.

அனுஷ்கா கொஞ்சம் ஆறுதல். டெல்லியில் கண் டாக்டராக இருக்கும் அனுஷ்காவிற்கு, தான் திருமணம் செய்து கொள்ள போகிறவர் என்ன உத்யோகத்தில் இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருப்பது அபத்தம்
சந்தானம் காமெடி கூட ரொம்ப சிரிப்பு வரல.

நாசர் ஒரு காமெடி போலிஸ். கைல ஒரு ஐ பாடை வைத்துக் கொண்டு அவர் செய்யும் இன்வெஸ்டிகேஷன் பயங்கர காமெடி.

ஜீ வீ ப்ரகாஷ் 25 வது படம்னு கொடுத்த பில்ட் அப் க்கு இசை சுமார்.

வேலை வேலை என்று இருப்பதால் நம்ம எப்ப பாரு டீல்ல விடறாங்களேனு, எனக்கும் சேர்த்து டிக்கட் எடுக்க சொன்னது பிசகு.

Sunday, September 30, 2012

உங்களுக்கு தெரியுமா??

சுரேஷின் வலைபக்கம் mounam.blogspot.com ல் இருந்து சில பக்கங்கள் போன வாரம் விகடனில்(என் விகடன்) வெளி வந்துள்ளது. உங்கள் பார்வைக்காக கீழே. மேலும் படிக்க விரும்பினால் visit mounam.blogspot.com.


மௌனம்




மதுரையைச் சேர்ந்த கிவியன் தற்போது நியூசிலாந்தில் வசித்துவருகிறார். பால்யகால அனுபவங்கள், தொழில்நுட்பம் என பரந்துபட்ட விஷயங்களைப்பற்றி தன்னுடைய வலை பூவில் (http://mounam.blogspot.com/) எழுதிவருகிறார். அவருடைய வலை பூவில் இருந்து...

சுமோ!

உடன் வேலை பார்க்கும் ஒரு ஜப்பானிய நண்பரோடு பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது சுமோ மல்யுத்தம் பற்றிப் பேசினோம். வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் மிக ஆச்சர்யமாக இருந்தன. சுமோ மல்யுத்த போட்டியில், ஜெயித்தவர் மற்ற விளையாட்டுப் போட்டிகள்போல் கையைக் காற்றில் குத்தி, பல்டி அடித்து, ஒரு குத்தாட்டம் போட்டு வெற்றியைக் கொண்டாடக்கூடாது. வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றொரு விஷயம் சற்று நம்ப முடியவில்லை. சுமோ வீரர்கள், மற்ற விளையாட்டுப் போட்டிக்காகப் பந்தயம் கட்டுவதுகூடாதாம். வெற்றியைக் கொண்டாடினார், இல்லை, மற்ற விளையாட்டுக்காகப் பந்தயம் கட்டினார் எனத் தெரிந்தால் இவர்கள் சுமோ சங்கத்தில் இருந்து ஆள் அனுப்பிவிடுவார்கள். மேலும் சுமோ வீரர்கள் கார் ஓட்டக்கூடாதாம். ஒருவேளை கார் நசுங்கிவிடும் ஆபத்து இருக்கிறது என்பதாலோ?



மற்ற விளையாட்டில் ஈடுபடுவதை அனுமதிக்காத சுமோ சங்கத்தின் விதியை, கிட்டத்தட்ட எழுதப்படாத விதிபோல இந்திய மக்கள் கடைபிடிக்கிறார்களோ என எனக்குத் தோன்றுகிறது. அதாவது, கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டே உலகில் இல்லை என்ற ஒரு மனோபாவம். ஏன் என்றால், இதே ஜப்பானிய நண்பர் என்னிடம் 'கிரிக்கெட் தவிர வேறு என்ன விளையாட்டில் உஙகளுக்கு விருப்பம் உண்டு?' என்று ஒரு கேள்வி கேட்டார். 'ஏன் அப்படி கேட்கிறீர்கள்?' என்றேன், இல்லை, நான் பார்த்த அநேக இந்திய நண்பர்கள் கட்டாயம் கிரிக்கெட் பற்றியே பேசுவார்கள் என்றார். ஒரு வகையில் இவர் சொல்வதும் சரிதான். நான் சந்தித்த பல ஐரோப்பியர்களும் இந்தியர்கள் பொதுவாக கிரிக்கெட் மட்டுமே விளையாடுவார்கள் என்ற ஒரு பொதுவான அபிப்பிராயத்தையே கொண்டுள்ளனர்.

'தல வரும் பின்னே புகை வரும் முன்னே'!

'அசல்' படத்தை ஆக்சிடெண்டா பாக்கவேண்டியதாபோச்சு. 14 வயதாகும் என் மகனை இப்படிப்பட்ட மகோன்னத தமிழ்ப் படங்கள் பார்ப்பதன் மூலம் டமிள் மொழியையும் டமிள் கல்ச்சரையும்பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் எனக் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கைவைத்து இருக்கும் என் மனைவி அவனைக் கனிணி விளையாட்டுகளுக்கு ஒதுக்கும் நல்ல நேரத்தை இந்த மாதிரி (வீணாப்போன) படம் பாக்கச் சொல்லிப் போராடி பார்க்கவெப்பாங்க. பய புள்ள தமிழ் கத்துக்கிறானோ இல்லையோ, தல ஸ்டைல்ல ஹவானா புடிக்காம இருக்கனுமேனு க்ளாஸ்கோ முருகனுக்கு நேந்துக்கிடவேண்டி இருக்கு. 'மை நேம் இஸ் கான்’ பாத்துட்டு, இடைவேளையிலே பையன் சொன்னது'' This movie will show a way for the Indian films, it is very good”' என்று.'அசல்' படம் முடிஞ்சதும் பேசிக்கொண்டு இருந்தோம். ''ஏன் இந்தியப் படங்களை இப்படி காப்பிஅடிச்சுப் படம் எடுக்காம, 'மை நேம் இஸ் கான்' மாதிரி ஒரிஜினலா எடுத்தா நல்லா இருக்குமே'' என்றான்.



என் மனைவி ''காப்பி அடிச்சா என்ன தப்பு?'' என்று ஒரு கேள்வி வைத்தாள். ''தமிழ்நாட்டுல இருக்கும் எல்லோரும் உலக சினிமா பாக்க வாய்ப்பில்ல, அப்படி இருக்கும்போது, சிறந்த ஆங்கில/வேற்று மொழிப் படத்தைக் காப்பிஅடிச்சு தமிழ்ல எடுத்தா பலரும்பாக்க வாய்ப்பு இருக்கு'’ என்றாள்.

