Sunday, September 30, 2012

உங்களுக்கு தெரியுமா??

சுரேஷின் வலைபக்கம் mounam.blogspot.com ல் இருந்து சில பக்கங்கள் போன வாரம் விகடனில்(என் விகடன்) வெளி வந்துள்ளது. உங்கள் பார்வைக்காக கீழே. மேலும் படிக்க விரும்பினால் visit mounam.blogspot.com.


மௌனம்




மதுரையைச் சேர்ந்த கிவியன் தற்போது நியூசிலாந்தில் வசித்துவருகிறார். பால்யகால அனுபவங்கள், தொழில்நுட்பம் என பரந்துபட்ட விஷயங்களைப்பற்றி தன்னுடைய வலை பூவில் (http://mounam.blogspot.com/) எழுதிவருகிறார். அவருடைய வலை பூவில் இருந்து...

சுமோ!

உடன் வேலை பார்க்கும் ஒரு ஜப்பானிய நண்பரோடு பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது சுமோ மல்யுத்தம் பற்றிப் பேசினோம். வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் மிக ஆச்சர்யமாக இருந்தன. சுமோ மல்யுத்த போட்டியில், ஜெயித்தவர் மற்ற விளையாட்டுப் போட்டிகள்போல் கையைக் காற்றில் குத்தி, பல்டி அடித்து, ஒரு குத்தாட்டம் போட்டு வெற்றியைக் கொண்டாடக்கூடாது. வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றொரு விஷயம் சற்று நம்ப முடியவில்லை. சுமோ வீரர்கள், மற்ற விளையாட்டுப் போட்டிக்காகப் பந்தயம் கட்டுவதுகூடாதாம். வெற்றியைக் கொண்டாடினார், இல்லை, மற்ற விளையாட்டுக்காகப் பந்தயம் கட்டினார் எனத் தெரிந்தால் இவர்கள் சுமோ சங்கத்தில் இருந்து ஆள் அனுப்பிவிடுவார்கள். மேலும் சுமோ வீரர்கள் கார் ஓட்டக்கூடாதாம். ஒருவேளை கார் நசுங்கிவிடும் ஆபத்து இருக்கிறது என்பதாலோ?



மற்ற விளையாட்டில் ஈடுபடுவதை அனுமதிக்காத சுமோ சங்கத்தின் விதியை, கிட்டத்தட்ட எழுதப்படாத விதிபோல இந்திய மக்கள் கடைபிடிக்கிறார்களோ என எனக்குத் தோன்றுகிறது. அதாவது, கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டே உலகில் இல்லை என்ற ஒரு மனோபாவம். ஏன் என்றால், இதே ஜப்பானிய நண்பர் என்னிடம் 'கிரிக்கெட் தவிர வேறு என்ன விளையாட்டில் உஙகளுக்கு விருப்பம் உண்டு?' என்று ஒரு கேள்வி கேட்டார். 'ஏன் அப்படி கேட்கிறீர்கள்?' என்றேன், இல்லை, நான் பார்த்த அநேக இந்திய நண்பர்கள் கட்டாயம் கிரிக்கெட் பற்றியே பேசுவார்கள் என்றார். ஒரு வகையில் இவர் சொல்வதும் சரிதான். நான் சந்தித்த பல ஐரோப்பியர்களும் இந்தியர்கள் பொதுவாக கிரிக்கெட் மட்டுமே விளையாடுவார்கள் என்ற ஒரு பொதுவான அபிப்பிராயத்தையே கொண்டுள்ளனர்.

'தல வரும் பின்னே புகை வரும் முன்னே'!

'அசல்' படத்தை ஆக்சிடெண்டா பாக்கவேண்டியதாபோச்சு. 14 வயதாகும் என் மகனை இப்படிப்பட்ட மகோன்னத தமிழ்ப் படங்கள் பார்ப்பதன் மூலம் டமிள் மொழியையும் டமிள் கல்ச்சரையும்பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் எனக் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கைவைத்து இருக்கும் என் மனைவி அவனைக் கனிணி விளையாட்டுகளுக்கு ஒதுக்கும் நல்ல நேரத்தை இந்த மாதிரி (வீணாப்போன) படம் பாக்கச் சொல்லிப் போராடி பார்க்கவெப்பாங்க. பய புள்ள தமிழ் கத்துக்கிறானோ இல்லையோ, தல ஸ்டைல்ல ஹவானா புடிக்காம இருக்கனுமேனு க்ளாஸ்கோ முருகனுக்கு நேந்துக்கிடவேண்டி இருக்கு. 'மை நேம் இஸ் கான்’ பாத்துட்டு, இடைவேளையிலே பையன் சொன்னது'' This movie will show a way for the Indian films, it is very good”' என்று.'அசல்' படம் முடிஞ்சதும் பேசிக்கொண்டு இருந்தோம். ''ஏன் இந்தியப் படங்களை இப்படி காப்பிஅடிச்சுப் படம் எடுக்காம, 'மை நேம் இஸ் கான்' மாதிரி ஒரிஜினலா எடுத்தா நல்லா இருக்குமே'' என்றான்.



