Friday, August 23, 2019

BSVI Fuels- Managing transition

21 Aug-2019, Meeting at Hilton Hotel Chennai
Topic: Reg BSVI Fuels- Managing transition
Organiser: R&D, Indian oil Corporation Limite
Planning to Launch BSVI Fuel by April 2020

Invitees:
1.Ashok Leyland
2. Cummins India
3. Toyota.
4. Mahindra.
5. TVS
6. TAFE

Indian Oil எதற்காக car ,Heavy Vehicles Manufacturers அழைத்தார்கள் .அவர்கள் தற்போது கொண்டிருப்பது BSIV Fuel engine design .

இந்த meeting மெயின் reason is 

Are they prepared to design their engine for this BSVI fuel.
IOC is is proud to announce that this fuel is going to be 100% Eco friendly

அவர்கள் கூறிய ஒரு உதாரணம் சீனாவில் வரும் எண்ணெயில் 50 முதல் 150 PPM இருப்பதாக தகவல் .நமது refined ஆயிலில் max 50 PPM and less இருப்பதாக உறுதி அளித்தார்கள் .Target is to bring to 10 PPM by 2020.
நல்ல விஷயம் .

பிறகு ஒவ்வொரு vehicle manufacturing company புலம்பல் . தற்போது கொண்டிருக்கும் BSIV fuel engine design development .அதில் அவர்கள் பட்ட commercial and technical  கஷ்டங்கள் . புது BSVI fuel எதிர் நோக்க அவர்கள் கொண்ட ஆயத்தங்கள் .வந்தவர்கள் எல்லாம் GM and above category .அவர்கள் சீட் கீழே மேலும் நெருப்பு பத்த வைக்கப்பட்டிருப்பதை நன்கு புரிந்து பேசினார்கள் .

Note :

1. எல்லோரும் EV (Electrical vehicle ) பற்றி கொஞ்சம் பேசினார்கள் .அது பரவலாக வருவதற்கு நாள் செல்லும் என்பதே பொதுவான கணிப்பு .ஏனென்றால் அவர்களிடம் customer survey report நிறய கேள்விகள் தாங்கி நிற்கிறது.
 
2. IOC  எதிர்கால நம்பிக்கை Hydrogen blended fuel என்று ஆணித்தரமாக நம்புகிறது .For  zero pollution ,Hydrogen blended CNG தான் எதிர் காலத்தில் இந்தியா வாகனங்கள் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள் .

3. Toyota நிறுவனம்  ஒரு வீடியோ க்ளிப்பிங் காண்பித்தார்கள். அதில் ,தண்ணீரை ஆதாரமாய் கொண்டு Hydrogen தனியாக பிரித்தது ஒரு receiver tank இல் அடைத்து ,oxygen தனியாக எடுத்து engine combustion க்கு உள்ளுக்குள் உற்பத்தி செய்து pollution free vehicle காண்பித்தார்கள் .Quite interesting .

4. Mr.Ashvath Ram ,MD -Cummins India  நம் கிஷ்ணனின் Ex Boss . Trends Impacting the Auto Industry ன்னு சொல்லி மூணு topic போட்டார் ( Fire triangle மாதிரி)

a .CASE ( connectivity,Autonomous, subscription, Electrification)
b.Technology trends.
c.Emission trends.

(கிருஷ்ணன் ரகசியமா ஒரு விஷயம் சொன்னான் அவர் கம்பெனி engine என் கிட்ட தள்ள பாக்குறார்ன்னு )



இந்த மீட்டிங்கில் கதாநாயகன் நம்ம கிருஷ்ணன்தான் .அவ்வளவு பேர் மத்தியில் அவன் விளக்கத்தைதான் அனைவரும் விரும்பினார்கள் .

அவனுடைய preparedness on receiving BSVI fuel for engines ,அதனால் அவன் அதிகப்படியாக கொண்டு வரும் integral logical control systems , அதன் sensors, detectors .அவனுடைய presentation என்னை பிரமிக்க வைத்தது .

ரொம்ப சுத்தமாக ஒரு innovative presentation கொண்டு வந்திருந்தான் .

with a positive nod he invited the BSVI fuel on April-2020. (his comment is no body can fool around on April)

Eventhough it is going to be a good home work ,he concluded that this is inevitable.

During Lunch every one wants to talk with Krishnan. I was totally a silent watcher.

Thankyou Krishna for this Oppertunity


Thursday, September 27, 2018

மக்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.  அனைவரும் நலமா?
ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்தேன்.  ஒரு அப்டேட்டும் இருக்காதுன்னு வந்தா தாமுவோட பதிவு. 

சரி நாமளும் எழுதலாமேன்னு தோணித்து.  இருபத்தைந்து வருடத்திய நினைவை அசை போட ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூவில் இப்ப கடந்த பத்து வருட நினைவுகளை எழுதலாம் போல உள்ளது.  ஒரு வேளை எனக்கு மட்டும் தோணலாம், ஒரு இடைவெளி ஏற்பட்டதால்.

ஜோ, ஸ்ரீ, கமலா கூட டச்ல தான் இருக்கேன் ஃபேஸ்புக்ல.  என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம், அதிருப்தி இருக்கலாம், எதையும் வெளிப்படையாக பேசியதால், எல்லாவற்றிற்கும் கருத்து கூறியதால், சில சமயம் அறிவுரை கூறியதால்.  மன்னிச்சு ஃபார் தட்.

என்னால, எல்லா சந்திப்புகளிலும் கலந்து கொள்ள முடியாது போகலாம்.  அதானல் நட்பு இல்லை என்று ஆகி விடாது.  என்னமோ இன்று இந்த வகுப்பறை வந்த உடன் பழைய நினைவுகள், இதழோரம் புன்னகை வரவழைக்கிறது.  மகிழ்ச்சியான பல தருணங்கள்.  

இதை எத்தனை பேர் படிப்பீர்கள் தெரியவில்லை.  மீண்டும் குழுவில் இணையும் ஆசை வந்து விட்டது பழைய பதிவுகளை படித்ததில்.  ஆனால் மற்றவர்கள் தயாரா தெரியவில்லை.  பார்ப்போம் ரிக்வெஸ்ட் அனுப்பி.