இது ஒரு வகையில் சரி எனப்பட்டாலும் ''காப்பி அடித்ததை இந்தக் கதை, அல்லது இந்தப் படத்தில்வரும் சில காட்சிகள், எந்த வேற்று மொழி படத்தைப் பார்த்து ஃபீல் ஆகி எடுக்கப்பட்டது என்று, யாருமே படிக்க முடியாத சைசிலாவது போடலாமே'' என்றேன். ''ஆமா படத்தின் கடைசியில போடற க்ரெடிட்ஸ் யாரு படிக்கிறாங்க'’ என்றாள்.

ஆக கேள்வி மிக ஆழமானது, காப்பி அடிக்கிறதுல என்ன தப்பு? இயற்கையாகவே மனிதனின் உடலில் நகல் எடுப்பது என்பது உள்ளது. செல் பிரிவதும் DNAவும் நகல் எடுக்காவிட்டால் நம் தாத்தா மாதிரி, பாட்டி மாதிரி கண், காது, குரல், நடை, பாவனை எல்லாம் சாத்தியம் இல்லை. மனிதன் எதையுமே கற்பதும் காப்பி அடித்துதான். ஆக, ஒரு சக மனிதனின் படைப்பைப் பார்த்து இன்னொரு மனிதன் காப்பி அடித்தால் என்ன தப்பு? நல்ல கலை, கண்டுபிடிப்பு, படைப்பு எதுவானாலும் காலம் கடந்து நிற்கும். யார் செய்தது என்பது காலத்தால் முக்கியம் அற்றதாக ஆகிப்போகிறது. ஒரு வகையில் பொருளீட்டுவதும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதும் காப்பி அடிப்பதைத் தடை செய்வதாலேயே தொடங்குகிறது.

எங்கோ ஆரம்பித்து, இப்படி சோசலிஸ கொள்கைக்குக் கொடிபிடிப்பதுபோல தோன்றினாலும், ஆதார கேள்வியான காப்பி அடிப்பதில் என்ன தவறு என்பதை, 14 வயது குழந்தைக்குப் புரியும்வகையில் சொல்ல ஒரு பதில் கிடைக்கவில்லை.

பாபா ****ஷிப்!

இந்த வார இறுதியில் ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்று இருந்தபோது அவருடைய மகன் (4 வயது)படிக்கும் நர்சரி பற்றி பேச்சு வந்தது. ''ஜனநாயக தேசம்னா அதுக்காக இந்த அளவுக்கா?'' என நொந்துகொண்டார் என்னவென்று விசாரித்தால், நர்சரியில்ba ba *****sheep ரைமில் அல்லது பாட்டில் ***** என்னும் வார்த்தை இன வேறுபாட்டைக் குறிப்பதாக இருப்பதால், அதை wolf என்று மாற்றி, ba ba wolfsheep என்று சொல்லித் தருகிறார்களாம். கொஞ்சம் ஓவராகத்தான் தெரியுது. என்ன செய்ய?



இந்த சின்னப் பசங்களுக்கு என்ன தெரியும்னு இப்படி மாற்றினார்கள்? வார்த்தை அளவில் மாற்றினாலும் மனதளவில் இன்னமும் இருக்கும் இன வேறுபாட்டை அடுத்த தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு மறைமுக ஏற்பாடாக இருக்குமோ?

எப்படி என்றால் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக நாலுபேர் கூடும் இடத்தில் குழந்தையைப் பெருமையாக ''அங்கிளுக்கு பாட்டு பாடி காட்டு'’ என்று சொல்ல உடனே `'ba ba wolfsheep'` என்று அந்தக் குழந்தையும்பாட, நாங்கள்லாம் அந்தக் காலத்துல`*****`னுதான் பாடினோம் இப்ப உங்களுக்கு wolfனு மாத்திட்டாங்க என்று அந்த சின்னஞ் சிறுசுகளிடம் சொன்னா, அவர்கள் குறைந்தது பத்துக் கேள்வியாவது கேட்பார்கள். அதுக்கு விளக்கம் சொல்லப்போனா இனவேறு பாட்டுக்கான விதை அப்போதே பதிந்து விடுமே.

பி. கு:***** என்று சொல்வது சனநாயக முறைப்படி தவறு என்பதால் ***** எனக் குறிப்பிட்டிருக்கிறேன். தலை சுற்றுகிறவர்களுக்கு, காக்கையின் நிறத்தை ஆங்கிலத்தில் இட்டு வாசிக்கவும்.

ஹாரிபாட்டர் கதை!

எடின்பரோவைச் சேர்ந்த தற்கால எழுத்தாளர் ஜே. கே ரௌலிங்கைப்பற்றி எழுதாவிட்டால் ஹாரி பாட்டர் ஏதாவது மந்திரம் போட்டு அப்புறம் நான் பதிவே எழுத முடியாம போயிடக்கூடும். இல்லை, வலை பதிவெல்லாம் படிச்சு மனநோய் வந்துடும்.

எந்த ஒரு எழுத்தாளரும் இவர் அளவுக்குத் தன் எழுத்துமூலம் சம்பாதித்ததில்லை. 13 வருஷம் பின்னால் சென்று பார்ப்போம். குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, அரசாங்கம் கொடுக்கும் வாரம் 70 பவுண்டு உதவித் தொகையில், எடின்பரோவில் உள்ள காபி கடையில் ஆறிப்போன காபி குடித்துக்கொண்டு, பக்கத்தில் ப்ரோமில், மகள் ஜெஸ்ஸிகாவை வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்.



யோசித்துப்பாருங்கள்... உங்களில் எத்தனை பேருக்கு ஒரு காபி கடையில் உட்கார்ந்து எழுத முடியும்? சரி, காபி கடையில் ஏன்? இவருடைய குழந்தை ப்ராமில்வைத்து தள்ளிக்கொண்டே சென்றால்தான் தூங்குமாம். அப்படியே ஒரு காபி கடையில் நுழைந்து அங்கு உட்கார்ந்து எழுதுவது பழக்கமாகிவிட்டது. அது தவிர, எழுதும்போது பாதியில் எழுந்து சமையலறைக்குச் சென்று காபி போடவேண்டாம் பாருங்கள்.

முதல் திருமணம் முறிந்தபின் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு தற்கொலை முயற்சி எல்லாம் செய்திருக்கிறார். அந்த மனநிலையில் தோன்றிய ஒரு கருதான் டெமென்டார்ஸ் என்ற ஆத்மா இல்லாத ஒருவித ஆவிகள்.

