(கொஞ்சம் [ரொம்பவே?] நீளமான இந்த பதிவை எழுதும்முன், இந்திய தண்டனைச் சட்டத்தின் 'கால வரையறை' (statute of limitations) வரம்புகள் பற்றி கொஞ்சம் ஆழமாகப் படிக்க வேண்டியிருந்தது!! கா லம் கடந்து என் பட்டமும் வேலையும் பறிபோக வாய்ப்புள்ளதா என்று ஆராய்ச்சி செய்த பின்னரே எழுதுகிறேன். இந்த பதிவு நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.)
பல்கலைகழகத்தில் இருந்து அன்று வந்த கடிதம், 2012ஆம் ஆண்டின் கால்நடை பட்டப்படிப்பின் கடைசி நேர்முக தேர்வுக்குழுவில் கால்நடைப் பண்ணைகள் சார்பாக என்னை ஒரு உறுப்பினனாக நியமித்திருந்தது. கால்நடை மருத்துவராக ஆகுமுன், கல்லூரியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் கடைசி தேர்வு இது. அட, இப்பொழுதுதான் நானே இந்த தேர்வை எதிர்கொண்டது போலுள்ளது! அதற்குள் 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டதா? என் காலத்தில் (1989 ஆம் ஆண்டில்) தேர்வுக்குழுவில் இரு ந்தவர்கள் கால்நடை மருத்துவத்துறையின் ஜாம்பவான்கள். முனைவர்கள் சண்முகசுந்தரம், ராகவன், ஜானகிராமன்...awe inspiring என்ற வார்த்தைகளுக்கு உரித்தானவர்கள்! வேலைப்பளுவை மறந்து, சற்று இளைப்பாற இந்த நேர்முகத்தேர்வு அவர்களுக்கு ஒரு விளையாட்டு போல! எங்களைப்போன்ற எலிகளைக் கொஞ்ச நேரம் அந்த பூனைகள் (புலிகள்) தட்டி விளையாடிவிட்டு வெளியே அனுப்புவார்கள்!! இப்பொழுது நான் அவர்களது இடத்தில்!! அவர்கள் வயதும், அனுபவமும் எனக்கும் வந்து விட்டதோ? வயதாகிவிட்டது தெரிகிறது. அனுபவம்?
நேர்முக தேர்வு நடக்கும் கட்டிடத்தின் முன் அன்று இறுதியாண்டு மாணவர்கள் கூட்டம், எதிர்பார்ப்புடன். முந்தைய தேர்வு முறைக்கும் தற்போதய தேர்வு முறைக்கும் பல வித்தியாசங்கள். முன்னாள், சாதாரண அறையில், மின்விசிறி இரைச்சலுடன் ஒவ்வொரு மாணவனுக்காக நேர்முக தேர்வு நடக்கும். இப்பொழுதோ, குளிரூட்டப்பட்ட அறை, சொகுசு 'பின்தள்ளு' இருக்கை என்று பல வசதிகள். தேர்வு முறையிலும் சில மாற்றங்கள். ஒரே நேரத்தில், நான்கு மாணவர்களுக்குத் நேர்முக தேர்வு நடக்கும். இரண்டு பேர்கொண்ட மூன்று குழுக்களிடம் மாணவர்கள் ஒவ்வொருவராக, வரிசையாக தேர்வைச் சந்திப்பார்கள். இறுதியாக, தேர்வுக்குழுவின் தலைவர் முனைவர் திருநாவுக்கரசு (சிகிட்சையியல்) அவர்கள் தேர்வு நடத்துவார். நானும், முனைவர் தங்கவேலு (நுண்ணுயிரியியல்) அவர்களும் ஒரு குழு...