1. சமீபத்தில் எப்போது மன்னிப்பு (sorry) கேட்டாய்?  இல்லை கேட்டிருக்கலாம் என்று பின்பு தோன்றிய சம்பவம்?
மிக சமீபத்தில் கேட்டது ஒரு முதுநிலை பட்ட வகுப்பு மாணவியிடம். SQUID எனப்படும் மிக நுண்ணிய அளவு காந்த சக்தியை அளக்கும் உபகரணத்தை உபயோகிக்க வேண்டி அதில் ஏற்கனவே அந்த மாணவி செய்து கொண்டிருந்த பரிசோதனை அளவையை (Test measure) நான் ஸ்டாஃப என்பதால் அதை பாதியில் நிறுத்தி என்னுடைய சோதனையை தொடங்கி வைத்தேன். இந்த ஸ்குவிட்  என்பது இயங்குவதற்கு விலை அதிகமாகும் ஒரு உபகரணம். இதனை இயக்க திரவநிலையாக்கப்பட்ட நைட்ரஜனும், ஹீலியமும் தேவை. இதில் திரவ ஹீலியம் ஒரு லிட்டருக்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 250 மேல் ஆகும் . ஒரு நாளைக்கு கிட்டதட்ட 10-20லிட் ஒரு சோதனை ஓட்டத்துக்கு ஆகும்.  அதனால் இந்த உபகரணத்தை சும்மா வைத்திருக்க முடியாது.  நான் சென்று பார்த்த போது முந்திய ஓட்டம் அதிகாலை 4 மணிக்கு முடிந்து அடுத்த சோதனை ஒட்டம் துவங்குதற்காக காத்துக்கொண்டிருந்தது.  மணி காலை 11 ஆகிவிட்டிருந்தது. இந்த பெண்ணை காணவில்லை. சரிதான் இன்று வரவில்லை போல என அவளுடையதை நிறுத்தி என்னுடையதை தொடங்கிவிட்டேன். ஒரு அரை மணி கழித்து இந்த பெண் வந்து நிற்கிறாள், என்னிடம் மன்னிப்பு கேட்டு. என்னடா விஷயம் என்றால், காலையில் பல் வலி, அதனால் பல் மருத்துவரிடம் போக நேர்ந்தது, அதான் தாமதம். தான் இன்னொரு ஆராய்ச்சி மாணவரிடம் இது பற்றி போன் செய்து சொன்னதாக கூறினாள். அந்த நபர் என்னிடம் சொல்லவில்லை. எனக்கு நான் செய்தது தவறாக பட்டது.  தவறு என்னுடையதுதான், உன் பரிசோதனையை நிறுத்தும் முன்பாக நான் விச்சாரித்திருக்க வேண்டும். மன்னித்து விடு என்றேன். அந்த பெண் ஐய்யோ நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கனும் நீங்க ஸ்டாஃப் ஆச்சே, நான் தான் உங்களுக்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும் என்றாள். போகட்டும் என்று அப்போதுதான் துவங்கிய என் பரிசோதனையை நிறுத்தி (terminate) நீ உபயோகித்துக்கொள் என்று சொன்னேன். ஒரு பெரிய புன்னகையுடன் பல நன்றிகள் சொன்னாள். சில சமயம் சீனியர் என்கிர இறுமாப்பில் தவறுகள் நடந்துவிடுவதை எண்ணி வெட்கப்பட்டேன். 
பிறகு நம் வகுப்பு தியாகராஜனிடம் இது பற்றி விளக்க வேண்டாம் என நினைக்கிறேன். மனைவியிடம் மன்னிப்பு கேட்க்க யோசிப்பதேயில்லை. சில சமயங்களில் பையனை கோபித்துக் கொண்டு பின்பு மன்னிப்பு கேட்கலாமா வேண்டாமா என்று உள் மன போராட்டமும் பட்டதுண்டு. எனினும் மன்னிப்பு நாக்களவில் இல்லாமல் ஆத்மார்த்தமாக் இருந்தால் உங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும். 
2. தேர்தலில் ஓட்டு போட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் போடவில்லை என்று விளக்க முடியுமா? அப்படி ஓட்டு போடாத போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீங்கள் விமர்சிப்பது சரியா?