40 வயதுக்குள் பில்லியனர் ஆன ஒரே (பெண்) எழுத்தாளர். ராபர்ட் ப்ரூஸ் மாதிரி 12 பதிப்பகங்கள் திருப்பி அனுப்பியும், விடாது 13-ம் முறையாக ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். முதன் முதலில் இவர் அனுப்பிவைத்த கதையைப் படித்தது அலைஸ் நியூடன் என்ற பத்து வயது சிறுமி. ப்ளும்ஸ்பெரி பதிப்பக சொந்தக்காரரின் மகள். தன் அப்பாவிடம் சுவாரஸ்யமாக இருப்பதாகச் சொன்னதால் அவர்1,500 பவுண்டு சன்மானம் கொடுத்து முதல் பாட்டர் கதையை ஏற்றுக்கொண்டார். ரௌலிங்கின் இன்றைய எல்லாப் புகழுக்கும் காரணமானவள் இந்த அலைஸ்.

உச்சா டெக்னாலஜி!

எடின்பரோவில் மனிதர்களுக்கு மட்டுமல்ல. Greyfriars Bobby என்கிற நாய்க்குக்கூட சிலையிருக்கிறது. இவுக, கிட்டத்தட்ட இவரோட சகா HMV நாய் மாதிரிதான். தன் எசமானர்கிட்ட அவ்வளவு விசுவாசம். எப்படினா எசமானர் இறந்து 14 வருஷம் வரைக்கும் அவருடைய சமாதியைவிட்டுப் போகவே இல்லை. எசமானர் இல்லாத இந்த நாயை விட்டுவைக்கிறது நல்லதில்ல... போட்டுத் தள்ளிடணும்னு(!!) சிலர் சொல்லி இருக்காங்க. ஆனா, ஒரு சில நல்ல மனிதர்கள் தலையிட்டு அதோட லைசென்ஸுக்கு நாங்க பணம் தரோம்; ஆனா, நாய் எடின்பரோ நகர மன்றத்தின் பொறுப்பு என முடிவு செய்தனர். அப்புறம் 1872-ல் இவர் இறந்த உடனே அவரோட எஜமானரின் சமாதிக்கு அருகேயே அடக்கம் செய்து இருக்கிறார்கள். இவரை வெச்சு புத்தகங்கள், திரைப்படங்கள் எல்லாம் வந்திருக்கு.



நாம் இந்தப் பதிவில நன்றியுள்ள நாய்களைபத்திப் பாத்தோம். ஆனா, இந்த கார் கம்பெனிக்கு நாய்ங்க அப்டிக்கா, காருமேல உக்காந்து உச்சா போறது சுத்தமா புடிக்கவே இல்ல. அதனால, புதுசா ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சிருக்காங்க. நாய் இந்தப் புது டெக்னாலஜி பொருத்திய கார்மேல உச்சா போச்சுன்னா, அந்த உச்சா வழியாக நாய்க்கு ஒரு ஷாக் அடிக்கும். இரண்டு தடவை இப்படி அனுபவப் பட்டுச்சுன்னா அப்புறம், தெனாலிராமன் பூனை மாதிரி காரைப் பாத்தாலே வால இடுக்கிட்டு ஓரமா ஓடிரும்னு இந்த கம்பெனி சொல்லுது. எனக்கென்னவோ இந்த டெக்னாலஜி நம்ம ஊர்ல ஆசாமிங்களுக்குத்தான் தேவை. நம்ம முக்கிய நகரங்கள்ள குப்பைத் தொட்டிப்பக்கம், ட்ரான்ஸ்ஃபார்மர் பின்னாடி, இண்டு, இடுக்கு இங்கே எல்லாம் இந்தச் சாதனத்தைப் பொருத்தி, உச்சா போனா, ஜிக்கு ஷாக் அடிக்கிற மாதிரி செஞ்சா, பொது இடத்துல சூச்சூ போறது குறையும்னு நினைக்கிறேன்

Friday, August 24, 2012

கிறுக்கல்

சில வருடங்கள் கழித்து படித்ததில் கிறுக்கியவை எல்லாம் சற்று சிறு பிள்ளைத்தனமாகவும் அபத்தமாகவும் தோன்றியதால் அனைத்தையும் அழித்து விட்டதில், அழிக்க (தற்போதைக்கு) மனமில்லாத இரண்டு மட்டும் வகுப்பறையில் தஞ்சம் :))

அரங்கன் உலா

ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா மற்றும் இரண்டாம் பாகமான மதுரா விஜயம் படித்தேன். புஷ்பா தங்கதுரை வேணுகோபாலனாக அவதாரம் எடுத்து நல்ல விஷயங்களை எழுதியிருக்கிறார்.

14ம் நூற்றண்டில் சுல்தானியர் படையெடுப்பின் போது அரங்கனை, பக்தர்கள் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பல அல்லல்களுக்கு நடுவே மீண்டும் அரங்கம் கொண்டு வந்து சேர்த்த சரித்திர நிகழ்வை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். முஸ்லிம் படையெடுப்பின் போது நமது பல கோவில்கள் சின்ன பின்னா படுத்தப் பட்டதைப் பற்றி சரித்திரத்தில் படித்து இருக்கிறோம். பல வருடங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்ததால் எனக்கு அரங்கனிடம் தனி பிடிப்பு உண்டு . எனக்கு மிகவும் பரிச்சயமான ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றிய நூல் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் படித்தேன். ஸ்ரீ.வே ஏமாற்றவில்லை