நான் பண்ணைப் பராமரிப்பு சம்பந்தமாகவும், அவர் நுண்ணுயிரி நோய்கள் பற்றியும் தேர்வு நடத்த வேண்டும். காலை 10 மணி முதல் 11 மணி வரை ஐந்தாறு மாணவர்களை வதைத்தாயிற்று. அடுத்து வர வேண்டிய மாணவர் , முனைவர் ஸ்ரீதர் (நோய்க்குறியியல்) மற்றும் வேறொரு பேராசிரியர் குழுவின் நேர்முக தேர்வை முடித்து, எங்கள் முன் வரத் தயாரானார் . ஸ்ரீதர் சார், அந்த மாணவர் எழுந்தவுடன், 'நல்லா படிக்கிறவன்' என்று எனக்கு தெரியும் படி சைகை செய்தார். பொதுவாக இந்த நேர்முகத் தேர்வுகளில், பல மாணவர்கள் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க' நிகழ்ச்சியல் வருவது போல, ஏறுமாறாகத்தான் பதில் சொல்வார்கள். நன்றாக பதில் சொல்லும் மாணவர்களுக்குக் கேள்வி கேட்பதே ஒரு அலாதி சுகம் தான். எதிபார்ப்புடன் மாணவரை வரவேற்றேன்.அந்த மாணவர் உயராமாக, கண்ணாடி அணிந்து, மிக நேர்த்தியாக உடை அணிந்திருந்தார்......இப்பொழுதே பார்ப்பதற்கு ஒரு பேராசிரியர் போல! என் கல்லூரிக்காலங்களில் (ஏன், பேராசிரியர் ஆன பின்னும் கூட!!) நான் இவ்வளவு ஒழுக்கமாக உடை அணிந்தது இல்லை!! அவர் எங்கள் முன் உள்ள நாற்காலியல் அமர்ந்து, தான் கொண்டு வந்த பதிவேடுகள் மற்றும் எழுத்துப்பணி (assignment) முதலியவற்றை சமர்ப்பித்தார். அவற்றுள், பண்ணை மேலாண்மை தொடர்பானவற்றை நான் பிரித்து எடுக்க, முனைவர் தங்கவேலு அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். முதலில், காட்டுப்பாக்கம் பண்ணை பயிற்ச்சிக் காலத்தில் அவர் செய்த எழுத்துப் பணியை திருத்த ஆரம்பித்தேன். அவருக்கு அளிக்கப்பட்ட தலைப்பு முயல்வளர்ப்பு சம்பந்தப்பட்டது. அத்தலைப்பில் எழுத்துப்பணியை முடித்து, துறை அலுவலர் முனைவர் முத்துசாமி அவர்களிடமும், பண்ணைத் தலைவர் முனைவர் கோபி அவர்களிடமும் முதல் பக்கத்தில் கையொப்பம் வாங்கியிருந்தார். கையெழுத்து க்களைத் தற்செயலாக மீண்டும் பார்த்த எனக்குத் தூக்கி வாரிப்போட்டது!! இரண்டும் போலிக் கையொப்பங்கள்!! இந்த மாணவரா? இருக்கவே முடியாது!! கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவரை உற்றுப் பார்த்தேன். என் பார்வையை உணர்ந்து சட்டெனெ என்னைப் பார்த்து, மீண்டும் திரும்பிக்கொண்டார். முந்தய மாணவர்கள் விட்டுச்சென்ற எழுத்துப்பணி நகல்களை எடுத்து கையொப்பங்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். சந்தேகமேயில்லை! இரண்டு ஆசிரியர்களின் கையொப்பங்களையும் இவரே போட்டிருக்கிறார். ஒரிஜினல் போலிக் கையொப்பங்கள்!! என்ன தைரியம்!! அதற்குள், தங்கவேலு சார் அவர் பங்குக்கான கேள்விகளை முடித்து என்னைப் பார்த்து சைகை செய்தார். மாணவரும், கேள்விகளை எதிர்பார்த்து என்பக்கம் திரும்பினார். நான் அவரிடம் கேட்டேன் "பண்ணையில் தரப்பட்ட எழுத்துப்பணியைச் சரியாக செய்து, முறையாகக் கையொப்பம் வாங்கி விட்டீர்களா ?". ஆம் என்பதுபோல் தலை ஆட்டினார். என் இருக்கையில் இருந்து முன்னால் நகர்ந்து