உலக சரித்திரத்தில் ஜனநாயகம்தான் ஆக சிறந்த ஆட்சி முறை என்பது இப்போது நாம் கண்கூடாக காண்பது. இந்த ஜனநாயகத்தின் உயிர்நாடி போன்றது தேர்தல். ஜனநாயக முறை உள்ள எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் நுட்பமாக பார்த்தால் குறைந்த சதவிகித  மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்களே மீதி இருக்கும் பெரும் சதவிகித மக்களை ஆளும் உரிமை பெறுகிறார்கள்.  ஆக பணபலம் கொண்ட சக்திகள் தங்களுக்கு ஏற்ற ஆட்சியாளர்களை அமைக்க முடிந்த அளவு முயற்சி செய்வார்கள். இப்போது இந்தியாவில் ஜாதி அடிப்படையில் பல கட்சிகள் கூட்டணிகள் என்று ஆகிவிட்டதால், சிந்திக்கும் பலரும் ஓட்டு போடாமல் ஒரு ஓரமாக இருந்து கொண்டு இப்படி நடக்கிறதே அப்படி நடக்கிறதே என்றால் தவறு யாருடையது? பட்டியலில் பேர் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று  தெரிந்து வைத்துக் கொள்ளவதை பற்றி நாம் அக்கறை கொள்வதேயில்லை. எனக்கென்னவோ சில நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் (Mandatory voting) கட்டாய ஒட்டுரிமை  முறையை கொண்டுவர வேண்டுமோ என்று தோண்றும். ஆனால் இப்போதிருக்கும் நிலையில் சாத்தியமில்லை. பின்நாளில் சாத்தியமாகலாம்.    மதுரையில் கல்லுரியில் படிக்கும் போது ஒரே ஒரு முறை சட்டமன்ற தேர்தலில் பழங்காநந்த்தம் தொகுதிக்காக பாணை சின்னத்தில் போட்டியிட்ட ஒரு சுயேட்சைக்கு ஓட்டு போட்டதுதான் என் முதலும் இதுவரை கடைசியும். 23 ஓட்டுக்கள் பெற்று டெபாசிட் இழந்த அந்த சுயேட்சை, யார்ரா இந்த கேனையன் என்று யோசித்திருக்க கூடும்.   
நியுசி வந்த பின் நடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில் லேபருக்கு ஓட்டு போட்டது கடைசி. இப்பவோ அப்பவோ என இருக்கும் யுக்கேயில் அநேமாக அடுத்த வருடம் தேர்தல் நடக்கும்  வாய்ப்பிருக்கிறது. பார்ப்போம் நமக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று. இந்த நாடுகளில் ஒருவர் புதிதாக நாட்டில் வசிக்க வந்தால் மிக முக்கியமாக் செய்வது ஓட்டாளர் பட்டியலில் உங்கள் பெயரை பதிவது.  வீட்டு முகவரிக்கு கடிதத்துக்கு மேல் கடிதமெழுதி பதிவு செய்யாமல் விடமாட்டர்கள்.
3. கடவுள் நம்பிக்கை உண்டா?
