சிறுகதை முயற்சி... ஆட்டோவில் ஆள் அனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
காலை எழுந்திருக்கும் போதே ஒரே அசதி… தலை வலி. சரியாக தூங்காதது காரணமாக இருக்கலாம். முதல் நாள் கேள்விப்பட்ட ஒரு செய்தி இரவு தூங்க விட வில்லை. நேற்று, முன்பு என் வீட்டின் அருகில் குடி இருந்த பெண்மணியை பார்த்தேன்… முதலில் அவள் என்னை தவிர்த்த மாதிரி தெரிந்தது.. பிறகு நானே வலிய சென்று பேசிய பின் முதலில் தயங்கி தயங்கி பேசி பின் வீட்டுக்கு வரச் சொன்னாள்… எனக்கும் வீட்டில் முக்கிய வேலை எதுவும் இல்லாததால் அவளுடன் சென்றேன்.
அங்கே, அவளுடைய மகள் பெட் ரூம்ல தூங்கிக்கொண்டு இருந்தாள்…
நான் அவர்களை சந்தித்து நாலு வருஷம் இருக்கும். அப்பத்தான் அவ பொண்ணு பத்தாவது பாஸ் பண்ணி இருந்தாள்.. ஸ்கூல் ஃஃபர்ஸ்ட்… ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்… ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஒன்றாம் வகுப்பில் இருந்து க்ளாஸில் முதலில் வரும் பெண்தான்.
அவர்களுக்கு ஒரே பெண் குழந்தை அவள்.. கணவன், மனைவி இருவருக்கும் அவள் மட்டும்தான் உலகம். படிப்பு, படிப்பு படிப்பு…. விளயாடக் கூட அதிகம் விட மாட்டார்கள்.. அப்படியே சில சமயம் அனுமதித்தாலும், அம்மா, அப்பா கூடவே இருப்பார்கள்.. அதுவும் சமத்துக் குழந்தையாய் அம்மா அப்பாவ சொல் படி கேட்டு முதல் மதிப்பெண்ணே வாங்கி வந்தது.. அதனால் இந்த ரிஸல்ட் நான் எதிர்பார்த்ததுதான்.
அப்ப வாழ்த்தி விட்டு போன பின் இப்பத்தான் சந்திக்கிறேன்.
“என்ன… ஐஸ்வர்யாக்கு காலேஜ் இல்ல”
நான் கேட்டதுதான் தாமதம்… அந்த பெண் பெருசா அழ ஆரம்பித்து விட்டாள்.. எனக்கு ஒண்ணும் புரியவில்லை.. சத்தம் கேட்டு ஐஸ்வர்யா வெளில வந்து அவ அம்மாவ மலங்க மலங்க பார்த்துட்டு ஒண்ணும் பேசாமல் உள்ளே போய் கதவை சாத்திக் கொண்டு விட்டாள்…
எனக்கு டென்ஷனாயிடுத்து… மெதுவாக அவள் தோளத் தொட்டு, “என்ன ஆச்சு”
“நிறைய நடந்து போச்சு.. எங்க இருந்து ஆரம்பிக்கறதுன்னு தெரியல”
“முதல்ல தண்ணி குடிங்க, அப்புறம் பேசலாம்” என்று சொல்லி ஃப்ரிஜ்ஜைத் திறந்து தண்ணி பாட்டிலை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தேன்..
