Thursday, May 31, 2012

எண்ணத்தை பதிவு செய்



இந்த பதிவு தலைப்ப “என்னத்த பதிவு செய்ய?” அப்படின்னுதான் வெக்கனும்னு நெனச்சேன் ஆனா கொஞ்சம் கவித்துவமா இருக்கட்டுமேன்னு தான் மாத்தினேன்.

 என் தனிவலையில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். முற்றிலுமாக என சொல்ல முடியாது அவ்வப்போது தோன்றுவதை கேள்விப்படுவதை 140 எழுத்துக்களில் எழுதிக் கொண்டுதானிருக்கிறேன். நான் தொழில்முறை எழுத்தாளன் இல்லை பாருங்கள். சில சமயம் நீ ஒஹோன்னு எழுதரன்னு ஒன்னு ரெண்டு பேர் பாராட்டிட்டாங்கன்னா, மேலும் எதையாவது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் கூட வந்ததுண்டு. ஆனா கூடவே காதில் விழும் அடுத்தவன் கைத்தட்டலுக்காக எழுதுபவன் கேளிக்கையாளன் தாளகதிக்கேற்ப சதிர் மாறும் அப்படின்னு வேர தோன்றியதால் எழுதுவது குறைந்து கிட்டத் தட்ட நின்றே போனது. ஆனால் உள்ளே எதுவோ நெம்பி தள்ளும் போது அவ்வப்போது அஞ்சலில் எழுதுவதோட சரி. என் கதி இப்படி இருக்க இந்த வகுப்பறைல யாரும் எழுதரது இல்லேன்னு குறை சொல்லவா முடியும்??. எழுதுவது என்பது எப்படி என்றால் பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட நார் போல அத எடுத்தாதான் நிம்மதியா இருக்கும். அது மாதிரி ஒரு சின்ன பொறி மனசுல தோன்றி அத எழுதிமுடிச்சுட்டுதான் மறுவேலை என்பது போன்ற நிலை வந்தாலே எழுத முடியும். எழுத ஆரம்பிப்பதற்கு முன் நிறைய படிப்பது மிக மிக அவசியம். படிப்பதற்கா பஞ்சம்? எவ்வளவு இருக்கிறது. படிக்க நமக்கு இந்த ஆயுள்தான் போதாது, கண்களில் ஒளியிருக்கும் போதே படிப்பது நல்லது.

அட இருகங்கப்பா அப்படியே மெளச க்ளிக் பண்ணி வேர பக்கத்துக்கு போயிராதீங்க. 

வகுப்பறையில் ஒரு புள்ளிவிவரம் எடுத்தா சிவா, ஜெயந்தி, நான் எப்பவாவது தல, தாமு, இவர்களை தவிர வேர யாரும் எழுதுவது இல்லை (படிப்பதும் இல்லை அப்படின்னு ஒரு கோரஸ் கேக்குது). ஆனா இப்படி ஒரு நாலு பேர் வந்ததே பெரும் விஷயம் என்றுதான் தோண்றுகிறது.

கலந்து கட்டியாக நான் கண்டது கேட்டது படித்ததிலிருந்து சில:

ஒருவன் பல கொலைக் குற்றம் செய்து வந்ததன் பயனாய்ச் சர்க்காரால் தூக்கிலிடப்பட்டான். அவன் மகன் வெளியிட்ட கருமாதிப் பத்திரிகையின் படி அந்தக் கொலைகாரன் வைகுண்டம் போனதாய்த் தெரிகிறது. தக்க போலீஸ் காபந்து இருந்தாலொழிய, வைகுண்டத்திற்கு எவரும் போகவேண்டாம்!
-பாவேந்தர் பாரதிதாசன் ”விடுதலை” நாளிழதில்

மேலும் இப்ப சமீபத்துல நாம் விவாதிச்சிட்டு இருக்குறது சமூக சேவை பற்றி, இதப் பத்தி பாவேந்தர் எழுதியிருக்கும் கவிதைய பாப்போம்: குடும்ப விளக்கு தொகுதியிலிருந்து:

பொதுத்தொண்டு செய்தோமா?

அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?

"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக் காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.

சும்மா அப்படியே சுளுக்கெடுத்தா மாதிரி இருந்தாலும்..படிச்சுட்டு டீவிய போட்டு விஜய் சூப்பர் சிங்கர்ல மூழ்கிட்டோம்னா அப்புறம் தெளிவடஞ்சுடுவோம். இப்படியேதான போய்டிருக்கு வாழ்க்க.

அநேகமா எல்லோரும் ஒத்து வர மாதிரி சொல்லியிருப்பது ஏற்கனவே இந்த மாதிரி சமூக சேவை செய்யும் நிறுவனமோ இல்லை குழு மூலமாக நாம் உதவலாம் என்பது. நம்மிடையே நேரடியாக சமூகப் பணியில் அனுபவம் பெற்றவர்கள் யாரும் (எனக்கு தெரிந்து) இல்லாததால் இந்த வழி சரியாகப் படுகிறது. இப்பதான் வேதாளம் மரமேர ஆரம்பிக்கும், அதாவது நான் சொல்லும் நிறுவனமே சிறந்தது இவர்களுக்குத்தான் உதவ வேண்டும் என்று முயலுக்கு மூணே கால் என நிறுவ தோன்றும், இதை யோசித்துதான் சாமுவேல் தயங்குகிறான் என நினைக்கிறேன்.