மனிதனின் மிக தொன்மையான கண்டுபபிடிப்புகளில் ஒன்று கடவுள் அல்லது நம்மை மீறிய ஒரு சக்தி.  வளரும் போது வீட்டில் பெற்றோர் மூலம் நமக்கு வந்து சேரும் பல ஞானங்களில் இந்த கடவுள் பக்தியும். யோசித்து பார்த்தால் நம்முடைய பல பழக்க வழக்கங்கள் நம் விருப்பு வெறுப்பின்றி நாம் வீட்டில் வளரும் சூழ்நிலையிலிருந்து  ஒரு அனிச்சை செயல் போல் ஒட்டிக்கொள்ளும். உதாரணத்துக்கு சைவ உணவு பழக்கம். சாப்பாட்டில் முட்டை கூட சேர்க்காத சுத்த சைவமாக வளர்ந்தும், இப்போது ஆம்லெட் என்றால் மிகவும் விருப்பமாக இருக்கிறது. இதற்காக மன உளச்சல் எல்லாமா கொள்ள முடியும்? கிட்ட தட்ட கடவுள் நம்பிக்கையும் அப்படிதான். ஒரு காலத்தில் காலையில் எழுந்து குளித்து, பளிச் சென்று திருநீர் அணிந்து கண்மூடி தெரிந்த நாலு சுலோகங்களை சொல்லிவிட்டுதான் வெளியே செல்லும் பழக்கமிருந்தது. இப்போது பாழ் நெற்றி,  எழுந்தோமா காலை சிற்றுண்டி சாப்பிடோமா வேலைக்கு ஓடினோமா என்று மாறிவிட்டது. இது பற்றியும் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆக இப்படி சில குல வழக்க வரம்புகள் மீறி வசதிகள் எல்லாம் செய்து கொண்ட பின்பும் பகவான் ஒன்றும் பெரிதாக் தண்டனை வழங்கிவிடவில்லையாதலால், இப்பொது பகவானையே நீ இருக்கியா இல்லியா என்று தர்க்கம் செய்யும் அளவுக்கு ஒரு (அசட்டு!!) தைரியம் வந்துவிட்டது.  தர்க்க மனத்தில் இப்படி கேள்வி ஏதுமின்றி கடவுள் என்ற நம்பிக்கையை ஏற்க முடியாது. தண்ணீரில் நடப்பது, இல்லாததை கொண்டுவருதல் என எதாயாவது மாயை எதிர்பார்க்கும். இன்னும் சில இதையும் கண்கட்டு வித்தை என்று ஏற்க மறுக்கும்.   டார்வின் எல்லாம் ஒன்னுலேர்ந்துதான் வந்தது என்று காட்டினாலும் அந்த ஒன்னு எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அவர் போகவில்லை.ஆனால் அந்த கேள்விக்கு பதில் கடினம்.
ஆக உன்னால் உணர இயலவில்லை என்றால் அது இல்லை என்றாகிவிடுமா என்ற கேள்விதான் இன்றளவும் மனிதனை தேட வைத்து  பல ஞானிகள், முக்தி அடைந்தவர்களை நாம் காண்கிறோம். இவர்களை எப்படி புரிந்து கொள்வது அல்லது நம்புவது?  என்னை பொருத்த வரை எனக்கு நானேதான் தேடிக்கண்டுகொள்ள வேண்டும். The Guru is in you.
4. வழகத்திகலிருந்து மாறுபட்டு எப்போதாவது எதையாவது புதிதாக முயற்சித்தது உண்டா?
எதையும் ஒரு முறை என்பது எனக்குள் இருக்கும் குருகுருப்பு. தீயில் விரல் வைத்து தீண்டி பார்க்கும் குணம். அதனால் அவ்வப்போது எதையாவது செய்துவிட தோண்றும். மும்பயில் இருந்த போது சும்மா trekking என்று ஆரம்பித்தது பின்பு தீவிரமாகி, பாறை ஏற்றம், trekking route marking என்று போய் அதற்கு முத்தாய்ப்பாக உத்தர்காசியிலிருக்கும் Nehru Institute of Moutaineering மூலம் 32 நாட்கள் மலையேறும் பயிற்சி மேற்கொண்டு இமய மலைத்தொடரில் இருக்கும் 18,000 அடி உயர யமுனோத்ரி மலைதொடர் (yamunotri massif) உச்சி ஏறியது என் வாழ்வில் மிக உன்னதமான நிகழ்வு. அதன் பின்பு Mt. Kanjanjunga  ஏறும் குழுவில் என்னால் தேர்வு பெற முடியாமல் போனது ஏமாற்றம்.   இந்தியர்களுக்கு, இந்த பக்கத்து நாடுகளில் இலைமறை காய்மறையாக Armchair sportsmen என்ற நாம கரணம் உண்டு. கிரிகெட் தவிர்த்து வேறு ஏதாவது வருமா என்று கேட்பார்கள். இதற்காகவே வெற்றி தோல்வி பற்றி கவலை படாது பங்கெடுப்பதே பெரிய விஷயம் என்று இந்த வருடம் நடந்த Edinurgh Raft Raceல் பாரத்வாஹினி என்ற பெயரில் ஒரு ஓடம் செய்து நம்ம பசங்கள வைத்து போட்டியிட்டோம்.  
