Friday, August 24, 2012

கிறுக்கல்

சில வருடங்கள் கழித்து படித்ததில் கிறுக்கியவை எல்லாம் சற்று சிறு பிள்ளைத்தனமாகவும் அபத்தமாகவும் தோன்றியதால் அனைத்தையும் அழித்து விட்டதில், அழிக்க (தற்போதைக்கு) மனமில்லாத இரண்டு மட்டும் வகுப்பறையில் தஞ்சம் :))

அரங்கன் உலா

ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா மற்றும் இரண்டாம் பாகமான மதுரா விஜயம் படித்தேன். புஷ்பா தங்கதுரை வேணுகோபாலனாக அவதாரம் எடுத்து நல்ல விஷயங்களை எழுதியிருக்கிறார்.

14ம் நூற்றண்டில் சுல்தானியர் படையெடுப்பின் போது அரங்கனை, பக்தர்கள் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பல அல்லல்களுக்கு நடுவே மீண்டும் அரங்கம் கொண்டு வந்து சேர்த்த சரித்திர நிகழ்வை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். முஸ்லிம் படையெடுப்பின் போது நமது பல கோவில்கள் சின்ன பின்னா படுத்தப் பட்டதைப் பற்றி சரித்திரத்தில் படித்து இருக்கிறோம். பல வருடங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்ததால் எனக்கு அரங்கனிடம் தனி பிடிப்பு உண்டு . எனக்கு மிகவும் பரிச்சயமான ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றிய நூல் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் படித்தேன். ஸ்ரீ.வே ஏமாற்றவில்லை

சுல்தானியர் படையெடுப்பை அறிந்து பிள்ளைலோகாச்சாரியார் தலைமையில் ஒரு குழுவினர் எம்பெருமானின் உத்ஸவ மூர்த்தியுடன் தெற்கே செல்கின்றனர். ஸ்ரீமான் வேதாந்த தேசிகர் தலைமையில் அரங்கனுடய மூல விக்ரகத்தை மறைத்து செங்கலால் சுவர் எழுப்பப் படுகிறது. உத்ஸவ மூர்த்தியுடன் சென்றவர்கள் காட்டு வழியாக செல்லும் போது பல இல்லல்களுக்கு ஆளாகிறார்கள். பிள்ளைலோகாச்சாரியார் வழியில் ப்ராணன் விடுகிறார். மற்றவர்கள் விக்ரகத்துடன் மதுரை சென்று அங்கு அழகர் மலையில் சில காலம் இருக்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொறு இடமாக சென்று கடைசியில் மைசூர் அருகே உள்ள மேல்கோட்டைக்குச் சென்று அங்கு 18 வருடங்கள் இருக்கிறார்கள்.
பிறகு சத்தியமங்கலம் வந்து, அங்கிருந்து சுல்தானியர்களுக்கு பயந்து மீண்டும் மேல்கோட்டை சென்று கடைசியில் திருப்பதி நோக்கி பயனிக்கிறார்கள். அரங்கனுடன் செல்பவர் எண்ணிக்கை இப்பொழுது ஐந்தாக குறைந்திருக்கிறது. அதில் மூவர் இறந்திட, ஒருவர் பிரிந்திட, ஒருவர் மட்டும் திருப்பதி மலையில் காணாமல் போய் விடுகிறார். பத்தொன்பது வருடங்களுக்கு பிறகு அவரையும் அரங்கனையும் திருப்பதி மலையிலுள்ள காடுகளில் கண்டு பிடித்து மேலும் பத்து வருடங்கள் கழித்து விஜய நகர அரசர்களின் உதவியுடன் சுல்தானியர்களை தோற்கடித்து திருவரங்கத்தை கைப்பற்றி அரங்கனை அவருடைய கோயிலில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அப்போது நூற்றியிரண்டு ப்ராயம் அடைந்திருந்த வேதாந்த தேசிகரை வரவழைத்து அவரால் மூலவருக்கு முன் எழுப்பப்பட்ட சுவரை திறக்க வைக்கிறார்கள். நித்திய பூஜைகள் அன்று முதல் தொடங்கப் படுகின்றன.

நான் சிறு வயதில் ஓடி விளையாடிய கோயில். சற்று பெரியவளானவுடன் அரங்கனின் அழகையும், கோயிலில் கொண்டாடப்படும் பல உத்ஸவங்களையும் மிகவும் அநுபவித்திருக்கிறேன். இப்போதும் வருடத்தில் இரண்டு மாதங்கள் எங்களுடைய வீதி வழியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிக்க முடியாமைக்கு வருத்தப்படுகிறேன். இந்த நூலைப் படித்து முடித்த பின் உடனே அங்கு செல்ல ஆவலாக இருக்கிறது. நான் அங்கு இருந்த வரை கூடிய வரை தவறாமல் செல்லும் உத்ஸவம் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து சமயங்களில் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பெருமாள் சன்னதிக்கு எழுந்தருள்வதும் அங்கு ஏகாந்த வீணையும், பங்குனி உத்திரத்தின் போது தாயரும் பெருமாளும் சேர்ந்து இருப்பது, யானை மற்றும் குதிரை வாஹனங்கள், தேர் (இவை மூன்றும் என் வீட்டின் வாசலிலேயே கிடைக்கும் தரிசனங்கள்).


அடுத்தது எல்லாருக்கும் தோன்றுவதுதான்....

வயது ஏறுவதை .........................



வயது ஏறுவதை உணர்ந்தேன்
ஆண்டவன் சன்னிதியில் அதை கொடு இதை கொடு
என்று கேட்ட நாட்கள் போய்
அவனுக்கு தெரியாதா நமக்கு என்ன கொடுப்பது
என்ற எண்ணம் வந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

டீன் ஏஜ் பெண்களின் எதற்கெடுத்தாலும்
க்ளுக் க்ளுக் கைப் பார்த்து, என்ன லூசுத்தனம்
என்ற எண்ணம் வந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

சாம்பார் படம் என்று சானல் மாற்றிய காலம் போய்
ஆஹா ஜெமினி படம் நல்லாருக்கே என்று
பார்க்க உட்கார்ந்த போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

ரஜினி ஸ்டைலில் மாடி ஏறிய பின்
பத்து நிமிட ஓய்வு தேவை பட்ட போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

60 கி.மீ ஸ்பீடில் பைக்கில் போக ஆசைப்பட்டது போய்
40கி.மீ க்கே என்னதுக்கு இவ்வளவு வேகம்
என்று கேட்கும் போது
வயது ஏறுவதை உணர்ந்தேன்

கண்ணாடியில் பார்க்கும் போது தெரியும்
நரை முடியும்
தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும்
இரு குழந்தைகளும்
அது உண்மை என்று உறுதி படுத்தின

அம்மா வீட்டுக்கு சென்ற போது
வயதான காலத்திலும்
உனக்கு பிடிக்கும்னு
கேசரி பண்ணினேன் என்று
ஆசையாக அம்மா கொடுத்த போது
மீண்டும் குழந்தையானேன்.

2 comments:

கிவியன் said...

கிறுக்கல் காணாமல் போய்விட்டதா? ஏன்?

வகுப்பறையில் இதே போல் தொடந்து எழுதுவாய் என நம்புகிறேன்.

ஜெயந்தி நாராயணன் said...

ஏன்?? பதிவின் தொடக்கத்தில் பார்.

தொடர்ந்து எழுத முடியுமா பார்க்கிறேன்.
நாம் எழுதுவது முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் இல்லயா?