மட மடவென்று தண்ணிய குடிச்சுட்டு, முகத்த தொடச்சுண்டு ஆரம்பித்தாள்…
”இவள ப்ளஸ் ஒன் அதே ஸ்கூல்ல சயன்ஸ் க்ரூப்ல சேர்த்தோம்… எங்களுக்கு அவள டாக்டராக்கனும்னு ஆச… மொதல்ல க்ளாஸ் டெஸ்ட் நல்லா செஞ்சா எப்பவும் போல… குவார்ட்டர்லி எக்ஸாம்ல, ஏன்னு புரியல.. ஃபிஸிக்ஸ்ல ஃபெயில் மார்க் வாங்கிட்டா… எங்களுக்கு ரொம்ப ஷாக்கா ஆயிடுத்து.. அவளுக்கும்தான்.. நாங்க இன்னும் அதிகமா ப்ரெஷர் கொடுத்து படிக்க சொல்லிண்டே இருந்தோம்… அவளும் ராத்திரியும் லேட்டா கண் முழிச்சு, காலைலயும் சீக்கிரம்மா எழுந்து ரொம்பவே கோவாப்பரேட் பண்ணிதான் படிச்சா… என்னனு தெரியல, அவளுக்கு எப்பப்பாரு ஒரு பயம், படிச்சது மறந்துடுமோன்னு… அதே போல்தான் ஆச்சு.. ஹாஃப் இயர்லில மேத்ஸ், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ட்ரி மூணுலயும் ஃபெயில் ஆயிட்டா… நாங்க ரொம்ப ஆடிப் போயிட்டோம் என்ன பண்றதுன்னே புரியல… அதுக்குள்ள இன்னொரு ஷாக்.. அவ புஸ்தகம் கிட்ட போகவே பயப்பட ஆரம்பிச்சா.. ஸ்கூல் போகனும்ன ஒரு அழுகை.. கட்டாயப்படுத்தி ஸ்கூல் அனுப்பிட்டு, ஸ்கூல் வாசல்லயே காத்துண்டு இருப்பேன், முக்கால்வாசி நேரம் அவ ரொம்ப அழறா வந்து கூட்டிட்டு போங்கன்னு கால் வரும்… அப்படியே மார்ச் மாசம் வந்தது.. கெஞ்சி தாஜா பண்ணி கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல உக்கார்ந்து படிக்க வச்சு எக்ஸாம்க்கு ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி நானும் அவ எக்ஸாம் எழுதற ரூம் வாசல்ல போய் வெயிட் பண்ணினேன்… எக்ஸாம் கொஸ்டின் பேப்பர கொடுத்த உடனயே, பயந்துண்டு அழுதுண்டே ஓடி வந்துட்டா… அப்புறம் மத்த பரீட்சைலாம் எழுதல….
பிறகு எஜுகேஷன் கவுன்சிலர் கிட்ட அழச்சுட்டு போய் கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட்.. படிக்க பயம் குறைஞ்சுருக்கு… அவள அப்படியே ஃப்ரீயா கொஞ்ச நாள் விடுங்க.. அப்புறம் அவளே தெளிவாகி வருவாள்னு சொல்லி இருக்காங்க… அவ கூட படிச்சவங்க எல்லாம் இப்ப காலேஜ் படிக்கறாங்க.. இவளப் பாருங்க இப்படி பிரம்ம பிடிச்ச மாதிரி இருக்கா.. உங்கள கூட அடையாளம் தெரியல பாருங்க… ஒரு வருஷமா வீட்ட விட்டே எங்கயும் போகாதிருந்தேன்… இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளில தலைய காமிக்கறேன்… இவர் நடை பிணமா ஆபிஸ் போய் வந்து கொண்டிருக்கார்.”
நானும் ஸ்தம்பித்துத்தான் போனேன். சிறிது நேரம் அவளுடன் பேசி எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் சொல்லி விட்டு ஐஸ்வர்யாவை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் அவள் ரூமை பார்த்துக் கொண்டே விடை பெற்று வந்து விட்டேன்…
இரவு முழுக்க இதுவே மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் சரியான தூக்கம் இல்லை….
“என்னம்மா நாழியாச்சே எழுந்து காபி போடலயா” இவர் குரல் கேட்டு எழுந்து வேலைகளை ஆரம்பித்தேன்
சாயங்காலம் காலேஜ்ல இருந்து வந்த மகன் தயங்கி தயங்கி நின்றான்..