நட்புடன்
ஜெயந்தி

Saturday, May 12, 2018

கிருஷ்ணன் தாயார்

கிருஷ்ணன் தாயார் என்னளவுக்கு இங்கிருப்போருக்கு கிருஷ்ணனையும் அவன் குடும்பத்தாரையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை . கிருஷ்ணன் குடும்பம் கூட்டு குடும்பம் .வாடகை வீட்டில் வாழ்ந்தாலும் ஒன்றாகவே வாழ்ந்தார்கள் . தங்கை ,அம்மா அப்பா ,தாத்தா ,பாட்டி,,கல்யாணம் ஆகாத சித்தப்பா (TVS Southern Roadways ), அத்தை . தங்கை குறித்து அதிகம் தெரியாதவர்களுக்கு ...she is a special child ...கடவுளின் சிருஷ்டி கோளாறுகளில் அவளும் ஒன்று . தாயாரின் 27 வயதில் கிருஷ்ணன் பிறந்தான் தங்கை ஜெயந்தி 33 வயதில் . கடவுள் எல்லோருக்கும் பொறுப்புகள் கொடுப்பதில்லை ...பொறுமையும் நிதானமும் உள்ள பெற்றோர்கள் உள்ள வீட்டில் தான் சில பிறப்புகள் நடக்கும் ...ஜெயந்தியும் அப்படிப்பட்ட பெற்றோர் உள்ள வீட்டில்தான் பிறந்தாள் . இந்த குழந்தை வளர்ப்பில் அந்த தாய்க்கும் தந்தைக்கும் எந்த குழப்பமும் இல்லை . அவர்கள் அவளை வெளி உலகிற்கு அறிமுக படுத்துவதில் எந்த வெட்கமும் படவில்லை . சிறந்த தியாகிகள் ...யோகிகள் . 35 வருடங்கள் அந்த குழந்தையுடன் வாழ்க்கை ... தாயாருக்கு வாழ்க்கையில் 90% கிருஷ்ணன் குறித்தே கவலை ... நான் தெரு நண்பன் என்ற முறையில் அவர்களுடன் அமர்ந்து நிறைய கதைத்திருக்கிறேன் . முடிந்தால் கிருஷ்ணன் குறித்து ஏத்தி விடுவேன் .. கிருஷ்ணன் திருமணம் ...உடனே தந்தை மரணம் ..தனித்து கிருஷ்ணன் உடன் அவன் தங்கை ...தாயாருக்கு பொறுப்புகள் கூடியது ..குறையவில்லை . 30 வயது பெண் குழந்தை ..கடவுள் குழந்தை ....கட்டி காப்பது கடினம் தான் .சாதாரன மனிதர்களால் முடியாது .தாயார் கடவுளால் கேட்டுக் கொள்ளப்பட்டவர் . தாயார் மறைந்த அன்று ...அவர் உடல் கண்டவுடன் அவர் தியாகங்கள் மனதில் நிழலாடின ..என்னுள் ஒரு மன அழுத்தம் ...விவரிக்க இயலவில்லை . அவருடைய தியாகங்கள் அனைத்திற்கும் ஒரே விலாசம் இன்றய கிருஷ்ணனின் நிலை . தாயாரின் மறைவிற்கு ...அந்த தியாக உள்ளத்திற்கு நம் அனைவரின் கண்ணீர் அஞ்சலி உரித்தாகுக .

Sunday, July 24, 2016

​​கனவாகிக் கனிந்த நனவு!

'என் கிரிக்கெட் பேட்ட நீ தானப்பா திரும்ப இங்க கொண்டு வந்து வச்ச?' என் மகன் வருண் அதட்டலாய்க் கேட்டான். கம்ப்யூட்டர்  திரையில் மூழ்கியிருந்த நான், அவன் காட்டிய திசையில், சுவற்றோரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த அவனது புதிய 'ஸ்டான்போர்ட்' (S F) Autograph 'ஆங்கில மர' கிரிக்கெட் பேட்டைப் பார்த்தேன். மழுப்பலுடன் 'சாரிடா' என்றேன். சென்ற இரண்டு வருடங்களாக  வருண் கிரிக்கெட் பயிற்சிக்குச் செல்கிறான். இந்த இரண்டு வருடங்களில், இது அவனது மூன்றாவது பேட். ஒரு மாதிரி, சுமாராக, பரவாயில்லாமல்,நல்லாவே (மைகேல் மதன காமராஜன் நாகேஷ் ஸ்டைலில்) பேட் செய்கிறான். 'ஏன் தான் இப்படி இந்த பேட்டை சும்மா சும்மா எடுக்கறியோ தெரியல!'. பேட்டை தனது விளையாட்டுப் பைக்குள் சொருகி அவசரமாக வெளியே புறப்பட்டுச் சென்றான். அதானே! அவன் பேட்டை நான் எதுக்கு சும்மா சும்மா எடுக்கணும்? என் கிரிக்கெட் வாழ்க்கை தான் ஏறக்குறைய முடிந்தாயிற்றே....இல்லை இன்னும் உண்டா? சாய்ந்து உட்கார்ந்து 1978 முதல், இன்று வரையிலான எனது 37 ஆண்டுகால எனது கிரிக்கெட் வாழ்க்கையை (!!??) அசை போட ஆரம்பித்தேன். 
அப்பா பாரத ஸ்டேட் வங்கி ஊழியர். மூன்று வருடங்களானால் கட்டாய இட மாற்றம். இதனால் எங்கள் படிப்பும் திருப்பூர், விருதுநகர், மார்த்தாண்டம், மதுரை, சோழவந்தான் என்று மும்மூன்று வருடங்களாய் வெவ்வேறு ஊர்களில் தொடர்ந்தது. அவர் தமிழ் நாடு கிரிக்கெட் சங்கப் போட்டியில், பாரத ஸ்டேட் வங்கி அணிக்காக விளையாடியுள்ளார். இருந்தாலும், எங்களுக்கு அவர் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது, நான் ஏழாவது படிக்கும் போதுதான். குழித்துறை கிராமத்தில், தென்னை மட்டை பேட் செதுக்கி விளையாடியது பெரும்பாலும் எங்கள் வீட்டில் மட்டும் தான் இருக்கும். "ஒரு நல்ல கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும்" என்பது அப்போதைய ஆசை. எட்டாம் வகுப்பில் நுழைகையில் தந்தைக்கு மதுரைக்கு மாற்றம் ஆனது. மகத்தான டி. வி . சுந்தரம் உயர்நிலைப்பள்ளியும், அதன் ஆசிரியர்களும், பள்ளிச் சுற்றுச் சூழல்களும், அதுவரை சிறிய கிராமப் பள்ளிகளில் மட்டுமே படித்த எனக்கு பெரும் பிரமிப்பை ஏற்ப்படுத்தியது. பள்ளியில் சேர்ந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். ஒரு நாள் மதிய உணவு இடை வேளை முடிந்து வகுப்புக்கு செல்கையில், பள்ளியின் விளையாட்டுத் திடல் பக்கம், வயல்களில் கொக்குகள் நிற்ப்பது போல் வெள்ளை உடுப்பில் பலர் நின்றிருக்க, என்னவென்று அறிய ஆவலுடன் விரைந்தேன். அங்கு, மதுரை-புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. நான் நேரில் பார்க்கும் முதல் கிரிக்கெட் போட்டி அதுதான். நெருப்பினால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சி போல், திறந்த வாய் மூடாமல் ஓரத்தில் அமர்ந்து விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தேன். மதுரை பாட்டிங். அப்பொழுதுதான் ஒரு விக்கட் விழுந்திருக்கும் போல். புதிதாக, கண்ணாடி அணிந்த ஒரு மட்டையாளர் (இன்னும் அவர் பெயர் ஞாபகம் இருக்கிறது..லலித் குமார்!!) ஆடுகளத்தில் நுழைந்தார். பாட்டிங் கிரீஸ் வந்தவர், பாட்டை ஒருக்களித்து, தள்ளிப்பிடித்து (என்ன மட்டையை இப்படிப் பிடிக்கிறார்? விளையாடத் தெரியாதோ?) நடுவரைப் பார்த்தார். அவர் ஏதோ சைகை செய்ய, சாக் கட்டியால் பாயில் கோடுகள்  போட்டார். அன்று தான் மட்டையாளர் Guard எடுப்பதை  முதல் முறை பார்க்கிறேன். அவர் எதிர்கொண்ட முதல் பந்தை வீசியவர் ஒரு சுழற்ப் பந்து வீச்சாளர். அந்தப் பந்தை லாவகமாக முட்டியில் அமர்ந்து கால் திசைப் பக்கம் திருப்பி விட்டார். அது போன்ற ஒரு நேர்த்தியான sweep shotஐ இன்று வரை வேறெங்கும் பார்த்ததில்லை. பந்து தரையில் இருந்து இம்மியும் எழாமல் உருண்டோடி நான் அமர்ந்த பக்கம் எல்லைக் கோட்டைத் தாண்டி வந்தது. அந்து பந்தைப் பிடித்து மீண்டும் மைதானத்திற்குள் வீசினேன். நிஜமான கிரிக்கெட் பந்தை கையாளுவது அது முதல் முறை. வழு வழுப்பும், சொர சொரப்பும் ஒரு சேர, இப்படியுமொரு பொருள் இருக்குமா உலகத்தில்!! எனக்குப் பெருமை தாளவில்லை. அன்றில் இருந்து எல்லா கிரிக்கெட் போட்டிகளுக்கும் நான் கட்டாயமாக ஆஜர்! ஸ்ரீதர், ராஜமன்னார், முரளி கிருஷ்ணன்....அன்றைய மதுரை அணியின் ஜாம்பவான்கள் விளையாட்டு பாணி எல்லாம் அத்துப்படி. செங்கல்பட்டு Vs இணைந்த மாவட்டங்கள் போட்டி நினைவுகள் இன்னும் எனது மனதில் அவ்வப்போது ஓடும். ராஜமன்னார், தனது  'எட்டடி' (குள்ளமாக இருந்த எனக்கு அவர் நிஜமாகவே எட்டடி உயரம் போலத்தான் தோன்றியது!!)