5. சமீபத்தில் எதாவது விளையாட்டில் (வீட்டுக்கு வெளியே)  ஈடுபட்டது உண்டா? இல்லை என்றால் ஏன் விளையாட தோண்றவில்லை என்று யோசித்தது உண்டா?
விளையாட்டு என்பது நமக்குள் இருக்கும் மிருகத்தனத்துக்கு ஒரு வடிகால் மாதிரி. அதுமட்டுமல்ல ஒரு அரைமணி நேரம் விளையாடினால் கூட நாம் விளையாடும் சமயம் நம் மனம் ஒரே சிந்தனையில் இருக்கும். அதாவது கிட்டதட்ட தியானத்தில் மனதை ஒரு முகப் படுத்துவது போல உங்கள் சிந்தை தாறு மாறாக ஓடாது. நீங்கள் அடுத்த முறை விளையாடும் போது இது பற்றி யோசித்து பாருங்கள். அதனால்தான் எதாவது விளையாட்டில் ஈடுபடுவது உடல் மற்றும் மனதுக்கு மிகவும் நல்லது.
மதிய உணவு இடைவேளையில் கால்பந்து விளையாடுவது. சமீபத்தில் விளையாடியது  ரஃக்பி, க்வாஷ் (Squash) மற்றும் நீண்ட நாட்களுக்கு பின்பு மரமேறியது. பள்ளி நாட்களில் பழைய TVS பள்ளி க்ரெளண்டில் இருக்கும் மரத்தில் ஏறியது என்று ஞாபகம் அதன் பிறகு இப்போது என் குழுவில இருக்கும் ஆராய்ச்சி மாணவன் உன்னால் ஏற முடியுமா என்று சவால் விட்டதால் சரி ஏறித்தான் பார்ப்போமே என்று. முடிந்தால் ஏறிப்பாருங்கள், ஒரளவு ஏறினால் கூட மனம் ஆனந்தமாகும்.
6. கடைசியாக அழுதது எப்போது இல்லை மனம்விட்டு சிரித்தது??
முந்தாநேத்து, நூடுல்ஸ்சோ இல்லை சாண்ட்விச்சோ போதும், வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும்  உப்புமாதான் என்று அழிச்சாட்டியமாக என்னை அந்த பெரிய சிகப்பு வெங்காயத்தை நறுக்க சொல்லிவிட்டாள். என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை கண்களில் கண்ணீர் தாரை தாரையாக...
அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவனில்லையாதலால், எப்போது அழுதேன் என்று சரியாக கூறமுடியவில்லை. ஆனால் சிரிப்பது எப்போதுமே..எதையெடுத்தாலும் காமெடிதான்...
7. என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லை கடைசியாக படித்தது (பேப்பர்னு சொல்ல கூடாது)??
தமிழ்: ஜி. நாகரஜனின் தொகுப்பு
அங்கிலம்: Van Buitenen என்ற டச்சுகாரர் சென்ற நூற்றாண்டில் ராமானுஜரின் கீதாபாஷ்யாவை டச்சு மொழிபெயர்ப்பு செய்து பின்பு அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். மிக வித்யாசமான் கட்டமைப்பு, சென்ற நூற்றாண்டு வழக்க ஆங்கிலத்திலிருப்பதால் பொறுமையாக படிக்க வேண்டியிருக்கிறது. என்ன கொடும பாத்தியா நம்ம நாட்டு மொழில எழுதின புத்தகத்துக்கு இப்படி டச்சுகாரர் வந்து உதவ வேண்டியிருக்கு? சமஸ்கிருதத்தை ஜாதி முலாம் பூசி சாகடித்துவிட்டோம். இன்னும் வேறு எத்தனை மொழிகள் காணாமல் போகுமோ??
8.உங்களுக்கு ஏதாவது தனி திறமை இருக்கிறதா??
இந்த வலை நுட்பம் வந்த பின் நான் கண்டெடுத்தது எனக்குள் இருக்கும் எழுத்தார்வம் என்று நினைக்கிறேன். ஒரு விஷயம் (வலை நுட்பம்) நடந்தா நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நான் இத திறமைன்னு நெனச்சா,  அடப்பாவி இப்படி யெல்லாம் கிளம்பிட்டாய்ங்களேன்னு படிக்கர உங்களுக்கு  தோனும் ஞாயம்தான், என்ன செய்யரது??
9. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் (அ) போக விரும்பும் இடம் (அ) வீட்டிலிருந்து அதிக தூரம சென்ற இடம்??
பிடித்த இடம் மதுரை அழகர் கோவில் மலையில் கீழிருந்து நூபுரகங்கை வரை மரங்களடர்ந்த பாதையில் குரங்குளின் சேட்டைகளை பார்த்தபடி, கொடைக்கானல்.
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள  கொல்லி மலை, அங்குள்ள கொல்லி அருவி, மும்பையில் மழைக்கால மாதேரன், பீமாசங்கர்,  நியுசியில் தெற்கு தீபகற்பம், அதில் ஹான்மர் ஸ்ரிங்ஸ், அகரோவா, ஸ்காட்லாந்தில் ஐல் ஆஃப ஸ்கை (Isle of Skye), Inverness.
போகவிரும்பும் இடம்: உத்தர்கண்டில் உள்ள பிதோராகட், அதன் வழியே கைலாஸ் மானசரோவர், மற்றும் பூக்கள் பள்ளத்தாக்கு (Valley of flowers) முடிந்தால் அன்டார்டிகாவும், க்ளடைர் மூலம்  இவரைப் போல:
 பாலைவனமும்,  நார்வேயில் Prekestolen, ஸ்விஸில் Gstaat, Sils Maria., சீன பெரும் சுவரும்.....
10. வாழ்வில்  சந்தோஷம் என்பது?
ஒவ்வொரு நொடியும். தத்துவார்த்தமாக, மனிதனின் இயல்பு நிலை சந்தோஷமாகவே இருத்தல், ஆனால் ஒவ்வொரு மணித்துளியிலும் அவன் சிந்தனையில் காலத்தில் பின்னும் முன்னுமாக நகர்ந்து இந்த சந்தோஷ நிலையை விட்டு அகண்டு விடுகிறான்.  ஒன்று கடந்த கால அனுபவத்தை நினைத்து அல்லது அனுபவத்தின் வாயிலாக எதிர்காலத்தை அனுமானித்து இப்படியாகுமோ அப்படியாகுமோ என்று இப்போது நழுவிப்போகும் நொடியை மறந்து வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை துரத்துவதிலேயே கழிந்து விடுகிறது.  வீட்டில் இரவில் வெளிச்சம் இல்லை என்றாலும் நம்மால் நடந்து போய் ஸ்விட்சை போட இயலும், இப்படி கை நீட்டினால் டவல், அப்படி நகர்ந்தால் ப்ரிட்ஜ், ஒரே பாதை வழியாக நடந்து எப்போதும் அமரும் சோபாவில் அதே இடத்தில் அமர்வது, அதே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது. காலில் பெயிண்ட் அடித்து வீட்டுக்குள் நடந்து பாருங்கள், அங்கு இங்கு பிரழாமல் ஒரு வரையருக்கப்பட்ட பாதையிலேயே நடப்போம். யோசித்து பார்த்தால் எவ்வளவு இயந்திரத்தனமாக வாழ்கிறோம். ஒரு வித ஜீவனற்ற மாதிரி தோன்றுகிறது. வெளியில் எங்கும், எதிலும் இல்லை சந்தோஷம். இருந்தாலும், ஒரு நாள் பொழுதில் அத்தனை உணர்ச்சிகளையும் தவறாமல் கடைபிடித்து நாளைக்காவது சந்தோஷமா போகனும்னு உறங்கப்போகிறோம். என்றாவது அந்த `நாளை` வரக்கூடும் என்ற கனவில் கழியுது வாழ்க்கை.

 
 
14 comments:
ஏதோ சதி மாதிரி தெரியறதே.
பதிலை தயார் பண்ணி விட்டு கேள்விகளை கேட்டாயா?
எதுவாக இருந்தாலும் மிகவும் அருமையான அநுபவங்கள்.