“என்னடா”
“வந்து….. நேத்தே செம் ரிஸல்ட் வந்துடுச்சு… “
குறுக்கே வந்த கணவர், “ இல்லம்மா நேத்தே என் கிட்ட சொல்லிட்டான்.. நீ வெளில போய்ட்டு டயர்டா வந்தியா அதான் அப்புறம் சொல்லிக்கலாம்னு…..”
நான் அவனை பார்த்து,
“சொல்லு”
“ அது…. ஒரே ஒரு பேப்பர்ல …… மட்டும் அரியர் மா”
“அதுனால என்ன கண்ணா அடுத்தாப்ல எழுதி க்ளியர் பண்ணிக்கலாம்”
என்ன ஆச்சு இவளுக்கு என்ற குழப்பத்துடன் இவரும், எஸ்கேப்பான சந்தோஷத்துடன் அவனும் இடத்தை காலி பண்ணினார்கள்.
3 comments:
அனுபவத்தின் அடிபடையிலான ஒரு கதை என நினைக்கிறேன். நல்ல முயற்சி. மேலும் பட்டை தீட்டலாம், அநேகமாக கிடைத்த நேரத்தில், வாணி ராணி பார்க்காமல், எழுதப்பட்டிருக்கலாம். அதற்காகவே பாராட்டலாம். கதையை இங்கு பதிந்ததற்கு நன்றி.
உண்மையில் நடந்ததுதான்.. சுபர்ணாவுடன் படித்த பெண்.. இந்த பசங்க மாதிரி எக்ஸ்ட்ரா அரட்டை, அலம்பல் எதுவும் இல்லாமல், நேர் வகுடெடுத்து நீளமான ரெட்டை பின்னலுடன், நெற்றியில் வீபூதியுடனும் (இப்ப பார்க்க முடியாத லடசணங்களுடன்). பரிட்சை முடிந்தவுடன் , எல்.கே.ஜி குழந்தை மாதிரி நேராக அவ அம்மாவை பார்த்து புன் சிரிப்புடன் வேகமாக வரும்... யாருடனும் தேவையில்லாமல் பேசி பார்த்ததில்லை.. எங்கோ தவறு செய்து விட்டார்கள் பெற்றோர்.. படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து விட்டார்கள்.. பத்து நாள் முன்பு. அபுவை பதினோராவது அங்கேயே. படிக்க வைப்பது தொடர்பாக தோழி ஒருவருடன் பேசிய போது தெரிந்த தகவல் .. ரொம்பவே மனசை டிஸ்ட்ர்ப் செய்தது ... இதை எல்லார்கிட்டயும் ஷேர் பன்ணிக்கலாம்னு எழுதினேன்.. சரி எப்பவும் போல் இல்லாமல், ஒரு.சிறு கதையா எழுதலாம்னு பார்த்தேன்.. சுமாரான முயற்சின்னு தெரியும்... தமிழ் ல ஒரு லெட்டரே தடவித் தடவி எழுதினவள ஓரளவு எழுத வைத்ததில் உன் பங்கு உண்டு... அதற்கு நன்றி... கிறுக்கனும்னு தோணினா இங்கதான் வருவேன்.. வேற வழியில்லை சகிச்சுக்கத்தான் வேண்டும்..
//நேர் வகுடெடுத்து நீளமான ரெட்டை பின்னலுடன், நெற்றியில் வீபூதியுடனும் (இப்ப பார்க்க முடியாத லடசணங்களுடன்). பரிட்சை முடிந்தவுடன் , எல்.கே.ஜி குழந்தை மாதிரி நேராக அவ அம்மாவை பார்த்து புன் சிரிப்புடன் வேகமாக வரும்// இந்த வர்ணனை கதையில் வந்திருக்க வேண்டியது வாசகனை கற்பனை செய்ய தூண்டும்.
Post a Comment