நான் அவரது எழுத்துப்பணியை முதல் பக்கம் அவருக்கு தெரியுமாறு திருப்பிப் பிடித்துக்காட்டி உறுதியான குரலில் சொன்னேன் "இந்த ரெண்டு கையொப்பங்களும் போலிக் கையொப்பங்கள்". அவரது முகத்தில் கொஞ்சம் கலவரம், சிறிது கோபம் மற்றும் நிறைய அதிர்ச்சி!! "இல்ல சார். அது அவங்க கையொப்பங்கள் தான்" என்றார். நான் மீண்டும் மெல்லிய குரலில் தீர்க்கமாகச் சொன்னேன் "பொய் சொல்றீங்க! நீங்க போர்ஜரி செய்திருக்கீங்க". அவர் முகத்தில் அதிர்ச்சியை பின் தள்ளி கோபம் முன்வந்தது. புருவத்தை சுருக்கி சற்று கோபமாக "நான் அப்படிப்பட்டவனில்லை . எந்த தப்பும் செய்யல்ல" என்றார். "அப்ப நீங்க ஒதுக்க மட்டிங்க?" என்றேன். "தப்பு செஞ்சா தான ஒதுக்கணும். நான் தப்பு செய்யல்ல" என்றார் கோபத்தோடு உறுதியாக. இருக்கையில் பின் சாய்ந்து அமர்ந்து நிதானமாகச் சொன்னேன் "அப்ப சரீங்க. எனக்கு வேற வழியே இல்லை. கல்லூரி முதல்வரிடம் பார்மலா ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து, இந்த எழுத்துப்பணியை "கேளிவிக்குரியுள்ள தஸ்தாவேஜுகளுக்கான அரசு ஆய்வாளர்' (Govt. examiner of questioned documents) அலுவலகத்தில் சமர்ப்பித்துப் போலியான்னு கண்டுபிடிக்கணும்" என்றேன். சட்டென அவர் முகம் வெளிறி விட்டது. கோபம் சுத்தமாக மறைந்து பயம் அந்த இடத்தை பிடித்தது. தடுமாற்றத்துடன் "சார்..." என்றார். "நீங்க ஒத்துக்கல்லேன்னா எனக்கு வேற வழி இல்ல" என்றேன். "அவங்க சைன நான் தான் சார் போட்டேன்" தலையை குனிந்து ஈனமாகச் சொன்னார். "ஏன் அப்படி செஞ்சீங்க? இந்த 5 மார்க் இல்லேன்னாலும் நீங்க தேறுவீங்க. எதுக்கு இந்த வேலையெல்லாம்? நீங்க நல்ல மாணவர்னு சில டீசெர்ஸ் சொல்றாங்க. இனிமேல் உங்கள பாக்கும்போது, இந்த போர்ஜரி ஞாபகம் தானே எனக்கு வரும்?" என்று பொரிந்து தள்ளிவிட்டேன்! தலையை குனிந்து, இடையிடையே ' சாரி சார்', சாரி சார்' என்று சொல்லிக்கொண்டே அமர்ந்திருந்தார். "நீங்கள் போகலாம்" என்றதும் சோர்வாக எழுந்து விடை பெற்றார். இவ்வளவு நிகழ்ந்தது எங்கள் மூன்று பேர் தவிர யாருக்கும் தெரியவில்லை. தங்கவேலு சார் அவரது வழக்கமான புன்முறுவலோடு சொன்னார் 'எப்படி இருக்காங்க பாருங்க பசங்க' என்று. மதிய உணவின் போது ஸ்ரீதர் சாரிடம் சொன்னேன் "உங்க 'நல்ல' பையன் அப்பட்டமா போர்ஜரி செஞ்சு எங்கிட்ட மாட்டிகிட்டான்". அவர் அதிர்ந்து போனார் "நெஜமாவா? அடப்பாவி!!". அருகில் இருந்த இன்னொரு பேராசிரியர் கேட்டார் "பாஸ் பண்ணி விட்டுட்டீங்களா? இந்த மாதிரி பசங்கள எல்லாம் பெய்ல் பண்ணனும். என் சார் விட்டீங்க?". .ஆமாம்...ஏன் விட்டேன்? என் நினைப்பு என்னைப் பல வருடங்கள் பின்னால் இழுத்துச் சென்றது.