//எதையும் ஒரு முறை என்பது எனக்குள் இருக்கும் குருகுருப்பு//
சுஜாதாவின் “எதையும் ஒரு முறை” ஞாபகம் வருகிறது.” வேறு எதுவும் செய்யவில்லையே?
//இமய மலைத்தொடரில் இருக்கும் 18,000 அடி உயர யமுனோத்ரி மலைதொடர் (yamunotri massif) உச்சி ஏறியது என் வாழ்வில் மிக உன்னதமான நிகழ்வு. //
”மலை”ப்பாக உள்ளது.
//பதிலை தயார் பண்ணி விட்டு கேள்விகளை கேட்டாயா?//
இதை எதிர்பார்த்தேன் நீ கேட்டுவிட்டாய். அப்படியும் இருக்கலாம்.
ஒரு விஷயம் சொல்ல மறந்து போனேன். அந்த George Steinmetzன் பாலவன ஒட்டக புகைப்படத்தில் ஒரு விஷயமிருக்கிறது அதை யாராவது கண்டுபிடிக்கிறார்களா பார்ப்போம்.
//மன்னிப்பு நாக்களவில் இல்லாமல் ஆத்மார்த்தமாக் இருந்தால் உங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும்//
//எதாவது விளையாட்டில் ஈடுபடுவது உடல் மற்றும் மனதுக்கு மிகவும் நல்லது//
உன்னுள் ஒரு எழுத்தாளன் ஒளிந்துள்ளான் போல!!! சுரேஷ், உன்னுடன் school நாட்களில் நான் அவ்வளவாக பழகியதில்லை, மீறி பழகியிருந்தாலும் அது அந்த விடலை மற்றும் சுள்ளான் type நட்பாக தான் இருந்திருக்கும். ஆனால் இன்று உன் (மற்றும் எல்லோருடனும் உள்ள) நட்பு, ஏதோ அரும் பெரிய மக்களுடன் நட்பு வைத்துள்ளதை போல் உள்ளது. அத்தனை பேருள்ளும் எத்தனை முதிர்ச்சி.
//வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் உப்புமாதான்// - ஒ அங்கயும் அதான் போட்ராய்ங்களா ... அப்பறம் வீட்ல சமையல் எல்லாம் ஐயா தானா?
//சமஸ்கிருதத்தை சாகடித்துவிட்டோம்// - தமில் ஆவது நள்ளா வாலத்தும்.
போக விரும்பும் இடம் நிறைய உள்ளது போல - Plans உண்டா, எப்போ எப்போவென்று?
//வெளியில் எங்கும், எதிலும் இல்லை சந்தோஷம்// - ஏய் இதென்ன புது கலாட்டா. மற்ற 9 கேள்விகளுக்கும் பதிலளித்த சுரேஷ்ஆ இது? Sivakumar பதில் பார், வாழ்வில் சந்தோஷம் தினமும் (ஒரு வரி பதில், ஆனா எவ்வளவு super). சிவா எந்த அர்த்தத்துல சொன்னானோ(ரோ). ஒவ்வொரு நாளும் நாம் செயல் படுகின்ற 16 அல்லது 18 மணி நேரம், நமக்கு கிடைக்கப் பெற்றவைகளை நினைத்து, நடப்பவைகளை நினைத்து வேண்டாததை களை எடுத்து விட்டு வேண்டியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டோமேயானால் , அதுவே சந்தோஷம்.
//ஒ அங்கயும் அதான் போட்ராய்ங்களா// எங்க போனாலும் இந்த சமாசாரத்த விடமுடியாது.
//அப்பறம் வீட்ல சமையல் எல்லாம் ஐயா தானா?// எனக்கு தெரிஞ்சு ஒரு பாட்டி சொன்னது ` நம்ம ஊர் ஆம்பிளங்கெல்லாம் வீட்டு வேல செய்யனும்னா கொஞ்ச நாளக்கி அமெரிக்கா அனுப்பி வெச்சாதான் செய்வாங்க`ன்னு. அது மிகவும் சரியானது என நினைக்கிறேன்.
//தமில் ஆவது நள்ளா வாலத்தும்// இப்பலியாவது நல்லா வாலத்தும், ஆங்கிலத்துக்கு வாலாட்டாம.