உயர உடலை வளைத்து, குத்திப் போட்ட bouncer பந்தை, N.P. மாதவன் அனாயாசமாக hook செய்ய, அந்தப் பந்து கண்ணிமைக்கும் நேரத்தில், fine leg பகுதியில், கூட்டத்தை சமாளிக்கும் சாரண தன்னார்வனாக (scout volunteer) இருந்த என் செவுளை முகர்ந்து பார்த்துச் (நல்லவேளை முத்தமிடவில்லை) சென்றது இன்னும் என் மனத் திரையில்...பிரமிப்பாக!! சமயம் கிடைக்கையில், மற்றும் விளையாட்டு நேரங்களில் அதே மைதானத்தில் நாங்களும் கிரிக்கெட் ஆடுவோம். ஒரே நேரத்தில் 5-6 போட்டிகள் அருகருகே நடக்கும். எவன் அடிக்கும் பந்து எப்போது எவன் மண்டையை உடைக்கும் என்று தெரியாது!! ஒவ்வொரு அணியிலும் ஓரிரண்டு பேர் வித விதமான கிரிக்கெட் பேட் கொண்டு வருவார்கள். "நானும் ஒரு கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும்".. நினைத்துக் கொள்வேன். அந்தப் போட்டிகளில் ஒருவாறாக என்னை மட்டையாளன்   மற்றும் விக்கெட் கீப்பர் (batsman cum wicket keeperஎன்று அடையாளம் காட்டியிருந்தேன். 
          எங்கள் பள்ளி கிரிக்கெட் டீமின் கேப்டன் வெங்கட்ராமன். ஒரு சகலகலா வல்லவன். விக்கெட் கீப்பர் ரங்கநாதன். அடுத்த வருடம் (நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கையில்)  டி. வி. எஸ். பள்ளி கிரிக்கெட்அணிக்காக நடந்த தேர்வில் ரங்கநாதனுக்குப் போட்டியாக நான் களமிறங்கினேன். நார் பாய் (coir mat) பிட்சில், நிஜ கிரிக்கெட் பந்து வைத்து தேர்வு. இதுவரை நான் பெறாத அனுபவம்...என் உற்சாகத்துக்கு அளவில்லை!! தேர்வை நடத்தியது எங்கள் விளையாட்டு வாத்தியார்  நஸ்ருதின் சார். மாணவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்திருந்தார். எங்கள் அணி பந்து வீச்சு . முதல் முதலாகக்  வெள்ளையும் சொள்ளையுமாகக் கால் காப்பு  (pads), கையுறை (keeping gloves) அணிந்து, நார்ப் பாய் மைதானத்தில் நிஜமான கிரிக்கெட் ஆடப்போகும் பரமானந்தத்தில் நான்!! "ஸ்ரீ, பந்தை விடாம பார்த்துக்கிட்டே இருக்கணும். Mat பிச்ல வழுக்கிட்டு ஸ்விங் ஆகி வரும், ஜாக்கிரதை" எனது பள்ளித் தோழன் மற்றும் தேர்ந்த மட்டையாளன் V .ஸ்ரீநிவாசன் எச்சரித்தான். நான் சமர்த்தாகத்  தலை ஆட்டினேன். முதல் ஓவர் வீசியது சுரேஷ் என்ற வேகப்பந்து வீச்சாளர். ஓடி வந்து பந்தை வீசினார். அவர் கையில் இருந்து விடுபட்டு , காற்றில் ஸ்விங் ஆகி வளைந்து மிதந்து பிட்சில் விழுந்தவுடன் வழுக்கி கொண்டு, அதே  வேளை ஒரு விதமான 'மெது இயக்கத்தில்' (slow motion) என் முகத்திற்கு நேராக  வந்த அந்தச் சிகப்புக் கோளத்தை, ஏதோ வசியத்திற்கு கட்டுப்பட்டவன் போலப் பார்வையால் தொடர்ந்தேன். மறு கணம் என் வாயில் யாரோ ஓங்கிக் குத்தியது போல் பொறி கலங்கிக் கீழே விழுந்து  தடுமாறி எழுந்தேன். வாயில் இருந்து ரத்தம் வழிந்து வெள்ளைச் சட்டையெல்லாம் சிவப்பாயிற்று. துப்பினால்  ரத்தம், மண்ணோடு சேர்ந்து பல் துண்டுகள். மேல் வரிசை இடது முன் பல்லில் பாதியைக்  காணோம்!! அனைவரும் என்னைச் சுற்றி நலம் விசாரிக்க, வலியும் அவமானமும் (ஏம்பா  இது மாதிரி சின்னப் பசங்கள எல்லாம் விளையாட்டுக்கு சேக்கறீங்க? கூட்டத்தில் யாரோ!) சேர்ந்து நிலை குலைந்து போனேன். "பந்தை நல்லாப் பாருடான்னு சொன்னால், இப்படியா  பிடிக்காமல் வாயால கடிப்பான்?" என்று ஸ்ரீனி நினைத்திருப்பானோ? ஆகமொத்தம் ரங்கநாதனுக்கான சவால் ஒரே பந்தில் புஸ் என்று போனது."Practice matchல பல் ஒடஞ்ச பயல்' என்ற புனைப்பெயர் (விருமாண்டி படத்தில் கமல் ஹாசனை "அதான்யா ,சிங்கபூர்ல சவுக்கடி வாங்கினானே? அவன் தான்" என்று அறிமுகப்படுதுவார்களே? அது மாதிரி!!) ஒட்டி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளை அது போல் அவமானம் ஏதும் நடக்கவில்லை.  அந்த வருடம், பள்ளி அணிக்கு தேர்வு செய்யப்படவில்லையானாலும் அனைத்துப் போட்டிகளையும் கூடச் சென்று பார்த்தேன். மதுரா காலேஜ் பள்ளி (M .C . Higher Secondary School ) உடனான  போட்டியில் எங்கள் அணி வெங்கட்ராமன் வீசிய பந்து,  எதிர் தரப்பில் ஆடிய வெங்கட்ரமணன் என்ற ஒரு சிறந்த ஆட்டக்காரனின் பேட் கைப்பிடியில் பட்டு, அவர் நெற்றியில் அடித்து உயரே எழும்பி fine legஇல் பிடிபட்டு அவுட் ஆனார். நெற்றியை தேய்த்துக் கொண்டே வெங்கட்ரமணன் வெளியே வந்த காட்சி இன்றும் தத்ரூபமாக என் மனக் கண்ணில் உள்ளது. அடுத்த ஆண்டு (10 ஆம் வகுப்பில்) பள்ளி கிரிக்கெட் அணியில் ரங்கநாதன் காலி செய்த இடத்தைப் பிடித்தேன். என்னுடன் அணியில் விளையாடிய, என் நினைவிற்கு வரும் வேறு பெயர்கள் V . ஸ்ரீனிவாசன், பார்த்தசாரதி, சேதுபதி, கல்யாணராமன், சாமுவேல், ஸ்பெர்ஜென் ஞானமுத்து, சத்யராஜ் மற்றும் N.C. சேகர் (ராகுல் டிராவிட் காலத்திற்கு முன்பே N.C.சேகர்  அடிக்கும்  நேர்த்தியான on-driveகளை  இன்றும் நான் மனதில் அவ்வப்போது replay செய்து பார்ப்பேன்).            அந்நாட்களில்,  பள்ளிப் போட்டிகளைப் பார்க்க T.V.S. நகர் வாசிகள் திரளாக வருவார்கள்.Orthodox மட்டையாளன் என்று பேர் வாங்கிய நான், பெரும்பாலும் கடைசியாகத்தான் விளையாட வருவேன். V .ஸ்ரீநிவாசன், சாமுவேல் போன்றவர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள்.ஒரு போட்டியில்,  சாமுவேல் பட்டாசு கிளப்ப, 5 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தோம்.  ஒரு பெரியவர்  '5 ஓவர்ல 45 ரன்ஸ் வெளுத்திட்டங்கய்யா!' என்று புகழுந்து சென்றது இன்னும் பசுமையாக ஞாபகத்தில் உள்ளது. பள்ளி அணியில் விளையாடும் போது நினைத்துக் கொள்வேன் "நானும் ஒரு கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும்". அதன் பிறகு SBI காலனியில் CLIVE கிரிக்கெட் அணி என்று ஒன்று தொடங்கி அரசரடி மைதானத்தில் பல போட்டிகள்  விளையாடினோம். 
​​​​
          மதுரை மாவட்ட பள்ளி கிரிக்கெட் அணியில் (district schools) அப்பொழுது பிரசித்தி பெற்ற மூவர் வெங்கட்ராமன், வெங்கட்ரமணன் மற்றும் (டி. என்.) விஸ்வநாதன்.  The 3Vs  என்று புகழப்பட்ட அவர்களின்  விளயட்டுப்  பிரதாபங்கள் அநேகம். 1983ஆம் வருடம் (12வது படிக்கையில்) மாவட்டப் பள்ளிகள் கிரிக்கெட் அணி  தேர்வில் கலந்துகொள்ள  'விளையாட்டாக' முடிவு செய்தோம். என்ன காரணம் ஞாபகமில்லை, அன்று எங்களிடம் பள்ளியின் எந்த கிரிக்கெட் உபகரணங்களும் இல்லை. 