சுல்தானியர் படையெடுப்பை அறிந்து பிள்ளைலோகாச்சாரியார் தலைமையில் ஒரு குழுவினர் எம்பெருமானின் உத்ஸவ மூர்த்தியுடன் தெற்கே செல்கின்றனர். ஸ்ரீமான் வேதாந்த தேசிகர் தலைமையில் அரங்கனுடய மூல விக்ரகத்தை மறைத்து செங்கலால் சுவர் எழுப்பப் படுகிறது. உத்ஸவ மூர்த்தியுடன் சென்றவர்கள் காட்டு வழியாக செல்லும் போது பல இல்லல்களுக்கு ஆளாகிறார்கள். பிள்ளைலோகாச்சாரியார் வழியில் ப்ராணன் விடுகிறார். மற்றவர்கள் விக்ரகத்துடன் மதுரை சென்று அங்கு அழகர் மலையில் சில காலம் இருக்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொறு இடமாக சென்று கடைசியில் மைசூர் அருகே உள்ள மேல்கோட்டைக்குச் சென்று அங்கு 18 வருடங்கள் இருக்கிறார்கள்.
பிறகு சத்தியமங்கலம் வந்து, அங்கிருந்து சுல்தானியர்களுக்கு பயந்து மீண்டும் மேல்கோட்டை சென்று கடைசியில் திருப்பதி நோக்கி பயனிக்கிறார்கள். அரங்கனுடன் செல்பவர் எண்ணிக்கை இப்பொழுது ஐந்தாக குறைந்திருக்கிறது. அதில் மூவர் இறந்திட, ஒருவர் பிரிந்திட, ஒருவர் மட்டும் திருப்பதி மலையில் காணாமல் போய் விடுகிறார். பத்தொன்பது வருடங்களுக்கு பிறகு அவரையும் அரங்கனையும் திருப்பதி மலையிலுள்ள காடுகளில் கண்டு பிடித்து மேலும் பத்து வருடங்கள் கழித்து விஜய நகர அரசர்களின் உதவியுடன் சுல்தானியர்களை தோற்கடித்து திருவரங்கத்தை கைப்பற்றி அரங்கனை அவருடைய கோயிலில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அப்போது நூற்றியிரண்டு ப்ராயம் அடைந்திருந்த வேதாந்த தேசிகரை வரவழைத்து அவரால் மூலவருக்கு முன் எழுப்பப்பட்ட சுவரை திறக்க வைக்கிறார்கள். நித்திய பூஜைகள் அன்று முதல் தொடங்கப் படுகின்றன.

நான் சிறு வயதில் ஓடி விளையாடிய கோயில். சற்று பெரியவளானவுடன் அரங்கனின் அழகையும், கோயிலில் கொண்டாடப்படும் பல உத்ஸவங்களையும் மிகவும் அநுபவித்திருக்கிறேன். இப்போதும் வருடத்தில் இரண்டு மாதங்கள் எங்களுடைய வீதி வழியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிக்க முடியாமைக்கு வருத்தப்படுகிறேன். இந்த நூலைப் படித்து முடித்த பின் உடனே அங்கு செல்ல ஆவலாக இருக்கிறது. நான் அங்கு இருந்த வரை கூடிய வரை தவறாமல் செல்லும் உத்ஸவம் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து சமயங்களில் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பெருமாள் சன்னதிக்கு எழுந்தருள்வதும் அங்கு ஏகாந்த வீணையும், பங்குனி உத்திரத்தின் போது தாயரும் பெருமாளும் சேர்ந்து இருப்பது, யானை மற்றும் குதிரை வாஹனங்கள், தேர் (இவை மூன்றும் என் வீட்டின் வாசலிலேயே கிடைக்கும் தரிசனங்கள்).


அடுத்தது எல்லாருக்கும் தோன்றுவதுதான்....

வயது ஏறுவதை .........................



வயது ஏறுவதை உணர்ந்தேன்
ஆண்டவன் சன்னிதியில் அதை கொடு இதை கொடு
என்று கேட்ட நாட்கள் போய்
அவனுக்கு தெரியாதா நமக்கு என்ன கொடுப்பது
என்ற எண்ணம் வந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

டீன் ஏஜ் பெண்களின் எதற்கெடுத்தாலும்
க்ளுக் க்ளுக் கைப் பார்த்து, என்ன லூசுத்தனம்
என்ற எண்ணம் வந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

சாம்பார் படம் என்று சானல் மாற்றிய காலம் போய்
ஆஹா ஜெமினி படம் நல்லாருக்கே என்று
பார்க்க உட்கார்ந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

ரஜினி ஸ்டைலில் மாடி ஏறிய பின்
பத்து நிமிட ஓய்வு தேவை பட்ட போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

60 கி.மீ ஸ்பீடில் பைக்கில் போக ஆசைப்பட்டது போய்
40கி.மீ க்கே என்னதுக்கு இவ்வளவு வேகம்
என்று கேட்கும் போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

கண்ணாடியில் பார்க்கும் போது தெரியும்
நரை முடியும்
தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும்
இரு குழந்தைகளும்
அது உண்மை என்று உறுதி படுத்தின

அம்மா வீட்டுக்கு சென்ற போது
வயதான காலத்திலும்
உனக்கு பிடிக்கும்னு
கேசரி பண்ணினேன் என்று
ஆசையாக அம்மா கொடுத்த போது
மீண்டும் குழந்தையானேன்.

Sunday, May 13, 2012

ஈ ஓட்ட ஒரு பதிவு

ஈயை ஒட்டென்றால்
அதற்கொரு பதிவு கேட்கிறாய்
யோசித்து பார்த்தேன்
என்ன எழுதுவது???
ஊட்டிக்கும் போகல
இன்னொரு மீட்டுக்கும் யாரும் ஒத்துக்கல
நாட்டு நடப்பு எழுதலம்னு பார்த்தா
அது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே..
வம்பு தும்பு என்னிக்கி எழுதி இருக்கோம்:)))
சொந்த கதை எழுதினா
போரடிச்சாலும் பொறுமையா படிப்பீங்க..
ரொம்ப நல்லவங்க..............
அதுதான்....... பள்ளியிலிருந்து தொடங்கினால்
மற்றவர்களும் தொடர வசடியாக இருக்கும்
ஆறாம் வகுப்பில், "as i am suffering from fever" நு
லீவ் லெட்டர் (நுழைவுத்தேர்வுக்கு வந்த ஒரு கேள்வி)
எழுதி இங்கலீஷ் மீடியம் அட்மிஷன்...
பெரிய பள்ளி ஏற்படுத்திய ப்ரம்மாண்டம்.....
காலை ப்ரேயர் அது முடிந்து போடும் ம்யூசிக்
இண்டெர்காமில் வரும் அறிவுப்பு, சிறு சேமிப்பு வங்கி
எல்லாமே எனக்கு ஆச்சரியம்தான்.
படிப்பு பெரிய மேட்டரா தெரியல...
எதோ படிச்சு பத்தாவது முடிச்சேன்....
அதே பள்ளியில் அண்ணன் வேறு நன்றாக படித்து
என் பேரை கெடுத்தான்.......
ஏழாம் வகுப்பில் என் பரீட்சை பேப்பரை கையில் வைத்துக் கொண்டு
உன் பெரியப்பா TST தானே என்று சரோஜா டீச்சர் கேட்ட போது
உள்குத்து புரியாமல் பெருமையுடன்
ஆமோதித்தேன்.....
பத்தாம் வகுப்பில்
“நீ ஸ்ரீநிவாசன் தங்கைதானே” என்று VTN கேட்ட கேள்விக்கும்
பார்த்த பார்வைக்கும்
தூக்கில் தொங்கி இருக்கலாம்.
நாமெல்லாம் யாரு (ஸ்டடியா நின்னோமுல்ல....)
பத்தாவது ரிசல்ட் வந்த அன்று மட்டும் சற்று உதறல்..
மேல மாசி வீதி பிள்ளையார் காப்பாத்தினார்...
எழுதிக் கொண்டே போகலாம்
இது ஆரம்பம்தான்...
மற்றவர்கள் தொடர ஒரு ,

அப்பா.... ஈ போயிருக்கும்....