1982-1984 ......எவ்வளவு இனிமையான வருடங்கள்!! மதுரை டி .வி . எஸ். உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடிந்து ஏன் 'தூய அறிவியல்' எடுத்தேன் என்று தெரியாது...கணக்கில் மக்கு அல்ல. உயிரியல் படிப்புக்கு கணக்கு தேவையில்லை என்ற நினைப்புதான்! இப்போழுது நினைக்கும் போது , கணக்கு என்ற 'அறிவியலின் அரசி' இல்லாத அறிவியலை எப்படி 'தூய அறிவியல்' என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. முதல் (கணக்கு) வகுப்பு பசங்க, குறிப்பா செந்தில்நாதனோடு (இப்பொழுது அமெரிக்காவில் இதய நோய் நிபுணர்) சண்டை, அவன் எங்களை 'கணக்கு வராத பசங்க' என்று கிண்டலடிப்பதால். இயற்பியல் ஆசிரியர் திரு. ராஜமன்னார் அவர்களும் அப்படியே. 'கணக்கில்லாமல் எப்படி physics படிக்கப்போறீங்க?' என்று அவருக்கே உரித்தான கர்ஜனை சிரிப்பால் மிரட்டுவார். அவரைப்போல் ஒரு அருமையான வாத்தியாரை பார்ப்பது அரிது. அவருக்கு என்னைப் பிடிக்கும்....வகுப்பில் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாலும், மார்க் வாங்குவதாலும். இறுதிப் பரிட்சையும் வந்தது. ஆங்கிலப் பரிட்சையின்போது என் பள்ளித் தோழன் ஒருவனது தாய் (அவர் வேறொரு பள்ளியில் ஆசிரியை) எங்களுக்கு அறைக் கண்காணிப்பாளராக வந்தார். பிறகென்ன? ஒரே கொண்டாட்டம் தான்!! அது தேர்வு மாதிரியே இல்லை...காப்பியோ, காப்பி! நான் தேர்வுகளில் எப்பொழுதும் காப்பி அடிப்பதில்லை (நெசமாங்க...நம்புங்க!!). ஒருவாறாக முக்கியமான பரிட்சைகள் (வேதியல், மிருகவியல், தாவரவியல்) எல்லாம் முடிந்தன. சிறப்பாகச் செய்திருந்தேன். கடைசி தேர்வு இயற்பியல். அதற்கு முந்தின மாலை, வீட்டில் படித்துக்கொண்டிருந்தேன். வாசலில் என் வகுப்பு தோழர்கள் மூன்று பேர் வந்தனர். எனக்கு ஆச்சர்யம். "என்னடா இன்னைக்கு வந்திருக்கீங்க?' என்று கேட்டேன். "ஒன்றுமில்லை. இயற்பியல் தேர்வு கொஞ்சம் கஷ்டம். நாங்க பாஸ் பண்ண ஹெல்ப் பண்ணுடா" என்றான் அதில் ஒருவன். "எனக்கு புரியலியே? என்றேன். "நாளைக்கு பரிட்சையில் கொஞ்சம் எங்களுக்கு பேப்பர் தந்து ஹெல்ப் பண்ணுடா" என்றான் அனாயாசமாக. அதிர்ந்து விட்டேன். பரிட்ஷைகளில் பிறருக்கு நைசாக பதில் சொல்லித் தந்ததுண்டு. ஓரமாக என் பதில் தாளை காண்பித்ததுண்டு. ஆனால் பதில் தாளை பார்த்து எழுத இது வரை யாருக்கும் கொடுத்ததே இல்லை. அந்த வகையில் basement ரொம்ப வீக்!! "அம்மாடி! முடியாது! " உறுதியாக மறுத்தேன். "ஒன்னும் பயப்படத் தேவையில்லை. நம்ம --------- அம்மா தான் நாளைக்கும் அறைக் கண்காணிப்பாளர். அதற்க்கு school அலுவலகத்தில் சொல்லி ஏற்ப்பாடு செய்தாயிற்று". லஞ்சத்தின் மகிமையை நேரில் பார்த்தது அது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். எந்த நேரத்தில் 'சாத்தான்' என் மனதில் புகுந்தது என்று தெரியாது...பதில் தாள்களை பகிர்ந்துகொள்ள முதல்முதலாய் ஒத்துக்கொண்டேன்!. மறுநாள் அவர்கள் சொன்னதுபோல் என் பள்ளித்தோழனின் தாயார் தான் மீண்டும் அறைக் கண்காணிப்பாளர். இயற்பி யல் பரீட்சை கேள்வித்தாள் எனக்கு மிகவும் இலகுவாக இருந்தது. உற்சாகமாக எழுதிக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கோரிக்கைகள் வரத்தொடங்கியது. "டேய், இந்த question பதில் குடுடா"...