Tuesday, July 20, 2010

தமிழில் பெயர்ப்பலகை

இப்ப நம்ம ஊர்ல எல்லா கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு பிறகு நிறைய கடைகளில் தமிழிலும் பெயர் எழுதி வைத்திருக்கிறர்கள். சிலர் ஆங்கிலத்தை அப்படியே தமிழ் படுத்தி எழுதியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, Bakery பேக்கரியாக மாறி இருக்கிறது. சிலர் அதை ரொட்டி கடை என்றும் சிலர் அடுமனை என்றும் போட்டிருக்கிறார்கள். நல்ல வேலை தமிழில் மட்டும் என்று உத்தரவு போடவில்லை. அடுமனை என்றால் நமக்கு என்ன புரியும். கடைல இருக்கற பொருட்களை வைத்து புரிந்து கொள்ளலாம்.

பல வருடங்களுக்கு முன் நாங்கள் ஒரு முறை ஹோட்டல் (உணவு விடுதின்னு வருதா பாரு) சென்றபோது (என் பையனுக்கு 4 வயது இருக்கும்) அவன் மெனு கார்டை முழுவதுமாக பார்த்து விட்டு எனக்கு சமோசா என்று ஆர்டர் பண்ணினான்.

”இங்க அது கிடைக்காது” – நான்.

“இதுல போட்ருக்கு” – அவன்.

“அட இங்க பாருங்க குழந்த எழுத்து கூட்டி மெனு கார்ட்ல இருக்கறத படிச்சுட்டான்”- பெருமை பொங்க நான்.

“எப்படிடா செல்லம் படிக்க கத்துண்ட”.

அவன் பதில் சொல்லாமல் மெனு கார்டின் பின் புறம் இருந்த சமோசா படத்தை காண்பித்தான்.

இன்றய நடைமுறையில் நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தை தெரியாமல் அல்லது நினைவில் வராமல் இருக்கிறோம். தாய்மொழிப் பற்றெல்லாம் தாண்டி, நமக்கு நடை முறைக்கு எது செளகரியமாக இருக்கிறதோ அதைத்தான் நாம் விரும்புகிறோம். எல்லாம் பழக்கம்தான் காரணம்.

இன்னும் சில பெயர்ப் பலகைகள் .

Hot chips - சூடான சீவரி

Sriram Enterprises – ஸ்ரீராம் வணிக நடுவம்

Durga Agency - துர்கா முகமையாளர்

தமிழை வளர்க்க பல வகையில் முயற்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் தமிழ் வழிக் கல்வி அறிமுகமாகி உள்ளது. அதற்கும் 150 இடம் வரை நிரப்ப பட்டுள்ளதாக கேள்வி. இது எவ்வளவு தூரத்துக்கு வொர்க் அவுட் ஆகும்னு புரியல. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

1 comment:

sreesnake said...

வொர்க் அவுட்....தமிழ் மாதிரி தெரியலியே!! (ஹி! ஹி!)