Monday, November 21, 2011

எங்கேயும் எப்போதும்

ரொம்ப லேட்டா எழுதறேன். ஆனால் எனக்கு இப்பதான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு படம். கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படம்.

தினமும் விபத்துகளைப் பற்றிய செய்திகளை படித்து விட்டு ச்சோ ஐயோ பாவம்”….. பாதிப்புகளுக்கு ஏற்றபடி ஒரு expression கொடுத்து விட்டு அடுத்த
வேலைக்கு சென்று விடுகிறோம்.

காரில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட இரு விபத்துகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் மற்றொன்று, என் மகளுடன் படித்த பெண்ணின் தாய். பெண்ணை பாட்டு க்ளாஸில் விட்டு விட்டு வரும் போது எதிரே காரில் வந்தவன் செய்த இதே தவறால் ஸ்பாட்ல உயிர் இழந்து விட்டாள். இரண்டு பெண் குழந்தைகள். (17 வயது மற்றும் 11 வயது). மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
வண்டிய எடுக்கவே இப்பலாம் தயக்கமா இருக்கு. எந்த கிறுக்கன் எப்படி வண்டி ஓட்டுவனோன்னு பயமா இருக்கு.

பிறந்தவர்கள் எல்லாரும் ஒரு நால் இறக்கத்தான் வேண்டும். அதற்காக இப்படி சற்றும் எதிர்பாரமல் விபத்தில் உயிரை இழப்பது கொடுமை.
மருந்துகளுக்கு ஒரு expiry date போடுவது போல் நமக்கும் பிறக்கும் போதே expiry date போட்டுத்தான் ஆண்டவன் படைக்கிறான் போல.
என்ன பிந்தயது எப்ப எப்படின்னு நமக்கு தெரிய மாட்டேங்கறது. தெரிஞ்சாலும் கஷ்டமாத்தான் இருக்கும். சுஜாதா சொன்னாப்ல, “சாகற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகம் ஆயிடும்”

Friday, August 5, 2011

கான்சர் – விழிப்புணர்வு

நம் குடும்பத்தில், நமக்கு நெருங்கிய ஒருவருக்கு வரும் போதுதான் இந்த நோயின் தீவிரம் நன்கு புரிகிறது. அது வரை ஒரு செய்தியாக அல்லது ஒரு வகையான அனுதாபத்துடன் நம்முடைய ரியாக்ஷன் முடிந்து விடுகிறது.

மருத்துவமனையில் ரேடியேஷனுக்கு காத்திருந்த வேளையில் அங்கு வரும் பல தரப்பட்ட நோயாளிகளை பார்த்த போது மனது மிகவும் பாரமாகி விட்டது.

எஞ்சினியரிங் முடித்து விட்டு கேம்பஸில் செலெக்டாகி இருக்கும் ஒரு பெண், 35 வயது மதிக்க தக்க ஒரு பெண், மூக்கில் ட்யூபுடன் ஒரு முதியவர், 25 வயது மதிக்க தக்க ஒரு பெண், சுடிதார் அணிந்த தன் மகளின் மடியில் படுத்த படி காத்திருக்கும் ஒருவர்……….

இவர்கள் அனைவரையும் விட என்னை டிஸ்டர்ப் செய்தது– ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டு ரேடியேஷனுக்கு காத்திருந்த முப்பது – முப்பத்தைந்து வயது மதிக்க தக்க ஒரு ஆண். நான் கவனித்த அந்த பத்து நிமிடங்களில், கண் இமைக்காமல் மேலேயெ பார்த்துக் கொண்டிருந்த அந்த முகத்தில் ஆயிரம் சிந்தனைகள். என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தானோ??
என்ன கொடுமை இது, வயது வித்தியாசம் பாராமல் யாரை வேண்டுமானாலும் தாக்கும் இந்த நோய்??

எப்ப வரும்? யாருக்கு வரும்? எப்படி வரும் ? என்பதெல்லாம் தெளிவாக புரியாததால், இப்பொழுது நமக்கு தேவை, இந்நோயைப் பற்றிய ஒரு விழிப்புணர்வும், பீரியாடிகல் மெடிகல் செக்கப்பும் தான். சிறிதளவு தகவல் இங்கு உள்ளது.
http://www.indg.in/health/diseases/b95bbeba9bcdb9abb0bcd-baabc1bb1bcdbb1bc1-ba8bafbcd
அதிகம் தெரிந்து கொண்டால், குழப்பமும் மன உளைச்சலும்தான் வரும்.
அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
நாற்பது வயதை கடந்த நம்மில் ரெகுலராக மருத்துவ பரிசோதனை செய்பவர்கள் எத்தனை பேர்? இங்கு பதிவு செய்தால் மற்றவர்களுக்கு மோட்டிவேஷனாக இருக்கும். நான் இது வரை போகவில்லை. வழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்,
பார்க்கலாம்……

Wednesday, January 12, 2011

பண்டிகைக் காலம்

என்னுடன் வேலை செய்யும் ஜைன மதத்தை சேர்ந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் மதத்தில் முக்கால் வாசி பண்டிகைகள் விரதம்., கடவுள் வழிபாடு மற்றும் மதம் சார்ந்த சில சாங்கியங்கள் நிறைந்ததாக இருக்கும் என்றாள். பதிலுக்கு நம் பண்டிகைகள் பற்றி கேட்டாள், என்ன சொல்றது.. நாங்கள் எல்லா பண்டிகைகளுக்கும் வித விதமாக உணவு பண்டங்கள் செய்து கடவுளுக்கு நைவேத்தியம் பண்ணி விட்டு சாப்பிடுவோம், விரதம் எல்லாம் கிடையாது என்றேன். (other aspects of the festivals apart)

நினைத்துப் பார்த்த போது சிரிப்பு வந்தது. பொங்கலில் ஆரம்பித்து (இல்லை என்றால் சித்திரை வருடப் பிறப்பில் ஆரம்பித்து) வரிசையாக எல்லா பண்டிகை வரும் போதும் முதலில் நினைவு வருவது - என்னல்லாம் சாப்பிடலாம்.