தயங்கித் தயங்கி என் பதில் தாளைக் கொடுத்தேன். அது போய் ஒரு சுற்று சுற்றி விட்டு மாடப்புறாபோல் மீண்டும் என் மேஜைக்கு வந்தது!! அட இவ்வளவு தானா? என் பதில் தாள்கள் ஒன்று ஒன்றாக பல மேஜைகளுக்கு சுற்றி வரத் தொடங்கியது.....அறைக் கண்காணிப்பாளர் ஆசிரியையின் ஆசிர்வாதங்களுடன்!! சுமார் ஒன்றரை மணி நேரம் போயிருக்கும். எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தேன். அறையின் வாசலை அடைத்தபடி ஒரு ஆஜானுபாகு மனிதர் நின்றிருந்தார். எப்பொழுது வந்தார் என்று தெரியவில்லை. வெள்ளை சட்டை...பழுப்புப் பச்சை (olive) கால்சட்டை. நெற்றியில் நாமத்துடன் கைகளை மார்புமுன் கோர்த்த படி தீர்க்கமாக அறைக்குள் நோட்டம் விட்ட வண்ணம் நின்றிருந்தார் .சற்றென்று திரும்பி நேராக, இரண்டாம் வரிசையில் கடைசி மேஜையில் அமர்ந்து அவரைப்பார்த்துகொண்டிருந்த என்னைப் பார்த்தார் (அண்ணலும் நோக்கினார், இந்த அல்பனும் நோக்கினேன்!!). விறு விறுவென்று என்னை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வாகனங்களின் பளீரிடும் முன்விளக்கு ஒளியில் மெருண்டு முழிக்கும் பெருச்சாளியை போல் வாயைப் பிளந்துகொண்டு அவரைப் பார்த்துக்கொண்டிருந்த என்னைச் சடுதியில் நெருங்கினார். மேசையின் விளிம்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு நான் அவரை பார்த்துக்கொண்டிருக்க, அவர் என் மேசை மேல் சிதறிக் கிடந்த என் பதில் தாள்களை, சட சட என்று கலைத்து எதையோ தேடினார்! அவர் தேடியது கிடைக்கவில்லை போல சட்டென்று என் முன் அமர்ந்திருந்த மாணவனின் மேசைக்குச் சென்று தேடினார். என் தொண்டை உலர்ந்து, நாக்கு மேல்வாயில் ஒட்டிக்கொண்டது!! கண்களின் ஓரங்களில் நீர் முட்டியது!! ஏனென்றால் என் முதல் பக்க பதில் தாளை சற்று முன் தான் அவனிடம் கொடுத்திருந்தேன். அவனது பதில் தாள் குவியலுக்குளிருந்து எனது பதில் தாளை இலாவகமாகப் பிரித்தெடுத்தார். அதன் மேல் இருந்த பதிவு எண்ணைப் படித்து விட்டு, என் மேஜை மேல் சாக் பீசில் எழுதியிருந்த எண்ணை ஒத்துப்பார்த்தார். " எந்திரிடா படவா ராஸ்கல்!" அவரது கணீர்க் குரல் என்னுள் ஊடுருவி, என்னிடம் இருந்த கொஞ்ச-நஞ்ச தைரியத்தையும் பொடிப் பொடியாக்கியது. கைப்பற்றிய பதில் தாளை மடித்து வலது கையில் பிடித்து, அதே கையினால் என் சட்டைக்காலரையும் கொத்தாகப் பிடித்து என்னை எழுப்பினார். திறந்திருந்த (பிளந்திருந்த?)என் வாயை மூடி, ஒட்டியிருந்த நாக்கை பிரித்து பேச முயன்றேன். "ஸா " 'இரஸ்" "ரர்'... என்று அர்த்தமில்லாத சத்தங்கள் மட்டும் தான் வந்தது, காற்றுடன் . வலது கையில் என்னையும் , இடது கையில் என் நண்பனையும் காலரைப் பிடித்து வெளியே நடத்திச் சென்றார்....கசாப்புக் கடைக்குச் செல்லும் பரிதாப ஆடாக நானும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கப் போகிறவன் போல் அவனும் அறைக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டோம். (பின்னர் தெரிந்து கொண்டேன், வந்தவர் என்னைப்போல் 'மொள்ளமாரிகளைப்' பிடிப்பதற்கென்றே அமைக்கப்பட்ட 'பறக்கும் படையின்' (flying squad) தலைவர் என்று. 