இன்று காலை சான்ட்விச் தயார் செய்து கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு அட காலைல யாருன்னு எடுத்தா, தாமு!!.
திரிசூலம் சிவாஜி மாதிரி ஆகிவிட்டேன் ஒரு நிமிடம். என்ன பேசுவதென்றே தெரியவில்லை.  என் ஞாபகத்திலிருக்கும் தாமுவின் குரலுக்கும் இன்று கேட்ட குரலுக்கும் சம்பந்தமேயில்லை. ஆனால் இப்போது கேட்டது மிக இனிமையான தாமுவின் குரல்.
சிறியவர் முதல் பெரியவர் வரை பழகுவதால், முக்கியமாக நான் பழகிய பல இலங்கை நண்பர்கள் மூலம்,   ஒருமையில் டா போட்டு பேசும் வழக்கம் விட்டுப்போயி மரியாதையா "ங்க"  வந்துவிட்டதால் தாமுவை "சொல்லுங்க" என்ற போது என்னடா "ங்க" என்கிறாய் என்றான்.  சட்டென்று வரவில்லை பாருங்கள் உடன் படித்தவன் என்றாலும். எப்போது இந்தியா வருகிறாய் என கேட்டான், அதுதான் நானும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
இப்போது பதிவுக்கு வருவோம், நம் வாத்தியாரிலேயே மிகவும் வித்யாசமான நடைமுறைகளால் என் கவனத்தை கவர்ந்தவர் சுசு என்கிற சு. சுப்பிரமணியன். தமிழ் வாத்தியார். நம் ஊர்ல இருக்கும் சொல் பழக்கம் "போக்கத்தவன் போலிசு, வக்கத்தவன் வாத்தியார்" என்கிறாப் போல வாத்தியார் வேலைக்கு வந்துட்டாரோன்னு தோணும்.  நான் கேள்விப்பட்டது, இவர் மனைவி மூலம் இரண்டு தலைமுறைகு சொத்து வந்ததால் போனா போகட்டும்னு வாத்தியார் வேலைக்கு வந்துவிட்டார் என்று.
மிக நாசூக்காக மேசையை தூசு தட்டிவிட்டு, கைகளில் புத்தகத்தை எடுத்தபடி இரண்டு தோள்களையும் ஒரு முறை உயர தூக்கிவிட்டு மேசையின்  விளிம்பில் அமர்ந்த படி வகுப்பெடுக்கும் மேனரிசம்,
ஒரு நாள் வகுப்புக்கு வந்தவர், அடுத்த வகுப்பில் சங்கரன் தொண்ட தண்ணி வத்த தமிழ் எடுத்துக்கொண்டுடிருந்ததை கேட்டு, நம்மை எல்லாம் சத்தம் போடம அத கவனிங்க என்று சொல்லிவிட்டு, தன் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
தமிழம்மாவின் மகன் வாசனை அவ்வப்போது லொள்ளு பண்ணுவது இவருக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.  தமிழம்மா அடிக்கடி சொல்லும்
இன்பம் இன்பம் இலக்கணமே
அன்பாய் கற்றிட்டால் அரைக்கணமே
என்று சொல்லிவிட்டு, வாசனை பார்த்து சிரித்துக்கொண்டே இட்லிக்கு மாவரைப்பது போன்று செய்கை காட்டுவார். மனுசனுக்கு என்னா தெனாவெட்டு, ஒரு தமிழ் வாத்தியாராக இருந்து கொண்டு, தமிழ் படிச்சா மாவரைக்கத்தான் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றத்தக்க ஒரு செய்கை.
இவர் தான் ஸ்பர்ஜனுக்கு போஜமகாராஜா என ஞானஸ்னானம் செய்தவர். ஒரு முறை தமிழில்  ஸ்பர்ஜன் எழுதியதில் மெய்யெழுத்தில் அதிகம் பிழையிருந்ததால் அவனுடைய நோட்டை வைத்துக்கொண்டு,
"ராமர் சீதையுடன் வனத்தில் நடந்து போய்கொண்டிருந்தபோது", என துவங்கியதும் அட எதோ கம்பராமாயணம் பத்தி சொல்லப் போராரோன்னு பார்த்தா,  "ராமருக்கு பயங்கரமா மூட் ஆகி, இப்படி பாடினாரு
என பூ பூதிருகு பாரு
ஆல மரதிலு
சபாதி களிலு"
போஜராசா, ப்,த் க், ம் எல்லாம் விட்டாஇப்படிதான் இருக்கும்" என்றாரே பார்கலாம்.
ஆனால் அந்தநாள் நான் மெய்யெழுத்தின் இலக்கணத்தை நன்கு புரிந்துகொண்டேன்.  சுசு எப்படி இருந்தாலும் அவரும் எனக்கொரு ஆசானே.
 
 
1 comment:
//உள்ளூர்வாசிகள் Aitel, bsnl வகையரா அவ்வப்போது அள்ளி விடும் சேவை வழியாக தொடர்பு கொள்ளமுடியும். எங்களைப் போன்ற nriக்களுக்கு ப்ளாக் ஒரு வரப்பிரசாதம்// அப்படின்னு யாரோ அழுதாங்களாம். அதான் தாமு இரங்கி தொலை பேசி இருக்கனும்.
சுரேஷின் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட சு.சு விற்கு ஒரு ஓ போடுங்கப்பா.
Post a Comment