கிருஷ்ணன் ஜெயந்தி - குழந்தை அன்றுதான் பிறந்திருக்கிறது - நம் வீட்டில் அவனுக்காக முறுக்கு, தட்டை. சீடை வகைகள்.

நவராத்ரி - இன்னிக்கு என்ன சுண்டல் அல்லது டெய்லி சுண்டல்தானா, இன்னிக்கி வித்தியாசமா வேற எதாவது ஸ்வீட் பண்ணி நைவேத்யம் பண்ணலாம்.

தீபாவளி கேட்கவே வேண்டாம்.

கார்த்திகை - இந்த வருஷம் சிம்பிலா வடை, அப்பம், பொறிதான் பண்ண முடிந்தது.

இடையில் பல பண்டிகைகள் வெறும் வடை பாயசத்துடன் செல்லும்.

கொலஸ்ட்ரால் , சுகர் ஏன் வராது??

நேற்று கூட மார்கழி மாதம் 27ம் நாள். ஆண்டாள் தன்னுடைய 27 வது திருப்பாவையில்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


என்று பாடியிருக்கிறார். அதனால் கண்டிப்பாக வருடா வருடம் இந்த நாளில் கிட்ட தட்ட முழங்கை வழி வார எக்கச்சக்க நெய் விட்டு நிறைய முந்திரி போட்டு ஒரு ஹை கொலஸ்ட்ரால் சர்க்கரை பொங்கல் எங்கள் வீட்டில் செய்வோம். (நான்கு நாட்களில் official ஆக பொங்கல் வேறு வரப்போகிறது) ஆண்டாள் முதலில் பாடிய படி மார்கழி மாத ஆரம்பத்திலிருந்து நோன்பு நூற்காமல் இதை மட்டும் சாப்பிடும் போது சிரிப்பு வந்தது.

வைகுண்ட ஏகாதசிக்கு கூட ஒரு மெனு போடுவோம். இன்னிக்கு சாதமே சாப்டக் கூடாது, கார்த்தால வெண் பொங்கல், மத்தியானம் தோசை அல்லது இட்லி, அப்புறமா ராத்ரி சிம்பிலா சப்பாத்தி டால் பண்ணிக்கலாம்.


அனைவருக்கும் என்னுடய உளம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Tuesday, January 4, 2011

மன் மதன் அம்பு

டிசம்பர் லீவு விடறதுக்கு முன்னாலயே (பரீட்சை நடக்கும் போதே) அப்பாவும் பசங்களுமா சேர்ந்து ஆன் லைன் புக்கிங் கு ப்ளான்.

“அம்மா க்ரடிட் கார்ட் எடுத்துண்டு வா ஞாயித்துக் கிழம மார்னிங் ஷோ இருக்கு” கடைசி நேரத்தில் இந்த வேலைக்கு மட்டும் எப்பவும் அம்மா.

“ஏய் எனக்கு புக் பண்ண வேண்டாம், கமலஹாசன் ஏற்கனவே ஏடாகூடமான ஆளு, இதுல படம் பேரே சரி இல்லை” - நான்

“அதெல்லாம் சேர்த்து பன்ணியாச்சு, நீ இப்ப வந்து பே மட்டும் பண்ணு”

சனிக்கிழமை ராத்திரியே, “ எனக்கு கோல்ட் ரொம்ப இருக்கு ஏ.சி ல உக்கார்ந்தா ஜாஸ்தி ஆயிடும், பேசாம நீ குழந்தைகள கூட்டிண்டு போய்ட்டு வா” – என் கணவர்

நாங்க சின்ன வயசுல காலைல எழுந்து வேலை எல்லாம் முடிக்காமல் குமுதம், விகடன் கூட படிக்க மாட்டோம். (சொல்ல மறந்துட்டனே காலை 8.15 க்கு ஷோ)

கோபம் உச்சந்தலையில் ஏறினாலும் வேறு வழியில்லாமல் (ஞாயித்துக் கிழம கூட தூங்க விடாம) கிளம்பினேன்.

“மார்கழி மாசம்ன குழந்தைகள அழச்சுண்டு ரெண்டு கோயில் போய்ட்டு வருவா…………” _ மாமியாரின் நியாயமான கமெண்ட்.

நல்ல வேலை ஒரு டிக்கட் மட்டும் வேறு ரோவில் கிடைத்திருந்தது விற்க செளகரியமா. ஒரு நடுத்தர வயசு லூசு டிக்கட்ட வாங்கிண்டு நம்ம ரோ எது எது கேட்டு தொல்ல பண்ண அதுனோட ரோ வேறன்னு அனுப்பறதுக்குள்ள அப்பா……………

இவ்வளவு கஷ்டத்துக்கு பின் நல்ல வேளை கமல் ரொமான்ஸ் பண்ணி கஷ்டம் கொடுக்கல. சின்ன குழந்தைகளுக்கு தூங்கறதுக்காக கதை பில்ட் அப் பண்ணி பில்ட் அப் பண்ணி சொல்வோமே அது மாதிரி செட்ல வந்து கமலும் ரவிகுமாரும் யோசிச்சு யோசிச்சு படம் எடுத்துருக்காங்க. கமல் ரொம்ப டைம் எடுத்து யோசிச்சு படம் எடுத்தாலும் கஷ்டமாத்தான் இருக்கு. இந்த மாதிரி மொக்க காமெடி படம் எடுக்கறத எப்ப நிறுத்தப் போறாங்கன்னு தெரியல. த்ரிஷா எப்பொழுதும் போல் டோட்டல் வேஸ்ட். மாதவனும் சங்கீதாவும் பரவாயில்லை.

ஆஸ்கார் பெறப்போகும், பத்மஸ்ரீ உலக நாயகன் தயவு கூர்ந்து நல்ல தரமான படங்கள் தந்தால் புண்ணியமாகப் போகும்.

Wednesday, September 29, 2010

தினமும் முடியாவிட்டால்
வாரத்தில் ஒரு நாள்,
மாதத்தில் ஒரு நாள்
இல்லை இல்லை
வருடத்தில் ஒரு முறையாவது
வகுப்பறைக்கு வரலாமே…..
பாடம் படிக்க வேண்டாம்
பரிட்சை எழுத வேண்டாம்
அனுபவத்தை மட்டும் பகிரலாமே…
நாட்டு நடப்பு
அயோத்தி தீர்ப்பு முதல்
எந்திரன் ரிலீஸ் வரை
எதுவும் பேசலாம்
பார்த்த மனிதர்கள், படித்த புத்தகம்
ஏதாவது ஒரு விஷயம்
இல்லாமலா போகும்
பல முறை அழைத்தும்
பலர் வருவதில்லை
நாம் எழுதக் கற்றுக் கொள்ள
இலவசமாக இதை விட
சிறந்த வாய்ப்பு
கிடைப்பது அரிது
யாரும் வரவில்லை
என்றாலும்
வகுப்பறை என்றும் திறந்தே இருக்கும்
புதியதாக வருபவர்களாவது
எழுதுவார்கள் என்ற
நம்பிக்கையுடன்…..