'வெறும் கை வளவர்களாக' டி. வி. எஸ். லக்ஷ்மி பள்ளி மைதனத்தில் நுழைந்தோம். மைதானம் எங்கும் வெள்ளை உடையில் மதுரை மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்திருந்த பள்ளி மாணவர்கள் குவிந்திருந்தார்கள். ஐந்து  பைசா நாணயத்தைச் சுண்டிப்போட்டால் அது ஒரு வெள்ளை உடை மாணவன் தலையில் தான் விழும், அவ்வளவு கூட்டம். அவர்களில் பலர், (வெங்கட்ரமணன் போல்) சென்ற ஆண்டிலேயே மாவட்ட அணையில் விளையாடியவர்கள். திரு. ஸ்ரீதர் (சீனியர்  டிஸ்டிரிக்ட் கேப்டன்) அவர்கள் தான் தேர்வுக்குழுவின் தலைவர். மாணவர்களை வரிசையாக நிறுத்தி, பந்து வீச்சாளர்கள் (வேகப்பந்து, சுழற்ப்பந்து), மட்டையாளர்கள் (துவக்க, நடுவரிசை), விக்கெட் கீபெர்கள் என்று தரம் பிரித்து பேர் எடுக்க ஆரம்பித்தார். விக்கெட் கீபர் கையுறை இல்லாத காரணத்தால், கால் சுழற்ப்பந்து வீச்சாளன் மற்றும் மட்டையாளானாக (leg spinner cum batsman) பேர் கொடுத்தேன். எனக்கான வாய்ப்பும் வந்தது. குனிந்து நிமிருவதற்க்குள் வரிசையாக பல பந்து வீச்சாளர்கள் பந்து வீச, மாறி மாறி அடித்தேன். கொஞ்ச நேரம் பந்தும் வீசினேன். எல்லாம் முடிந்த பிறகு, மாணவர்கள் அனைவரையும் மைதானத்தில் அமரச் செய்து திரு. ஸ்ரீதர் அவர்களும், மற்றவர்களும், மைதானத்தின் மறு முனையில் உள்ள அறைக்குச் சென்றார்கள். தேர்வு ஆவோமா என்ற ஆர்வத்தில் அனைவரும் எதிர்பார்ப்புடன் அமர்ந்தோம். கொஞ்ச நேரத்தில், வெங்கடரமணன் அறையில் இருந்து தனியாக எங்களை நோக்கி வந்தார்.' ஸ்ரீகுமார் யாருப்பா?' என்றார். நான் திகைப்புடன் கையைத் தூக்கினேன்.  என்னைப் பார்த்து ஒரு தெளிவற்ற வகையில் தலையாட்டி விட்டு சென்றார். அரை மணி நேரம் போயிருக்கும் அணி தேர்வாளர்கள், திரு. ஸ்ரீதர் தலைமையில் வெளியே வந்தார்கள். வரிசையாகப் தேர்வு பெற்றவர்கள் பெயர்களை திரு.ஸ்ரீதர் வாசித்தார்."ஸ்ரீகுமார், டி. வி. எஸ். உயர்நிலைப்பள்ளி".....என் பெயர் வாசிக்கப் பட்டதைக் கேட்டு நிஜம்தானா  என்று என்னையே  கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். நிஜம் தான்! முதற்கட்டத் தேர்வில், 22 பேர்களில் ஒருவனாகத் தேர்வு செய்யப் பட்டிருந்தேன். மறு நாள் இரண்டாம் கட்டத் தேர்வு என்று அறிவித்தார் திரு. ஸ்ரீதர். கால்கள் தரையில் பாவாமல் வீடு சென்றடைந்தேன். மறுநாள்,  22 பேரையும் இரு அணிகளாகப் பிரித்தார் திரு ஸ்ரீதர். எங்கள் அணி முதலில் பாட்டிங். ஒபெனிங் மட்டையாளராக சுதர்சன் (சென்ற வருடமே தேர்வானவர்) மற்றும் இன்னொருவர் களமிறங்கினர். ஓரிரு ஓவர்களிலேயே , சுதர்சனை வெளியே வரச் சொன்னார் திரு.ஸ்ரீதர். கால் காப்புடனும், படபடக்கும் இதயத்துடனும் உட்கார்ந்திருந்த என்னை, 'போ' என்று சைகை செய்தார். நடுக்கத்தைக் கட்டிக்கொள்ளாமல் guard எடுத்து, பந்து வீச்சாள்ர்களை எதிர்கொள்ளத் தயாரானேன். கொஞ்சம் ஓவர்கள் சுமாராகவே ஆடியிருப்பேன். உள்ளே வரும்படி திரு. ஸ்ரீதர் சைகை செய்தார். 'அப்பாடி, முடிந்தது!' என்று ஆஸ்வாசமாக வெளியே வந்தேன். 'கால் காப்பை கழற்றாதே", என்றார் திரு ஸ்ரீதர். 'அய்யகோ இன்னும் முடியவில்லையா' என்ற திகைப்பில் காத்திருந்தேன். பின் தான் தெரிந்தது...எனக்கும், ஒரு இடது கை மட்டையாளருக்கும் ஒரே இடத்திற்குப் போட்டி என்று!! அவர் எற்கனவே ஸ்ரீசக்ரா அணியில் விளையாடுபவர். அவர் கொஞ்ச நேரம் பேட் செய்தார். பின் மீண்டும் என்னை பேட் செய்யச் சொன்னார்கள். இம்முறையும் அதிக தன்னம்பிக்கையுடன் நன்றாகவே ஆடினேன். ஓரிரண்டு ஓவர்கள் போயிருக்கும். திரு. ஸ்ரீதர், களத்தில் மிட் ஆப் பகுதியில் field செய்து கொண்டிருந்த ஒருவரிடம் பந்தை வீசி, 'நீ போடு' என்றார். அவரும் சென்ற ஆண்டே தேர்வான ஒரு வேகப்பந்து வீச்சாளர். மிடுக்கான தன்  உதா கழுத்துப் பட்டையுடனான வெள்ளை sweaterஐ கழற்றி நடுவரிடம் கொடுத்து, தன பந்து  வீச்சு ஓட்ட அளவைத் துள்ளி அளந்து, காலால் கற கறவென குறித்து, பந்தைத் தன்  கால்சராயில் தேய்த்த வண்ணம் என்னை பார்த்தார்.  சரி தான்...இன்னொரு பந்து வீச்சாளர் தானே. பார்த்துவிடலாம் என்று நினைத்துக்  கொண்டு நான் அவரை எதிர் கொள்ளத் தயாரானேன். லாகவமாக ஓடி வந்து வீசினார். பின்காலில் சென்று விளையாடலாம் என்று எண்ணி நான் நகர நினைக்கும் கண்ணிமைப் பொழுதில்  விர்ரென்ற ஓசையுடன், கழுத்தளவு உயரத்தில் என்னைக் கடந்து, விக்கெட் கீப்பர் கையுறையை  'தொப்' என்ற ஓசையுடன் சென்றடைந்தது பந்து. அவ்வளவு வேகம்!! நான் அதிர்ந்து போய் நிமிர, பந்து வீசிய வேகத்தில் ஏறக்குறைய என்னிடமே வந்திருந்த அந்த வீச்சாளார், என்னை ஆற அமர பார்த்து விட்டு, திரும்பி தன பந்து  வீச்சு ஓட்ட இலக்கை நோக்கி மீண்டும் நடந்தார். ஸ்ரீகாந்த் நாராயணசாமி என்ற அன்பு நண்பரின் முதல் அறிமுகம் அப்படித்தான் நடந்தது!! மிகுந்த சிரத்தையுடன் அடுத்த பந்தை எதிர்கொண்டேன். அடுத்த நான்கு பந்துகளை நன்றாகவே தடுத்தாடினேன். அவர் வீசிய பந்துகள் என் மட்டையில் பட்ட அதிர்வை இன்னும் உணர்கிறேன். கடைசி பந்தை கவர் திசையில் அடித்தேன். ஒரு ஓவர் தாக்குப் பிடித்த திருப்தி!! அடுத்த ஓவரின் மூன்றாவது பந்து என்று நினைக்கிறேன். அளவு குறைவாக வந்த பந்தை சுழன்று pull செய்தேன். எல்லைக்கோட்டை நோக்கிப் பறந்தது பந்து. அது எல்லைக் கோட்டைத் தாண்டவும், 'போதும் வாப்பா' என்று திரு. ஸ்ரீதர் கூப்பிடவும் சரியாக இருந்தது! எல்லாம் முடிந்து, தேர்வானவர்கள் பட்டியலை வாசித்தார் திரு. ஸ்ரீதர். 15 பேர்களில் நானும் ஒருவன்!! என் குதூகலத்திற்கு அளவே இல்லை. ரமணன், சுதர்சனன், பிரகாஷ் பாபு, இன்டிகாபுதீன், ராஜேந்திரன், ராமதாஸ், தீபக், ரங்கநாத் பிரசாத், மற்றும் ஸ்ரீகாந்த் நாராயணசாமி பெயர்கள் நினைவில் வருகின்றது. விகாசா பள்ளி மைதானத்தில் பயிற்சி. தினமும், SBI காலனியில் இருந்து சைக்கிளில் செல்வேன். தேர்வான 15 பேரில், லீக் போட்டியில் முன்னப் பின்ன ஆடிய அனுபவம் அறவே இல்லாத (தத்தி!!)  நான் ஒருவன் மட்டும் தான் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய மற்ற அனைவருக்குமே சொந்த கிரிக்கெட் உபகரணங்கள், என்னைத் தவிர! பயிற்சியின் போது நினைத்துக் கொள்வேன் "நானும் ஒரு பேட் வாங்க வேண்டும்". விகாசா  மைதானத்தில் நடந்த பயிற்சி காலம் நான் மறக்க முடியாத ஒன்று. அந்த வருடம் பி.ர். தேவர் கோப்பைக்காக இரண்டு போட்டிகள் ஆடினோம்.  இரண்டாம் போட்டி உடுமலைப்பேட்டை மாவட்டத்துடன். செந்தில்நாதன் அப்பொழுதுதான் பிரபலமாகிக் கொண்டிருந்தார். மழையால் பாதிக்கப்பட்ட அந்தப் போட்டியில் tossஇல் தோற்றோம். இரண்டு போட்டிகளிலும் நான் 12th man. மதுரை மாவட்டப் பள்ளி  அணியில் ஆடியது என் கிரிக்கெட் வாழ்க்கையின் சிகரம் என்று சொல்லலாம். மாவட்ட அணியில்  ஆடிய ஜோரில், மதுரை லீக் போட்டியில் Jolly Rovers அணியில் சேர்ந்தேன். அந்த சமயத்தில் +2 முடித்த கையேடு அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் பிரிவில் சேர்ந்திருந்தேன். Jolly Rovers அணியில் துவக்க மட்டையாளனாக  என்னை ஒருவாறாக அடையாளம் காட்டிக் கொண்ட சமயத்தில், கால்நடை மருத்துவ கல்லூரியில் தேர்வு. சென்னைக்கு மாற்றம் ...அதோடு மதுரை கிரிக்கெட் சகாப்தமும் முடிந்தது.
​​
  சென்னையில், கால்நடை மருத்துவக் கல்லுரி அணியில் 5 ஆண்டுகளும் ஆடினேன். தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகக் கல்லூரி கிரிக்கெட் போட்டியில், என் தலைமையில் நாங்கள் முதலிடம் பிடித்தோம். 

