
எப்பூடி, சும்மா தெலுங்கு பட போஸ் மாதிரி நமமுக்கு ரெண்டு பக்கமும் வில்லன்கள் நிக்கிறாய்ங்க பாரு.
படத்தில் வலப்புறம் நிற்பவரை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நம்ம துரைசாமிதான். இந்தப் படம் மும்பையில் மாதேரன் என்னும் மலைப்பகுதியில் எடுத்தது. ஒரு நல்ல மழை நாள் அதாவது ஜுலை-யோ ஆகஸ்ட் மாதமோ, அப்பப்ப நாம ட்ரெக்கிங் மலையேறுதல் என்று போவது போல் இந்த இருவரும் எங்களையும் அப்படி கூட்டிட்டு போ-ன்னு சொன்னதால மாத்தேரன் கிளம்பிப் போனோம். அப்போது துரை பாரீஸ் இன்ஜியரிங்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வருடம் 1994.
சரி இடது புறம் இருப்பவரை யாருக்காவது அடையாளம் தெரிகிறதா?
கொஞ்சம் கஷ்டம்தான்.
தற்சமயம் ”முதல்வர் மகாத்மா” என்னும் படத்தை இயக்குபவரும் பெருந்தலைவர் காமராஜ்ரை பற்றி கிங் மேக்கர் காமராஜ் என்ற படத்தையும் இயக்கியவருமான அ. பாலகிருஷ்ணன். இவர் எனக்கு நண்பரானது சுவாரஸ்மான பின்னனி. மும்பையில் மாதா மாதம் கணையாழி வாங்குவது வழக்கம். கணையாழி, மும்பையில் மாட்டுங்காவில் உள்ள தமிழ் கடைகளில் மட்டுமே கிடைக்கும். ஒரு முறை அப்படி வாங்கிய போது உள்ள ஒரு சிறு அச்சடிக்கப்பட்ட காகிதம் அதில்:
நீங்கள் மும்பை தெருக்களில் ஜமுனாவை தேடியிருக்கிறீகளா? தி.ஜாவை வாசிப்பவரா? கந்தசாமிபிள்ளையை போல் யாரையாவது சந்தித்திருக்கிறீர்களா?
லா.சா.ரா வின் த்வனியில் காணாமல் போனவரா? அப்படியானால் நாம் மாதத்தில் ஒரு நாள் சந்தித்து இது பற்றி பேசலாம், விவாதிக்கலாம்,
இல்லக்கியப் பாலம் என்ற அமைப்பு உங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறது வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு போத்தார் கல்லூரியில் சந்திப்போம்
என்ற தூண்டில் மூலம் இலக்கிய பாலத்துக்கு போன போது ஏற்பட்ட நட்பு, பின்பு வாரா வாரம் சந்திக்கும் அளவுக்கு கூடிப்போனது. இப்படியே போய் நாமும் படமெடுத்தால் என்ன என்று பல கதைகளை விவாதிப்போம்.
இப்படி ஒரு கிறுக்காக சுற்றிக்கொண்டிருந்த போது சுவாரசியமான ஒரு சம்பவம். மாதுங்காவில் தமிழ் படம் வெளியாகும் ஒரே தியேட்டர் ஆன அரோராவின் சொந்தக்காரர், தியேர்டருக்கு அருகிலேயே ஒரு வீடியோ காடையும் வைத்திருந்தார். ஒரு ஞாயிறு மதியம் நாங்கள் அந்த கடையில் இருந்த போது உள்ளே ஒருவர் வந்தார். பார்ப்பதற்கு மிகச் சாதரண மாக இருந்தார். அப்போது அவரை அவ்வளவு தெரியாது. யாரென்று பாத்தால் மணிரத்தினம்!!. அந்த கடைக்கு அடிக்கடி வந்து போவாராம். இப்படி திடீரென்று வந்ததால் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அட படத்துல ஒரு சான்ஸாவது கேட்டிருக்கலாம்.
அதன் பின் பாலா சென்னையிலிருந்து படத்தை வாங்கிவந்து வெளியிடலாம் என யோசனை சொன்னார். அந்த முயற்சியாக சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் அப்போது வந்த அமைதிப்படையை அதன் தயாரிப்பாளர் மணிவண்ணனிடமிருந்து சுமார் ரூ. 40,000 க்கு வாங்கி அரோராவில் வெளியிட்டோம். அதில் வசூல் ஆனது ரூ. 95,000!! முதல் முயற்சியிலேயே லாபம் என்பது போதை. அதைத் தொடர்ந்து பாலா நாமே படமெடுப்பது என முடிவு செய்து மும்பையிலிருந்து சென்னை கோடம்பாக்கத்துக்கு அருகே குடியேறினார்.
அதன் பின் கோடம்பாக்கத்தின் மறுபக்கம் எப்படிப் பட்டது என்பதை அனுபவப்பட்டு, அவர் ஒரு வழியாக காமரஜரை வெளியிட்டபோது 5 வருடங்கள் கழிந்துவிட்டது. கதையை வைத்துக்கொண்டு இவர் வாய்ப்பு கேட்டு போன ஒரு தயாரிப்பாளர்களில் சந்திரசேகரும் உண்டு. ஆமாம் இளையதளபதி விஜயின் அப்பாவேதான். கதையை கேட்டுவிட்டு நல்லா இருக்கு, ஒரே கண்டீஷன் விஜயை வைத்து எடுக்க வேண்டும் என்பது. அப்போது விஜய் வளர்ந்து வரும் நடிகர், ஸ்டெப் கட்டிங் வைத்த கிராப் வைத்துக் கொண்டு பார்க்க தாமாஷாக இருப்பார். பாலா முடியாது என்று வந்துவிட்டார். இப்போதும் மசாலா படமியக்குவதில்லை என்ற தன் கொள்கையில் மாறாமல் இருக்கிறார். அதானாலேயே அடையாளம் தெரியாமலும் இருக்கிறார். பத்தாம் வகுப்பு முடித்த கையோடு மும்பைக்கு வந்து, இப்படி வரும் எல்லோருக்கும் அடைக்கலம் தரும் தாராவியில் ஊருகாய் வியாபரத்தில் தொடங்கி இப்போது கோடம்பாக்கத்தில் முதவர் மகாத்மவுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.