Thursday, August 19, 2010

தனக்கேற்ற அங்கீகாரம் தன் நாட்டில் இல்லையென
தன் மண்ணை பிரிந்து பிற மண்ணில் வாழ்பவர்கள்
இரண்டு, மூன்று, ஐந்து வருடங்கள் என அவரவர் வசதிக்கேற்ப
தாய் நாட்டு விஜயம்.
வரும் நேரம், தான் விட்டு சென்றது போல்
தன் நாடு இல்லையென வருத்தம்
மாற்றங்கள் பல தேடி மண் மாறி சென்றவர்கள்
மாற்றம் இங்கு வரும் நேரம் மனம் வருந்துவது ஏன்?
மாற்றங்கள் நிறைந்தது தானே நம் வாழ்க்கை
வலையும் அலை(பேசி)யும் இல்லை என்றால்
ஒரு நாள் சென்றிடுமா?
மாற்றம் இல்லையெனில்
அமெரிக்காவில் இருந்து கொண்டு
அமைந்தகரையில் நம் வீட்டு விசேஷ ஏற்பாடுகளை
கவனிக்க முடியுமா?
மாற்றங்கள் இல்லாது நம் வளர்ச்சி ஏது?
மாற்றத்தை வரவேற்போம்

Tuesday, July 20, 2010

தமிழில் பெயர்ப்பலகை

இப்ப நம்ம ஊர்ல எல்லா கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு பிறகு நிறைய கடைகளில் தமிழிலும் பெயர் எழுதி வைத்திருக்கிறர்கள். சிலர் ஆங்கிலத்தை அப்படியே தமிழ் படுத்தி எழுதியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, Bakery பேக்கரியாக மாறி இருக்கிறது. சிலர் அதை ரொட்டி கடை என்றும் சிலர் அடுமனை என்றும் போட்டிருக்கிறார்கள். நல்ல வேலை தமிழில் மட்டும் என்று உத்தரவு போடவில்லை. அடுமனை என்றால் நமக்கு என்ன புரியும். கடைல இருக்கற பொருட்களை வைத்து புரிந்து கொள்ளலாம்.

பல வருடங்களுக்கு முன் நாங்கள் ஒரு முறை ஹோட்டல் (உணவு விடுதின்னு வருதா பாரு) சென்றபோது (என் பையனுக்கு 4 வயது இருக்கும்) அவன் மெனு கார்டை முழுவதுமாக பார்த்து விட்டு எனக்கு சமோசா என்று ஆர்டர் பண்ணினான்.

”இங்க அது கிடைக்காது” – நான்.

“இதுல போட்ருக்கு” – அவன்.

“அட இங்க பாருங்க குழந்த எழுத்து கூட்டி மெனு கார்ட்ல இருக்கறத படிச்சுட்டான்”- பெருமை பொங்க நான்.

“எப்படிடா செல்லம் படிக்க கத்துண்ட”.

அவன் பதில் சொல்லாமல் மெனு கார்டின் பின் புறம் இருந்த சமோசா படத்தை காண்பித்தான்.

இன்றய நடைமுறையில் நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை தெரியாமல் அல்லது நினைவில் வராமல் இருக்கிறோம். தாய்மொழிப் பற்றெல்லாம் தாண்டி, நமக்கு நடை முறைக்கு எது செளகரியமாக இருக்கிறதோ அதைத்தான் நாம் விரும்புகிறோம். எல்லாம் பழக்கம்தான் காரணம்.

இன்னும் சில பெயர்ப் பலகைகள் .

Hot chips - சூடான சீவரி

Sriram Enterprises – ஸ்ரீராம் வணிக நடுவம்

Durga Agency - துர்கா முகமையாளர்

தமிழை வளர்க்க பல வகையில் முயற்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் தமிழ் வழிக் கல்வி அறிமுகமாகி உள்ளது. அதற்கும் 150 இடம் வரை நிரப்ப பட்டுள்ளதாக கேள்வி. இது எவ்வளவு தூரத்துக்கு வொர்க் அவுட் ஆகும்னு புரியல. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Monday, June 28, 2010

செம்மொழி கவிதைகள்

இணையத்தில் செம்மொழி மாநாட்டில் நமது கவிஞர்களது சில கவிதைகளை படிக்கும் பாக்கியம் ஏற்பட்டது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