மூன்று முறை தமிழ் நாடு விவசாயப்ப் பலகலைக்கழக அணிக்கு தென் மண்டல பல்கலைக்கழகப்  போட்டியில் (South Zone Inter-university, ) ஆடினேன். பெங்களுருவில் (1986 என்று ஞாபகம்) நடந்த போட்டியில், fixtures பார்த்தபோது ஒரு  இன்ப அதிர்ச்சி...எதிர் அணி மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்!!1983 மாவட்ட அணியின் முக்கிய புள்ளிகளை (ரமணன், ஸ்ரீகாந்த், ராஜி, பிரகாஷ் பாபு) எல்லாம் மீண்டும் (எதிரிகளாகச்) சந்திக்க ஓர் வாய்ப்பு  கிடைத்தது.  அந்தப் போட்டியில் MKUவிடம் முதல் சுற்றிலேயே உதை. நான் 10 ஓவர்களில் 3 விக்கெட் எடுத்தேன், 58 ரன்கள் கொடுத்து!! சாத்தி எடுத்திட்டாங்க. ரமணன் விக்கெட் எடுத்த மகிழ்ச்சி மட்டும் தான் மிஞ்சியது!! 

கல்லூரிக் காலத்தில், மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவில், ஹரநாத் கிரிக்கெட் கிளப் என்ற வட சென்னையை சேர்ந்த அணிக்கு, TNCA லீக் போட்டிகளில் ஆடினேன். அருமையான போட்டி மனப்பான்மை உள்ள ஒரு அணி அது. ஒரு முறை விஜய் கிரிக்கெட்  கிளப் (தற்பொழுது TNCA முதல் பிரிவில் உள்ள ஒரு தரமான அணி) உடனான  play-off போட்டியில் 136 ரன்கள் தேவைப்பட 70 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தோம். நானும், கணபதி பிரசாத் என்றவரும் சேர்ந்து மீதம் ரன்களை அடித்து டீம் ஜெயிக்க, அடுத்த பிரிவிற்கு முன்னேறினோம். கல்லூரி மற்றும், லீக் அணிகளில் ஆடும்போதும், 'ஒரு கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும்' என்ற நினைப்பு மட்டும் என்னை விட்டுப் போகவேயில்லை.
​​
கல்லூரிக்காலம் முடிந்து, அரசு கால்நடை உதவி மருத்துவனாக கீழ்ப்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை) கால்நடை மருந்தகத்தில் சேர்ந்தது எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டி இருந்ததால் சென்னையில்  நடக்கும்போட்டிகளுக்கு ஒழுங்காகப்  போக முடியாமல் எனது லீக் கிரிக்கெட் வாழ்க்கை தானாக முடிந்து போனது. 1994ஆம் வருடம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக  உதவிப் பேராசிரியனாக மீண்டும் கல்லூரி வாழ்க்கை தொடங்கியது. 1995ஆம் வருடம் முதல் இன்று வரை (!!??) கல்லூரி பேராசிரியர் அணிக்கு விளையாடுகிறேன். ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி நடத்தும் சரத்சந்திரா  நினைவு போட்டி மற்றும், மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரி நடத்தும் பென்னெட் அல்பர்ட்  நினைவுப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளில் எங்கள் கல்லூரி   அணி ஒரு காலத்தில் இரண்டாம் இடத்தில்  வந்துள்ளது. ஒரு போட்டியில்  சிறந்த மட்டையாளன் விருதும் பெற்றிருக்கிறேன், வரிசையாக மூன்று மட்ச்களில் அரைசதம் அடித்து.  மூன்று வருடங்கள் ஊட்டி HPF அணிக்கு NDCA லீக் போட்டியில் ஆடினேன். அழகான ஊட்டி மைதானங்களில் ஆட கொடுப்பினை வேண்டும்! 
தற்பொழுது சென்னையில் உள்ள கல்லூரி  அணிகளிலேயே 'கிழட்டு' அணி எங்கள் அணிதான்! ங்கள் அணி ஆட்டக்காரர்களின் நிகர வயது 45 இருக்கும்!  ஒரு P D  கேட்டே விட்டார்..."என்ன சார் வருஷா வருஷம் அதே கிழட்டு டீம் வருது. இளைய உதவிப் பேராசிரியர்கள் இல்லையா, அல்லது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறீர்களா" என்று.  ஒவ்வொரு மாட்சிலும், முதல் இரன்டு ஓவர்கள் போன பிறகு தான்  11வது ஆளே வருவார். இருந்தாலும், இப்பொழுதும் ஒவ்வொரு மாட்ச் தொடங்கும் முன்னாலும், அதே குதூகலம், உற்சாகம் தான்.  மாட்ச் முடிந்த பிறகு வேறு விஷயம்!! எங்கெல்லாம் என்ன என்ன எலும்பு உள்ளது, என்னென்ன தசைகள் உள்ளது என்று தெளிவாகத் தெரிகின்றது!! இன்னும் எத்தனை நாட்களுக்கு இது  நடக்கும் என்றும்  தெரியாவில்லை. இந்த பேட் வாங்கவும் எண்ணம் மட்டும் எனோ நிறைவேறவில்லை. இனி அது தேவையும் இல்லை....அது கனவாகவே முடிந்த ஒரு நினைவாகப் போனது. 
இருக்கையில்  இருந்து எழுந்து சென்று, வருண் உள்ளே வைத்த அந்த புதிய SF பாட்டை எடுத்து வாஞ்சையையாக கையில் பிடித்துக் கொண்டேன். இரண்டு முறை  கீழே தட்டி, கண் காணாத அந்தப் பந்து வீச்சாளரை எதிர்கொள்ள தயாரானேன்...மீண்டும்!!