35-40 பேர் உள்ள அறையில் நேராக என்னிடம் ஏன் வந்தார் என்று தெரியாது. உளவுத்துறை சொல்லியிருக்குமோ? உளவுத்துறை அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லையே? என் பையன் விளையாடும் கைப்பேசி விளையாட்டுகளில் பார்த்ததுண்டு...செய்ய வேண்டிய செயலினைக் குறிக்க ஒரு அம்புக்குறி மேலும் கீழுமாக ஒரு இடத்தில் மிதந்து கொண்டிருக்கும். அது போல் என் தலை மேல் ஒரு அம்புக்குறி இருந்ததோ...இவன் தான் காப்பி அடிக்க உதவுகிறான் என்று காட்ட? யாமறியேன் பராபரமே!). வெளியே வந்தவுடன், சிறிய நீரழுத்த மண்டலமாக கண்கள் ஓரம் மட்டும் இருந்த என் அழுகை, மிக வலிமை பெற்று கீழ்ப்புறமாக நகர்ந்து, கண், மூக்கு, வாய் மூலம் பெரும் இரைச்சலுடன் ஒப்பாரியாக வெளிவரத் தொடங்கியது. "Girls எல்லாம் இருக்காங்கடா . ஊளை இட்டு மானத்தை வாங்காதே!!' என்று உள்ளே ஈனமான குரல் ஒன்று முனகியது. 'Girls ஆவது ஒண்ணாவது!! பொழைப்பே போச்சு!! நீ அழுடா" என்று ஒப்பாரி அந்த குரலை அமுக்கியது. "பேர சொல்லுங்கடா"...அவர் கர்ஜித்தார். ----------------------- என்று அவன் சொன்னான், அடுத்த பத்மஸ்ரீ பட்டத்துக்கு ஆள் எடுப்பது போல். ஒப்பரியினூடே "..சர். please....ஹ..என்று அர்த்தமில்லாத சத்தங்களுடன் கெஞ்சினேன்! "ஆழாக்கு உயரம் (அப்பொழுதெல்லாம் நான் ரொம்ப குள்ளம்) இருந்திட்டு copy அடிக்கிற..உன்னையெல்லாம்...பேர் சொல்லுடா'" மீண்டும் உறுமினார். விக்கி விக்கி அழுதுகொண்டே பேரைச் சொன்னேன். எங்கள் பதிவு எண்களையும், பேர்களையும் ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டார். 'உங்கள பாஸ் பண்ண விட்டேனா பாருங்க" சீறினார். எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியாது. "போங்கடா...போய் பரீட்சை எழுதுங்க" என்று அனுப்பி வைத்தார். தள்ளாடிச் சென்று இருக்கையில் அமர்ந்தேன். அறையில், பரம்பரை காப்பி அடிப்பவர்கள் எல்லாம், இந்த பஞ்சத்துக்கு காப்பி அடிக்க உதவி மாட்டியவனைப் பரிதாபத்துடன் பார்த்தனர். என் கண்களில் நீர் கப்பி எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. இமைகளை அழுத்தி மூட, பொல பொலவென கண்ணீர் துளிகள் என் பதில் தாள்கள் மேல். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் புறங்கையால் துடைத்தேன். நான் எழுதியிருந்த பதில்கள் கண்ணீரோடு கசிந்து அழிந்தது. என்ன எழுதினேன், ஏது எழுதினேன் என்று தெரியாது.....தேம்பல்களுக்கிடையில் ஒருவாறாகப் பரிட்சையை முடித்தேன். யாரிடமும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தேன். +2 தேர்வில் 1044 மார்க்குகள். வேதியல் -195, விலங்கியல்-183, தாவரவியல்-176. இயற்பியல்-165!! இது வரை 190க்கு குறையாமல் எடுத்த பாடத்தில் வெறும் 165!! அவ்வருடம் புதிதாக கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வில் 48/50. எல்லாம் , சேர்த்து 227.75/250.மருத்துவ படிப்புக்கு ஆப்பு வைத்தாயிற்று என்று உடைந்துபோனேன். மருத்துவ படிப்புக்கு குறைந்த பட்ச மதிப்பெண் மெல்ல மெல்ல சரிந்து இறங்கி இறுதியில் 228.2 வரை வந்து நின்றுபோனது. வேறு வழியின்றி அமெரிக்கன் கல்லூரியில் 6 மாதங்கள் உயிரியல் படித்தேன். செப்டம்பர் வாக்கில், மூன்றாவதோ, நான்காவதோ பட்டியலில் TNAU வில் இருந்து அழைப்பு வர, கால்நடை மருத்துவம் சேர்ந்தேன்.