மதுரை சந்திப்பின்போது மிக சிறிதே பேச கிடைத்த சந்தர்பத்தில் அசோக் சமூக சேவையில் நேரடியான அனுபவம் உள்ளவன் என தெரிந்துகொண்டேன். பல திட்டங்களும் உள்ளது என சொன்னதாக ஞாபகம். எதிர் காலத்தில் அரசியலிலும் ஈடுபடுவேன் என சிரித்துக்கொண்டே சொன்னதால் சீரியசாக சொன்னானா என தெரியவில்லை. எனினும் நாம் செய்ய நினைக்கும் சமூக சேவையை பற்றி அசோகனிடமும் கலந்தாலோசிக்கலாம்.

மேலும்  சமீபத்தில் பார்த்த அமீர்கானின் சத்யமேவ ஜெயதே தொடரில் சொல்லியது போல் பொதுவான மாத்திரை மருந்துகளை மலிவான விலையில் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் சேவையை செய்யலாம், இதற்காக முன்வரும் சமூக சேவை நிறுவனங்களுக்கு இரசாயனம் மற்றும் உரதொழிலக அமைச்சகம் ரூ. 50,000 உதவித்தொகயை மலிவு விலை மருந்தகம் அமைக்க வழங்குகிறது. இது பற்றி மேல் விவரங்கள் இங்கு. சற்று வித்தாயாசமாக் செய்ய நினைத்தால் இந்த சேவையை பற்றி யோசிக்கலாம். தமிழ் நாடு முழுவதும் கிளைகள் உண்டாக்க உதவலாம்...பெரிய கனவுதான் (நம்ம கலாம் சொன்னா மாதிரி)

மற்றும் ஒரு நிறுவனம் நியுஸிலாந்து (பெண்)எழுத்தாளர் ஜீன் வாட்சன் என்பவரால் 1991ல் திண்டுகல் மாவட்டம் நிலக்கோட்டையில் நிறுவ பட்ட கருணை இல்லம். இவர்களது சமுக சேவை பற்றி எனக்கு ஜீன் வாட்சன் மூலம் தெரியும். தான் இருந்த வீட்டை விற்று, தனக்கான செலவுகளை குறைத்துக் கொண்டு அங்கு கருணை இல்லத்துக்காக சேமித்து நிதி அனுப்புகிறார். இங்கு தமிழ் சமூகமும், இன்னும் பல தனி ஆர்வகலர்களும்,  எதாவது கலைவிழா, ஓடுவது சைக்கிள் ஓட்டுவது மூலம் நிதி திரட்டி உதவுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கு. இது மிகவும் நம்பிக்கையான ஒரு சமூக நிறுவனம்.

நான் இட்டது சில புள்ளிகள்,
அன்பர்கள் மேலும் கூட்டலாம்
ஒன்றாய் இணைந்து கோடுகள் வரையலாம்
புதுக் கோலம் ஒன்று  மலரந்திடவே!

2 comments:

ஜெயந்தி நாராயணன் said...

சுரேஷ்,

உன்னை பார்த்தால் மிகவும் பொறாமையாக இருக்கிறது. படிக்க முதலில் நேரம் குறைந்து இப்ப ஆர்வமே குறைந்து விடுமோ என்று பயமாக இருக்கிரது. சத்தியமாக சொன்னால் ஒரு அரை மணி நேரம் கிடைத்தால் சற்று கண்ணை மூடி ரிலாக்ஸ் பண்ணலாமான்னு தோன்றது.. படிக்க ஒரு லிஸ்டும் பார்க்க ஒரு லிஸ்டும்(நல்ல படங்கள் சில) வைத்திருக்கிறேன். 3, 4 மணி நேரத்துக்கு ஒரு முறை மெயில் செக் பண்ணுவதே ஒரே பொழுது போக்காக மாறி விட்டது.

படித்தவற்றை படித்தவர்கள் இங்கு பகிர்ந்து கொண்டால் அதையாவது படிக்கலாம்.

சமூக சேவை, முதலில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு நிதி சேரட்டும். கண்ணன் சீக்கிரம் விசாரித்து சொல்வார் என நம்புகிறேன்.

கவலைப்படாதே.. உன்னுடய புள்ளிகள் இன்னும் பல புள்ளிகளுடன் சேர்ந்து ஒரு அழகான கோலமாக உருவாகும்.. உருவாக்குவோம்..

Siva said...

Kiwi சித்தரே
நீர் தொண்டு (சமுதாயம் மற்றும் தமிழ்) வாழ்க. ஜெயந்தி சொன்னது போல் எப்புடி உன்னால் இவ்வளவு படிக்க முடிகிறது, அது மட்டுமல்லாது அதை பற்றி பொறுமையாக எழுத முடிகிறது. நம்மால் ஆகாது சாமி..எனக்கு நீ போட்ட ரெண்டு புள்ளிகளும் ரொம்ப பிடித்தது. வேறு ஒரு தேசத்தில் பிரிந்து வளர்ந்த ஜீன் வாட்சன் நம்ம ஊரு மக்களுக்கு தொண்டு செய்ய எடுத்துள்ள முயற்சி அபாரம். இரண்டில் எதை (ஏன் இரண்டையும் ) தேர்ந்துஎடுத்தாலும் நான் உதவ தயார்.

சிவா