என் மனைவி ''காப்பி அடிச்சா என்ன தப்பு?'' என்று ஒரு கேள்வி வைத்தாள். ''தமிழ்நாட்டுல இருக்கும் எல்லோரும் உலக சினிமா பாக்க வாய்ப்பில்ல, அப்படி இருக்கும்போது, சிறந்த ஆங்கில/வேற்று மொழிப் படத்தைக் காப்பிஅடிச்சு தமிழ்ல எடுத்தா பலரும்பாக்க வாய்ப்பு இருக்கு'’ என்றாள்.

இது ஒரு வகையில் சரி எனப்பட்டாலும் ''காப்பி அடித்ததை இந்தக் கதை, அல்லது இந்தப் படத்தில்வரும் சில காட்சிகள், எந்த வேற்று மொழி படத்தைப் பார்த்து ஃபீல் ஆகி எடுக்கப்பட்டது என்று, யாருமே படிக்க முடியாத சைசிலாவது போடலாமே'' என்றேன். ''ஆமா படத்தின் கடைசியில போடற க்ரெடிட்ஸ் யாரு படிக்கிறாங்க'’ என்றாள்.

ஆக கேள்வி மிக ஆழமானது, காப்பி அடிக்கிறதுல என்ன தப்பு? இயற்கையாகவே மனிதனின் உடலில் நகல் எடுப்பது என்பது உள்ளது. செல் பிரிவதும் DNAவும் நகல் எடுக்காவிட்டால் நம் தாத்தா மாதிரி, பாட்டி மாதிரி கண், காது, குரல், நடை, பாவனை எல்லாம் சாத்தியம் இல்லை. மனிதன் எதையுமே கற்பதும் காப்பி அடித்துதான். ஆக, ஒரு சக மனிதனின் படைப்பைப் பார்த்து இன்னொரு மனிதன் காப்பி அடித்தால் என்ன தப்பு? நல்ல கலை, கண்டுபிடிப்பு, படைப்பு எதுவானாலும் காலம் கடந்து நிற்கும். யார் செய்தது என்பது காலத்தால் முக்கியம் அற்றதாக ஆகிப்போகிறது. ஒரு வகையில் பொருளீட்டுவதும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதும் காப்பி அடிப்பதைத் தடை செய்வதாலேயே தொடங்குகிறது.

எங்கோ ஆரம்பித்து, இப்படி சோசலிஸ கொள்கைக்குக் கொடிபிடிப்பதுபோல தோன்றினாலும், ஆதார கேள்வியான காப்பி அடிப்பதில் என்ன தவறு என்பதை, 14 வயது குழந்தைக்குப் புரியும்வகையில் சொல்ல ஒரு பதில் கிடைக்கவில்லை.

பாபா ****ஷிப்!

இந்த வார இறுதியில் ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்று இருந்தபோது அவருடைய மகன் (4 வயது)படிக்கும் நர்சரி பற்றி பேச்சு வந்தது. ''ஜனநாயக தேசம்னா அதுக்காக இந்த அளவுக்கா?'' என நொந்துகொண்டார் என்னவென்று விசாரித்தால், நர்சரியில்ba ba *****sheep ரைமில் அல்லது பாட்டில் ***** என்னும் வார்த்தை இன வேறுபாட்டைக் குறிப்பதாக இருப்பதால், அதை wolf என்று மாற்றி, ba ba wolfsheep என்று சொல்லித் தருகிறார்களாம். கொஞ்சம் ஓவராகத்தான் தெரியுது. என்ன செய்ய?



இந்த சின்னப் பசங்களுக்கு என்ன தெரியும்னு இப்படி மாற்றினார்கள்? வார்த்தை அளவில் மாற்றினாலும் மனதளவில் இன்னமும் இருக்கும் இன வேறுபாட்டை அடுத்த தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு மறைமுக ஏற்பாடாக இருக்குமோ?