(பி.கு.) 1987-88 வருடம், எதிர்பார்த்தது போல், ரமணா  தமிழ்நாடு அணிக்கு ஆடினார். 1988இல் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட போது எனக்கு பெருமை பிடிபடவில்லை. ஏதோ  நானே இந்தியாவுக்கு ஆடப் போவதுபோல் சந்தோஷம். ஏனோ தெரியவில்லை, ஒரு வரையறுக்கப்பட்ட ஓவர்  போட்டி மற்றும் ஒரு test போட்டியோடு அவர் ஓரம் கட்டப்பட்டார். இத்தனைக்கும், நியூ ஸிலாந்து உடனான போட்டியில் மிக சிறப்பாகவே பந்து வீசியிருந்தார். இந்திய அணியில் அவருக்கு ஒரவஞ்சனை நிகழ்ந்ததாகவே சொல்லலாம்.சில மாதங்கள் முன் ராமச்சந்திர மருத்துவக்கல்லூரி மைதானத்தில், ஒரு போட்டியில் வழக்கம் போல் உதை வாங்கி விட்டுத் திரும்புகையில் ரமணனைச் சந்தித்தேன், ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு! என்னை அவருக்கு அத்தனை  ஞாபகம் வரவில்லை...ரொம்ப கிழடாயிட்டேனோ?. 

சில நிமிடங்கள் அவருடன் பழங்கதை பேசினேன். மறக்க முடியாத சந்திப்பு. 