//வெளியில் எங்கும், எதிலும் இல்லை சந்தோஷம்// ம்ம் இது மிக உயர்ந்த யோக சித்தாந்தம். நல்லா உட்கார்ந்து யோச்சிச்சு பாரு. அதான் முதல் வரியிலேயே //ஒவ்வொரு நொடியும்//னு சொல்லிட்டோம்ல.
//பாலவன ஒட்டக புகைப்படத்தில் ஒரு விஷயமிருக்கிறது அதை யாராவது கண்டுபிடிக்கிறார்களா பார்ப்போம்//
தெரியலயே
ஏதாவது க்ளூ????
அந்த புகைப்படத்தில் கருப்பாய் பெரிதாய் தெரியும் ஒட்டகங்கள் நிஜமல்ல. சற்று உற்று கவனித்தால் நிஜ ஒட்டகங்களை காண முடியும். இயற்கையி நிகழும் இந்த ஜாலத்தை மிக அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் ஜார்ஜ்.
ஒட்டகமா 'ஒட்ட' கம்மா'? ஒன்னும் தெரியல்லேயே சாமியோவ்!!
இப்பதான் யானைய பரிசோதன பண்ணிருக்க ஒட்டகம் தெரியரது கொஞ்சம் கஷ்டம் தான்.
இன்னொரு உபாயம்:
படத்தில் பெரியதாய் கருப்பில் தெரிவது ஒட்டக்ங்களின் நிழல். அந்த நிழல் ஒட்டகங்களின் காலடியில் பார்த்தால் தெரியும் நிஜ ஒட்டகங்கள் பழுப்பாய். இது மாலை சூரிய அஸ்தமனத்தின் போது ஒட்டகங்களின் நிழல் நீண்டு பாலைவனத்தின் மணற்பரப்பில் விழுவதை க்ளைடர் மூலம் மேலிருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. இப்ப தெரியுதா?
சர்தான்!! நாம வேற வேற போடோவை பார்த்திட்டிருக்கொமுனு நினைக்கிறேன்!!
எனக்கு தெரியற படத்திலே ஒருத்தன் parachute பிடிச்சிட்டு பனியிலே ரெண்டு ஜீப் முன்னாடி நிக்கறான்!
Sree நானும், உன் கட்சி ... ஒண்ணுமே தெரியலப்பா ... பாக்குறதுக்கு, மாரியாத்தா வரம் கொடுக்கணுமோ?
அடப்பாவி மக்கா, வேல மெனக்கெட்டு வல தொடுப்பு குடுத்து தடித்த சொற்கள்ள(bold-letters) எழுதினா எங்கன்னு கேக்குறியே?? பதிவில் உள்ள தடித்த சொற்களை க்ளிகினால் அந்த வலை பக்கத்துக்கு எடுத்துச் செல்லும்.
சுரேஷ் ,
அது சரி.. எல்லாரையும் எதுக்கு புகைப்படத்துக்கு divert பண்ணிட்டே . உன்னுடைய உண்மையான பதிலுக்கு நன்றி. உன்னுடைய கடைசி கேள்விக்கான பதில் எதையோ எங்களுக்கு .உன்னுடைய நோக்கத்தை குறிப்பிட விரும்புகிறது .
மானசரோவர் போனா எனக்கும் தகவல் கொடுப்பா நானும் கலந்துகிறேன் .
அங்கே கிரி வளம் போகனும்னா சீனா கிட்ட permission வாங்கனும்னு கேள்வி பட்டேன் .செக் பண்ணிக்கோ .
மற்றபடி எதாவது கலக்கமா இருந்தா சொல்லு .சென்னை வந்தால் டாஸ்மாக் போகலாம் .எல்லாம் சரியாய் போய்டும்
தாமு,
வெறும கேள்வி பதில் போரடிக்கப்போகுதேன்னு தான்..
சீன அனுமதி நான் அறிந்ததே, எனினும் தகவலை ஞாபகமூட்டியதற்கு நன்றி.
அடுத்த வாட்டி சென்னை வந்தா நேரா டாஸ்மாக்தான், ஊறுகா பாக்கெட்டோட ஏர்போர்ட் வந்துடு...
Post a Comment