எப்படி என்றால் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக நாலுபேர் கூடும் இடத்தில் குழந்தையைப் பெருமையாக ''அங்கிளுக்கு பாட்டு பாடி காட்டு'’ என்று சொல்ல உடனே `'ba ba wolfsheep'` என்று அந்தக் குழந்தையும்பாட, நாங்கள்லாம் அந்தக் காலத்துல`*****`னுதான் பாடினோம் இப்ப உங்களுக்கு wolfனு மாத்திட்டாங்க என்று அந்த சின்னஞ் சிறுசுகளிடம் சொன்னா, அவர்கள் குறைந்தது பத்துக் கேள்வியாவது கேட்பார்கள். அதுக்கு விளக்கம் சொல்லப்போனா இனவேறு பாட்டுக்கான விதை அப்போதே பதிந்து விடுமே.

பி. கு:***** என்று சொல்வது சனநாயக முறைப்படி தவறு என்பதால் ***** எனக் குறிப்பிட்டிருக்கிறேன். தலை சுற்றுகிறவர்களுக்கு, காக்கையின் நிறத்தை ஆங்கிலத்தில் இட்டு வாசிக்கவும்.

ஹாரிபாட்டர் கதை!

எடின்பரோவைச் சேர்ந்த தற்கால எழுத்தாளர் ஜே. கே ரௌலிங்கைப்பற்றி எழுதாவிட்டால் ஹாரி பாட்டர் ஏதாவது மந்திரம் போட்டு அப்புறம் நான் பதிவே எழுத முடியாம போயிடக்கூடும். இல்லை, வலை பதிவெல்லாம் படிச்சு மனநோய் வந்துடும்.

எந்த ஒரு எழுத்தாளரும் இவர் அளவுக்குத் தன் எழுத்துமூலம் சம்பாதித்ததில்லை. 13 வருஷம் பின்னால் சென்று பார்ப்போம். குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, அரசாங்கம் கொடுக்கும் வாரம் 70 பவுண்டு உதவித் தொகையில், எடின்பரோவில் உள்ள காபி கடையில் ஆறிப்போன காபி குடித்துக்கொண்டு, பக்கத்தில் ப்ரோமில், மகள் ஜெஸ்ஸிகாவை வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்.



யோசித்துப்பாருங்கள்... உங்களில் எத்தனை பேருக்கு ஒரு காபி கடையில் உட்கார்ந்து எழுத முடியும்? சரி, காபி கடையில் ஏன்? இவருடைய குழந்தை ப்ராமில்வைத்து தள்ளிக்கொண்டே சென்றால்தான் தூங்குமாம். அப்படியே ஒரு காபி கடையில் நுழைந்து அங்கு உட்கார்ந்து எழுதுவது பழக்கமாகிவிட்டது. அது தவிர, எழுதும்போது பாதியில் எழுந்து சமையலறைக்குச் சென்று காபி போடவேண்டாம் பாருங்கள்.

முதல் திருமணம் முறிந்தபின் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு தற்கொலை முயற்சி எல்லாம் செய்திருக்கிறார். அந்த மனநிலையில் தோன்றிய ஒரு கருதான் டெமென்டார்ஸ் என்ற ஆத்மா இல்லாத ஒருவித ஆவிகள்.

40 வயதுக்குள் பில்லியனர் ஆன ஒரே (பெண்) எழுத்தாளர். ராபர்ட் ப்ரூஸ் மாதிரி 12 பதிப்பகங்கள் திருப்பி அனுப்பியும், விடாது 13-ம் முறையாக ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். முதன் முதலில் இவர் அனுப்பிவைத்த கதையைப் படித்தது அலைஸ் நியூடன் என்ற பத்து வயது சிறுமி. ப்ளும்ஸ்பெரி பதிப்பக சொந்தக்காரரின் மகள். தன் அப்பாவிடம் சுவாரஸ்யமாக இருப்பதாகச் சொன்னதால் அவர்1,500 பவுண்டு சன்மானம் கொடுத்து முதல் பாட்டர் கதையை ஏற்றுக்கொண்டார். ரௌலிங்கின் இன்றைய எல்லாப் புகழுக்கும் காரணமானவள் இந்த அலைஸ்.

உச்சா டெக்னாலஜி!