Friday, February 27, 2015

என் தகப்பன் சாமி

என் தகப்பன் சாமி
     அப்போது  என் பெரிய மகன் ஹரீஷ் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் மாலை வநது ஒரு சர்குலரை நீட்டினான். பிரித்த படித்தேன். 
 அன்புள்ள பெற்றோருக்கு,
        வணக்கம். நாளை இரண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் ஓவியம் மற்றும் பாடல் கண்காட்சி இருக்கிறது. அனைவரும் வருக. 
 என் மனம் பறக்க ஆரம்பித்து விட்டது.ஏனெனில் ஹரீஷ் மிகவும் நன்றாக படங்கள் வரைவான்.கண்காட்சி அறை முழுவதும் நம்ம பையன் படம்தான் இருக்கும்....யாருங்க ஹரீஷ் அம்மா? ஓ....நீங்களா......ரொம்ப நல்லா போட்ருகான்...நல்லா என்கரேஜ் பண்ணுங்க..தேங்க்ஸ்.ஆக்சுவலா இதெல்லாம் அவன் எங்க கத்துகிட்டான்.....எப்போ போட்டான்னே தெரியாது........நானே இப்போதான் பாக்கறேன்....என விதவிதமாக உரையாடல்கள் ...மனசுக்கள்ளே கற்பனையாய் ஓடுது.
அவன் வகுப்பில் படிக்கும் சேத்தனா அம்மா என்னிடம் " எப்போ போகலாம்? நான் வரலீங்க...ஏன்...உடம்பு முடியல...என்னங்க நீங்க...உங்க பையன் எவ்வளவு நல்லா வரைவான்... குரோசின் டாப்லட் போட்டுட்டு கிளம்புங்க... இந்த உசுப்பல் பத்தாதா எனக்கு...அவருக்கு போன் பண்ணி "நான்school bus ல போயிடறேன்...  எப்ப பாரு உங்களுக்கு மீட்டிங் தானே..ஹரீஷ் போடற டராயிங்ஸ ஊரே கொண்டாடுது உங்களுக்கு மட்டும் ஏன் அதெல்லாம் பாத்து ரசிக்க முடியலை?.4 மணிக்கு school க்கு வந்து பாத்துட்டு வழில என்னயும் குழந்தைகளையும் விட்டுட்டு நீங்க எங்க வேணா போங்க..."(கோபத்த எப்படி காட்டறது...)
 ஒரு வழியா சின்னவனையும் கூட்டிகிட்டு school க்கு போய் ...exhibition hall ல போய்.... Harish படங்கள கண்ணு தேட...மனம் என் பையன் ன்னு கர்வத்தில் மிதக்க...என்ன இது... எங்கேயும் harish படமே இல்ல... ஒரு குழந்தை ஒடி வந்து "ஆன்ட்டீ...இதோ பாருங்க ஹரீஷ் போட்ட படம்...
பக்கத்துல போய் பாத்தா... ஒரு நாய் குட்டி..அதோட வாலுல அவன் பேரு...
எனக்கு அழுகை வந்தது. அவன் படம் இல்லயேன்றத விட அவங்கப்பாவ அந்த கத்து கத்திட்டோமே.. "இத பாக்கவா என்ன வரச்சொன்ன?" ன்னு கோச்சுப்பாறேன்னு.... 
அவங்க டீச்சர பார்த்து "ஹரீஷோட மத்த ட்ராயிங்ஸெல்லாம் போடலியா?" ன்னு கேட்டேன். உடனே அவங்க "எனக்கு தெரியாதா....அவன் எவ்வனவு நல்லா படம் போடுவான்னு...எத்தன தடவ கேட்டாலும் நாய்குட்டி படம் மட்டும் தான் குடுத்தான்..." உள்ளே இப்போ அழுகை போய் கோபம் வந்தது...எங்க அவன்..."ஹரீஷ்..எங்க நீ போட்ட மத்த படமெல்லாம்? அந்த சிவன் படம், ஆஞ்சநேயர் படமெல்லாம் ஏன் எக்ஸிபிட் பண்ணல?...
அம்மா சர்க்குலர ஒழுங்கா படிச்சீங்களா?
படிச்சேன். அதுக்கென்ன இப்போ? அதுல என்னம்மா எழுதி இருந்தது? என்ன இருந்தது...ஆங் "இரண்டாம் வகுப்பு குழந்தைகளின் பாடல் மற்றும் ஓவிய கண்காட்சி"...ஏன் உன் படம் இல்ல..?
அம்மா! செகன்ட் ஸ்டான்டர்டு சில்ட்ரனோட போயட்ரி அண்டு ட்ராயிங் ன்னு தானே இருக்கு... ஹரீஷ் ஓட ட்ராயிங் எக்ஸிபிஷன்னா போட்டு இருக்கு? அத தான்  டெய்லி வீட்ல பாக்கறீங்களே...அங்க பாருங்க செல்வா, மணிமுத்து, குரு, சேத்தனா போட்ட படமெல்லாம்.. பாத்து அவங்கள அப்ரிசியேட் பண்ணுங்கம்மா... ன்னு சொல்லிட்டு சிரிச்சு கிட்டே அவன் ஓடி போய்ட்டான். "டங்..டங்.."ன்னு மண்டையில அடிச்ச மாதிரி இருந்தது. "ஆமாம் ஏன் இது எனக்கு தோணல..."
என் குழந்தையின் விஸ்வரூபம் எனக்கு ஆனந்தமளித்தது. இப்பவும் அழுகை வந்தது. அப்போதுதான் உள்ளே வந்த என் கணவர் "என்னம்மா கண்ணுல தண்ணி... உடம்பு ரொம்ப முடியலயா? சரி எங்க நம்ம பையன் போட்ட படம்?".. நான் சிரிச்சுகிட்டே சொன்னேன் "வாங்க... செகன்ட் ஸ்டான்டர்டு குழந்தைகளோட ட்ராயிங்ஸ பார்ப்போம்"
********************+*****************

Monday, October 6, 2014

பைக்கோத்ஸவம்

திடீரென்று ஒரு நாள் நாராயணன் "இன்னிக்கி ஆபிஸ்க்கு ஸ்கூட்டர் எடுத்துண்டு போறியா... ஓட்ட முடிஞ்சதுன்ன இன்னொரு டூ வீலர் வாங்கிடலாம் .."

உடனே எக்ஸைட் ஆயிட்டேன்... வீட்டிலிருந்து ஆபிஸ் 13 கிலோமீட்டர் அதுவும் கிண்டி தாண்டி போவது எனக்கு கொஞ்சம் சவாலான விஷயம்தான்..காலைல ரொம்ப கஷ்டமில்லாமல் போய்விட்டேன் ... சாயங்காலம் கூட கிண்டி ப்ரிட்ஜ் கிட்ட மட்டும்தான் ஒரு டெம்போ கிட்ட வந்து ஹாரன் அடிச்சு க்ளோஸா போனதுல கொஞ்சம் பயந்துட்டேன்...

ஆனாக் கூட தினமும் போகும் அளவு நம்பிக்கை வரலை... சரி எப்படின்னாலும் வீட்டுக்கு இன்னொரு வண்டி தேவைப்பட்டதால் வாங்கிடலாம்னு முடிவு பண்ணி ஹோண்டா ஷோ ரூம் போனோம்... ஆக்டிவாவோட அழகான காதலி மாதிரி ஸ்லீக்கா அழகா ஆக்டிவா ஐ..
எவ்வளவு சிசி, எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்னுலாம் இவர் கேட்டுக் கொண்டிருக்க, நான் எந்தக் கலரில் ஐ அழகி இன்னும் அழகாயிருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்..., "சும்மா சொல்லுவாங்க சார் 55 லாம் வராது... அதுவும் லேடிஸ் ஓட்டினா இன்னும் கம்மியா வரும்..திடீர்னு ஆக்ஸிலேட்டர் ரைஸ் பண்னுவாங்க, டகால்னு கொறைச்சுடுவாங்க... ப்ரேக் அதிகமா பிடிப்பாங்க ..." (எவண்டா இவன் நா வண்டி ஓட்றத பக்கத்துல இருந்து பார்த்தாப்ல சொல்றான்)... அப்படியே கண்ண விட்டுண்டு வந்தப்ப, மஞ்சள் கலர்ல, மெஜஸ்டிக்கா நின்ன அந்த வண்டியின் அழகப்பார்த்து கிட்ட போய் சீட்டை தடவிக்கொண்டிருந்த போது, " மேடம் டியோ மேடம்... செம பிக்கப் இருக்கும் காலேஜ் கேர்ல்ஸ்லாம் இதான் விரும்பாராங்க.. " " ஜெயந்தி ஓவர் பிக்கெப் உடம்புக்கு ஆகாது.. எடத்த காலி பண்ணு.." மறுபடியும் ஆக்டிவா ஐ கிட்டயே வந்து, டெஸ்ட் ட்ரைவ் கேட்டு ஓட்டிப் பார்த்து, ஒரு வாரத்துல வெள்ளை நிற வண்டிய புக் பண்ணியாச்சு.... " சார் ரெஜிஸ்டிரேஷன் முடிஞ்சு சனிக்கிழமை காலைல எடுத்துக்கங்க சார்"..