எனக்கு நிகழ்ந்த இந்த அனுபவத்தை ஒரு வரம் என்று தான் நான் கருதுவேன். என்னைக் கையும் களவுமாகப் பிடித்தவர், சட்டப்படி நடந்து 3 வருடங்கள் என்னை debar செய்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று தெரியாது! அவ்வாறு செய்யாமல், அவரது கருணை தான் இன்று என்னை நான் இருக்கும் இந்த (நல்ல) நிலைமைக்கு கொண்டுவந்தது என்று நினைப்பதுண்டு. இந்த நினைப்பு தான், ஒரு உந்துதலில் (impulseஇல்) தவறு செய்யும் மாணவர்களுக்கு கொடும் தண்டனை கொடுக்க வேண்டாம் என்று என் கையைக் கட்டுகிறதோ? தெரியாது! கல்லூரிக்காலத்தில் செய்யும் சிறு தவறுகளுக்காக வழங்கப்படும் அதிகப்படியான தண்டனைகளால் இறுகிப்போய் தவறான பாதைகளில் சென்றுள்ள பல பேரை எனக்குத் தெரியும். ஒரு ஆசிரியனுக்கு தண்டிக்கும் அதிகாரத்தை விட மன்னிக்கும் அதிகாரம் தான் வலிமையைக் கொடுக்கிறது என்பது என் கருத்து. நான் செய்வது முற்றிலும் சரியா என்று எனக்குத் தெரியாது... ஆனால் நிச்சயமாகத் தவறில்லை!!
"போலாமா"....தங்கவேலு சார் கேட்டது என்னை விசுக்கென நிகழ் காலத்துக்கு கொண்டுவந்தது. மீண்டும் தேர்வு அறைக்கு சென்றோம், எஞ்சியிருந்த மாணவர்களை வதைக்க!!
(பின்குறிப்பு: "சார், இதுல என்ன தப்பு, சொல்லுங்க?'". பெயர் மறைக்கப்பட்ட அந்த எழுத்துப்பணியை பிற்ப்பாடு முனைவர் கோபியிடம் காண்பித்துக் கேட்டேன். "அடப்பாவி"...அவரது புருவங்கள் சுருங்கியது. எனக்கோ பெருமை. அவர் தொடர்ந்தார் "rabbitக்கு rabbet என்று எழுதியிருக்கான் பாரு". "அட அதில்லை சார். வேற" என்றேன் சற்று எரிச்சலுடன். "வேற என்ன? வெய்ட் ஏதாவது தப்பா போட்டிருக்கானா ?" புரட்டிப் புரட்டிப் பார்த்துசாதுவாகக் கேட்டார். எனக்கு அழுவாச்சியே வந்துவிட்டது!! கடைசி வரை அவர் தனது கையொப்பம் போலி என்பதைக் கண்டு பிடிக்கவே இல்லை!!)
2 comments:
நச்சுனு செம தலைப்பு, பாம்பு புடிக்கரவங்களுக்தான் இப்படி தோனும் போல
En viva-voce gnabathuku varuthu sir.... My poultry record too.... Polo kaiezuthu..
Post a Comment