எடின்பரோவில் மனிதர்களுக்கு மட்டுமல்ல. Greyfriars Bobby என்கிற நாய்க்குக்கூட சிலையிருக்கிறது. இவுக, கிட்டத்தட்ட இவரோட சகா HMV நாய் மாதிரிதான். தன் எசமானர்கிட்ட அவ்வளவு விசுவாசம். எப்படினா எசமானர் இறந்து 14 வருஷம் வரைக்கும் அவருடைய சமாதியைவிட்டுப் போகவே இல்லை. எசமானர் இல்லாத இந்த நாயை விட்டுவைக்கிறது நல்லதில்ல... போட்டுத் தள்ளிடணும்னு(!!) சிலர் சொல்லி இருக்காங்க. ஆனா, ஒரு சில நல்ல மனிதர்கள் தலையிட்டு அதோட லைசென்ஸுக்கு நாங்க பணம் தரோம்; ஆனா, நாய் எடின்பரோ நகர மன்றத்தின் பொறுப்பு என முடிவு செய்தனர். அப்புறம் 1872-ல் இவர் இறந்த உடனே அவரோட எஜமானரின் சமாதிக்கு அருகேயே அடக்கம் செய்து இருக்கிறார்கள். இவரை வெச்சு புத்தகங்கள், திரைப்படங்கள் எல்லாம் வந்திருக்கு.



நாம் இந்தப் பதிவில நன்றியுள்ள நாய்களைபத்திப் பாத்தோம். ஆனா, இந்த கார் கம்பெனிக்கு நாய்ங்க அப்டிக்கா, காருமேல உக்காந்து உச்சா போறது சுத்தமா புடிக்கவே இல்ல. அதனால, புதுசா ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சிருக்காங்க. நாய் இந்தப் புது டெக்னாலஜி பொருத்திய கார்மேல உச்சா போச்சுன்னா, அந்த உச்சா வழியாக நாய்க்கு ஒரு ஷாக் அடிக்கும். இரண்டு தடவை இப்படி அனுபவப் பட்டுச்சுன்னா அப்புறம், தெனாலிராமன் பூனை மாதிரி காரைப் பாத்தாலே வால இடுக்கிட்டு ஓரமா ஓடிரும்னு இந்த கம்பெனி சொல்லுது. எனக்கென்னவோ இந்த டெக்னாலஜி நம்ம ஊர்ல ஆசாமிங்களுக்குத்தான் தேவை. நம்ம முக்கிய நகரங்கள்ள குப்பைத் தொட்டிப்பக்கம், ட்ரான்ஸ்ஃபார்மர் பின்னாடி, இண்டு, இடுக்கு இங்கே எல்லாம் இந்தச் சாதனத்தைப் பொருத்தி, உச்சா போனா, ஜிக்கு ஷாக் அடிக்கிற மாதிரி செஞ்சா, பொது இடத்துல சூச்சூ போறது குறையும்னு நினைக்கிறேன்

2 comments:

கிவியன் said...

ரொம்ப நன்றி, அட ஒரு செய்தியோட நிப்பட்டி இருக்கலாமே பதிவ மெனகெட்டு போட்டிருக்க வேண்டாம்,இருதாலும் ஒன்னும் பாதகமில்ல யாரும் படிச்சுட மாட்டாங்க.

இப்ப ட்ரெண்டு cut and paste-ஆ, கடந்த இரண்டு பதிவும் அதே. தய்வு செய்து தவிர்க்கவும். இரண்டு வரி எழுதினாலும் அது உன்னுடைய சொந்த சரக்காக இருக்கட்டும்

ஜெயந்தி நாராயணன் said...

வெறும் செய்தி போட்டாலோ, லிங்க் மட்டும் போட்டாலோ அதை தேடி அல்லது உள்ளே போய் படிக்க மக்கள் சோம்பல் படுவார்கள் என்பதால் கா.பே. ---- ஆளில்லாத கடைல டீ ஆத்தர மாதிரி நாமளும் எழுதி கிட்டு இருக்கோம் என்பது வேறு விஷயம். என்ன…. ஒரு நம்பிக்கை தான். இல்ல நாமளே திருப்பி சில வருடங்கள் கழித்து படித்து கொள்ள வேண்டியதுதான்.
முதலில் காப்பி பேஸ்ட் பண்ணுவதற்காகவாவது படிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கும் ஆர்வமும் பின் எழுதும் ஆர்வமும் வரலாமே என்பதற்காக தொடங்கி வைத்தேன்

என்னுடயதில் அனைத்துமே கா பே இல்லாமல் பார்த்து கொள்கிறேன்.:))