வைரமுத்து

மேற்கு தொடர்ச்சி மலை மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுகள்
தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள்
ஏ ஆகாயமே! உன் நட்சத்திரங்கள் காணோமென்று இரவோடு முறையிடாதே
எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடி விட்டன
நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்கு?.
முத்தமிழறிஞரே மூத்த முதலமைச்சரே.
செம்மொழி தங்கமே, எங்கள் செல்லச் சிங்கமே
தாய்த் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர்.
இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்
உங்கள் உயரத்தை நீங்களே தாண்டுகிறீர்கள்
வள்ளுவர் கோட்டம் வனைந்தீர்கள்
அன்னை தமிழ் நாடே அண்ணாந்து பார்த்தது
வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அனைத்து இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது
செம்மொழி மாநாடு கண்டீர்கள், அனைத்து உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கிறது
எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்துள்ளீர்கள் உங்கள் உள்ளங்கை விரிந்தால்
சூரியன் குவிந்தால் கூட்டணி கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்
உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உழவன் சேர்ந்தான்
உழைப்பாளி சேர்ந்தான்
அன்னத்தாய் சேர்ந்தாள்
பொன்னுத்தாய் சேர்ந்தாள் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்
உன் திட்டம் தெரியும் எனக்கு
காப்பீட்டு திட்டத்தில் தமிழ் தாயை சேர்க்கத்தானே இந்த தடபுடல் மாநாடு
கலைஞர் கனவு கண்டால் தமிழ்நாடு முதல் நாடு.
நீங்கள் பெருங்கவிஞர், நானுமொரு கவிஞன்
ஜனநாயக தர்மத்தில் அமெரிக்க ஜனாதிபதி இரு முறை தான்
மேற்கு வங்கத்தின் செந்தலைவன் ஐந்து முறை தான் தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்
ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை
நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது-ஆறு காவிரி ஆறு
உங்கள் தந்தை முத்துவேலர் எண்ணிப்பார்த்தால் எழுத்துகள் ஆறு
முதலெழுத்தோடு சேர்த்தால்-உங்கள் முழுப் பெயரின் மொத்த எழுத்து ஆறு
நீங்கள் பிறந்த மாதம் ஆறு. பெற்ற பிள்ளைகள் ஆறு
அரசாளப் போவதும் ஆறு. இது வரலாறு
வயது தடுக்கிறதே என்று நீங்கள் வருந்தாதீர்கள்
தளபதியிடம் சொல்லி காப்பீட்டு திட்டத்தில் கட்டாயம் சேர்த்து விடுகிறோம்
வீடு கொடுத்தீர்கள். வீடென்றால் அது என்ன வெறும் வீடா?
தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு
அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு
தியாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு
ஆண்ட பெரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே
ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.
மாநாடு கூட்டுவதற்கு பெருத்த நிலம் பல உண்டு
கோவையை போல ஒரு பொருத்த நிலம் உண்டா?
ஐவகை நிலமும் கூடிக் கிடந்து கும்மி கொட்டும் ஊரல்லவோ கோவை
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
இங்கே குறிஞ்சி உண்டா? உண்டு.
ஆனைமலை ஒன்று அருலிருப்பதால் முல்லை உண்டா? உண்டு.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.
நீலகிரி சிகரங்கள் முகில் கொண்ட எப்போதும்முக்காடுபோடுவதால் காடுண்டு-அதனால் முல்லையுண்டு.
மருதமுண்டா? உண்டு.
ஒரு மலையே இங்கு மருதமென்று நிற்பதனால் மருதமுண்டு.
நெய்தல் உண்டா?. உண்டு.
நெசவுக்கு தலைநகரம்-இங்கு நெய்தல் இல்லாமலா?
பாலை இல்லையே என்று பார்க்கிறீரா?. பாலை உண்டு நோக்குமிடந்தோறும் நூற்பாலை உள்ளதால் பாலையும் உண்டு.
நெய்தல் உண்டு. கோவைக்கு கடல் உண்டா?
இல்லை.. கடல் இல்லா ஊருக்கு கடல் கொண்டு வரத்தானோ கலைஞர் இனக்கடல் திரட்டி ஜனக்கடல் கூட்டினார்?
செம்மொழியாமே செம்மொழி சிவப்பு மொழியோ என்று கேலி பேசும் ஒரு கீழ்க் கூட்டம்
நேற்று ஒரு தாயொருத்தியை பார்த்தேன்
மாநாடு பார்க்கவா என்றேன்
என் மகன் பார்க்க என்றாள்
ஏன் என்றேன்
என் மகுடத்தில் செம்மொழி என்ற மாணிக்கம் சூட்டிய மகனுக்கு நனைந்த கண்ணோடு நன்றி சொல்ல என்றாள்

வாலி

’புணைந்தான் அய்யா ஒரு பாட்டு அது செம்மொழி மாநாட்டின் மையநோக்கு. அந்த மையநோக்குப்பாடல் ஈர்த்தது வையநோக்கு.


ஆனால் என் அருமை நண்பர் சோ’வுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யநோக்கு. அது அய்ய நோக்கு அல்ல..அய்யர்நோக்கு. (அரங்கத்தில் கரவொலி-கலைஞர் குலுங்கி சிரித்தார்)
அதுவும் வையநோக்கையும் வையும் நோக்கு’’

‘’ஆலயம்தானே சாமிகளுக்கான இடம்; சாமிகள் மாறலாமா தடம்; இதை உணர்ந்து இப்பொது அறிவாலயத்தில் வந்து அமர்ந்து கொண்டன முத்துச்சாமி, சின்னச்சாமி எனும் இரு சாமிகள்; இதற்கு காரணம் இரு மாமிகள்!’’

பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது. ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது. அப்பூ... எப்பூ?’’

‘’புடவை கட்டிய பூ”


தமிழன்பன்

”பிறக்காத குழந்தைக்கும் தொட்டில் கட்ட அவரிடம்தான் இதயம் இருக்கிறது. இருப்பும் இருக்கிறது.
கலைஞர் என்பது தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்.
அவர் இதயம் எப்போதும் கசங்காத புடவையோடுதான்.
அவரின் கபால களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட
ஈர பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால் கோபாலபுரத்து வீட்டை கொடையாக தர முடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்
அந்த அதியமான் ஏமாந்திருப்பார்.
அவருடைய சங்கப் பாடல்களுக்கெல்லாம்
கலைஞர் சபாநாயகர் ஆகியிருப்பார்.
அந்த நெல்லிக்கனி இன்று இருந்தால் கலைஞர் யாருக்கு கொடுப்பார்?
வாலிக்கா? வைரமுத்துவுக்கா? அப்துல் ரகுமானுக்கா? இல்லை எனக்கா?.
எங்களில் யாருக்கும் தரமாட்டார்.
தமிழ்த்தாய்க்கு தந்து அவள் தின்று துப்பிய விதைகளை
ஒவ்வொரு கவிஞரின் வீட்டு வாசலிலும் விதைத்து வைப்பார்.


வித்தகக் கவிஞர் பா விஜய், தமிழ் தாய்க்கு முகவரி கோபாலபுரம், இன்ஷியல் மு.க
என்ற ரேஞ்சில் படித்த கவிதை எனக்கு முழுவதுமாக நினைவும் இல்லை. இங்கு இணயத்திலும் கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் பதியவும்.

வாழ்க, வளர்க தமிழ்....

Tuesday, February 16, 2010

நம்ம க்ளாஸ் மக்கள் சார்பா

ரொம்ப வருஷம் முன்னால

வீட்டுல அனுப்பி வச்சாங்க (துரத்தி விட்டாங்க)

வேற வழியில்ல போனோம்

மறுபடியும் வகுப்பறைக்கு வான்னா

என்ன அர்த்தம்?

சர்தான்னு உள்ள வந்தா

ப்ளாக் போர்டும் பெஞ்சும்

பயமுறுத்துது

பத்தாத்துக்கு கேள்வி வேற கேக்கிறாய்ங்க

சரின்னு பதில் சொன்னா

சும்மா போகாம

நாலு பேரு கமெண்ட் அடிக்கிறாய்ங்க

வேணாம் சாமி

நா பாட்டுக்கு என் இடத்துல

நீ உன் இடத்துல

வருஷத்துல ரெண்டு மூணு தரம்

முடிஞ்சா பாத்துக்கலாம்

பேசிக்கலாம்

ஃபோட்டோ எடுத்துக்கலாம்

என்ன சொல்றீங்க……………