அந்த முதல் லாப போதையில் நானும் வேலையை விட்டு விட்டு சென்னைக்கு வருகிறேன் என்று கூறியவனை, தடுத்து உன்னைப் போல் படித்த மக்கள் அங்கு வர வேண்டாம், இப்படியே உன் வாழ்கையை தொடரு என்று பாலா அறிவுறுத்தாவிட்டால், வெற்றி பெற்றால் மட்டுமே முகவரி கிடக்கும் கோடம்பாக்கதில் அடையாளமே இல்லாமல் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேன்.
 
 
2 comments:
ஆட்டோகிராப் சேரன் படுவது போல் ஒரு நல்ல வாழ்கை தொகுப்பு. காசு கொடுத்து கணையாழி வாங்கி படித்து தமிழ் வளர்தமைக்கு நன்றி, நான் ஏனோ கணயாழி படித்ததில்லை, ஆனால் சல வருடுங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கனையழியன் கடைசி பக்கங்கள் என்று ஒரு தொகுப்பு பற்றி சொன்னார். அதை வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன், ஆனால் மருந்துவிட்டன், இதன் மூலம் அந்த முயற்சியை மீண்டும் துவக்க வேண்டும்.
அது என்னமோ தெரியவில்லை நம்ம ஊரு மக்கள் அனவரையும் சினிமா ஒரு காந்தம் போல் இழுக்குது.
நீயும் கோடம்பாக்கம் சென்றிருந்தால் பல பட்டங்கள் பெற்று பிரபலமாகி, முதல்வராகி Specturm ஊழல் புரிந்திருப்பாய்..
”தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு நல்ல கதாசிரியர்/இயக்குனரை இழந்து விட்டது”:))
கணையாழி என்றவுடன் நினைவுகள் நாங்கள் டி.வி.எஸ் நகரில் இருந்த காலத்துக்கு சென்று விட்டது. கணையாழி அறிமுகம் அப்ப தான் - உபயம் அண்ணா (காஞ்சிபுரம் இல்லை) நான் ஏழாவது படிக்கும் போது என்று நினைக்கிரேன். முக்கால்வாசி எனக்கு புரிந்ததில்லை ஆனாலும் மனம் தளராமல் ஒவ்வொரு இதழையும் படிப்பேன். (அந்த கால கட்டத்தில் தன்னம்பிக்கை சற்று அதிகம்)
அம்பை, கரிச்சான் குஞ்சு போன்ற பெயர்கள் அறிமுகம். அதில் அம்பையின் கதைகளை விரும்பி மீண்டும் படித்திருக்கிறேன். (ஓரிரு வருடங்களில் கொஞ்சம் முன்னேறி விட்டேன்). அப்பதான் தி.ஜா வின் நளபாகம் தொடராக வந்த ஞாபகம். அப்ப படித்த போது ரொம்ப புரியல. பல வருடங்களுக்கு பிறகு எல்லாரும் சொல்கிறார்களே என்று தேடி தேடி படித்த மரப்பசு, மோகமுள் மற்றும் நளபாகம் அவ்வளவு ரசிக்கவில்லை. வக்கிரம் மேலோங்கி இருப்பதாகப் பட்டது. இன்னும் சில வருடங்கள் கழித்து படித்து பார்த்தால் அதை தாண்டி இருக்கும் எதோ ஒன்றை புரிந்து கொள்ள முடியலாம் முடியாமலும் போகலாம். கடைசி பக்கங்கங்களூக்கு முன்பே சுஜாதா அறிமுகம். கேட்டால் சிரிப்பு வரும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது சுஜாதாவின் காயத்ரி தினமணி கதிரில் தொடராக வந்தது. முதல் வாரம் ஒரு எச்சரிக்கையுடன், “ வீட்டில் சிறுவர்கள் இருந்தால் இந்த தொடரை படிக்க அநுமதிக்க வேண்டாம்”. உடனே கண்ணும் கருத்துமா மூணு வாரம் வரைக்கும் படிச்சேன். நம்ம படிக்க கூடாத மாதிரி ஒண்ணுமே இல்லையேனெ தோண்றி படிப்பதை நிறுத்தி விட்டேன். அதற்கு பிறகு நிறைய கணேஷ் வசந்த் கதைகள். இன்று வரை சுஜாதா அலுக்க வில்லை. சமீபத்தில் சுஜாதாவின் கடைசி பக்கங்கள் முழு புத்தக வடிவில் படித்து ரசித்தேன்.
இடையில் படித்த சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி எல்லாம் ஒரு ஸ்டேஜ்ல போர் அடிக்க ஆரம்பித்தது.
கலைஞரின் பொன்னர் சங்கர் படித்து அது நன்றாக இருந்த்தாக நினைவு. (பல வருடங்கள் ஆகி விட்டது)
பொழப்பு இப்படி புஸ்தம் பின்னாடி ரொம்ப போனதால (சினிமா, ரேடியோவில் பாட்டும் உண்டு) படிப்புல ரொம்ப வராம போய்ட்டோமோனு தோணும். ரெண்டு படகுகளில் ஒரே சமயத்தில் பயணிக்கும் சாமர்த்தியம் இல்லாமல் போனது.
Post a Comment