சனிக்கிழமை அப்படி இப்படினு காத்திருக்க வச்சு 12 மணி ஆக்கிட்டான்.... "லாங் டிஸ்டன்ஸ் போப்போற கையோட ஹெல்மெட் வாங்கிக்கோ ... நீ வண்டிய எடுத்துண்டு வீட்டுக்கு போ, நான் ஆபிஸுக்கு போறேன். ,"_ இவர்

நான் இது வரைக்கும் ஹெல்மெட் போட்டதே இல்ல... உத்தமபுத்திரன் க்ளைமேக்ஸ்ல சிவாஜி அந்த கவசத்த போட்டுண்டு குதிரைல பறக்கர மாதிரி நானும் வண்டில ஏறிட்டேன்... கொஞ்ச தூரம் போன உடனே ஆஃப் ஆயிடுத்து.. அப்புறம் நூறு மீட்டருக்கு ஒரு தடவ ஆஃப் ஆகி ஆஃப் ஆகி ஓடித்து... ஒரு பக்கம் ஹெல்மெட் வேற அவஸ்தையா இருக்க, காலை தரையில் ஊனப்போக கால் எட்டாமல் செருப்பு கழல , அதை சரி செய்த படியே காலை மேலே தூக்கி வண்டியை ஓட்டினால், கால் பக்கம் எதோ ஒரு சங்கடம்... எதோ சிக்கிக் கொண்டிருந்தது... பயந்து பயந்து வண்டியை மெதுவாக விட்டபடியே பார்த்தால் , செருப்பு புடவைக்குள் நன்றாக சிக்கிக் கொண்டிருந்தது... ஒரு மாதிரியாக, செருப்பு, புடவை, ஹெல்மெட், ஆஃப் ஆகும் வண்டி எல்லாத்தயும் சமாளித்து ஒரு வழியா வீடு வரத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து...

அப்புறம் திங்கட் கிழமை வண்டியை சரி செய்து புதன் கிழமை வெற்றிகரமாக ஆபிஸ்க்கு எடுத்தாச்சு... அன்றும் போகும் போது பிரச்சனை இல்லை... வரும் போது காந்தி மண்டபம் தாண்டி இடது பக்கமே போகாமல் எப்படியோ ரோட்டின் நடுவிலே வந்து விட்டேன்... ப்ரிட்ஜ் ஏறி இறங்கி லெஃப்ட் போகவே முடியல... முழுக்க முழுக்க ,கடைசில கிண்டிக்கு இடது புறம் திரும்பும் வரை... இரண்டு புறமும் சல் சல்லுன்னு செம்ம வேகமா யம கிங்கரர்களா போறாங்க...,"நமோ நாராயணா, நமோ நாராயணா.... கிட்ட எதாவது வண்டி வந்துட்டா நமோஓஒ நாராயணா ந்னு இன்னும் கொஞ்சம் ஷேக்கோட.." நான் எப்படி வண்டி ஓட்டினேன்னே புரியல.. மவுண்ட் வர வரைக்கும்... அதுக்கப்புறம் பரவால்ல... ராத்திரி படுத்தா ஒரே பயம் பயம்மா போச்சு... இன்னிக்கி இத்தனைக்கும் ஒரு பஸ் கூட நம்மல க்ராஸ் பண்ணல... அது வேற வந்தா என்ன ஆகும்.. கனவெல்லாம் என்னய சுத்தி பைக்கும் காருமாகவே ஓட, கார்த்தால எழுந்து, "இதெல்லாம் சரிப்பட்டு வராது நா பஸ்லயே போறேன்னு அழாத குறையா சொன்னேன்..

சரி பயமா இருந்தா இந்த ரூட்ல போகாத கோட்டூர்புரம் வழியா போன்னார் இவர். ஒரு நாள் கேப் விடுவோம்னு பஸ்ல ஆபிஸ் போனா உடன் வேலை செய்யற பையன் டி நகர், போய் பார்க் ஷெரட்டன் வழியா ஆந்திர மகிள சபா வந்து அடையார் வர ரூட் போட்டு கொடுத்தான்.... அது பெட்டரா இருந்ததால அடுத்த நாள் விசாரிச்சுண்ட்டே போனேன்... ஆந்திர மகிள சபா வரைக்கும் கரெக்டா போனேன்... அங்க ஒன் வே.. அதுனால சுத்திட்டு வந்து ரைட் எடுக்கனும், தப்பா லெட் எடுத்துட்டேன். போயிண்டே இருக்கேன்... அடையார் மாதிரியும் இருக்கு ...இல்லாத மாதிரியும் இருக்கு, ஒரு சிக்னல்ல ஆட்டோக்காரர் கிட்ட, "இன்னும் அடையார் எவ்வளவு தூரம் போகனும் "நு கேக்க, "ஆப்போஸிட் சைட்ல ரெண்டு கிலோ மீட்டர் மேல வந்துட்டீங்க, யூ டர்ன் எடுத்து நேர போங்க" என்று வழி சொல்ல ஒரு வழியா ஆபிஸ் வந்து ரீடிங் பார்த்தா இருபது கிலோ மீட்டர் வந்துருக்கேன்...

சாயங்காலம், மறுபடியும் அதே ரூட் கொஞ்சம் வழி மறந்து, ஆர்.ஏ புரத்தில் சுத்தி, டி.நகர் ட்ராஃபிக்கில் மாட்டி, ஒரு வழியாக வீடு வந்த போது கை காலெல்லாம் பார்ட் பார்ட்டா வலி எடுக்க.... வீட்டுக்குள் நுழைந்த உடனேயே, "நவராத்திரி வெள்ளிக்கிழமை யா இருக்கு... அக்கம்பக்கத்துல போய் அழைச்சுட்டு வெத்தலை பாக்கு வாங்கிண்டு வா" என்று மாமியார் சொன்னதும்... ஓன்னு அழனும் போல இருந்தது... நோ.. நோ.. வெள்ளிக்கிழமை விளக்கு வச்சு... நோ சான்ஸ்... முகம் கழுவி ஒட்ட வைத்த புன்னகையுடன் வெ.பா வாங்க கிளம்பினேன்.. அத்தோட டூ வீலருக்கு மங்களம்... சுப மங்களம். பாடியாச்சு..

Saturday, October 4, 2014

பல் படாமல் கடி!!

(கொஞ்சம் [ரொம்பவே?] நீளமான இந்த பதிவை எழுதும்முன், இந்திய தண்டனைச் சட்டத்தின் 'கால வரையறை' (statute of limitations) வரம்புகள் பற்றி  கொஞ்சம் ஆழமாகப் படிக்க வேண்டியிருந்தது!!  காலம்  கடந்து  என் பட்டமும் வேலையும் பறிபோக வாய்ப்புள்ளதா என்று ஆராய்ச்சி செய்த பின்னரே எழுதுகிறேன். இந்த பதிவு  நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.)
பல்கலைகழகத்தில் இருந்து அன்று வந்த கடிதம், 2012ஆம் ஆண்டின் கால்நடை பட்டப்படிப்பின் கடைசி நேர்முக தேர்வுக்குழுவில் கால்நடைப்  பண்ணைகள் சார்பாக  என்னை  ஒரு உறுப்பினனாக நியமித்திருந்தது. கால்நடை மருத்துவராக ஆகுமுன், கல்லூரியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் கடைசி தேர்வு இது. அட, இப்பொழுதுதான் நானே இந்த தேர்வை எதிர்கொண்டது போலுள்ளது! அதற்குள் 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டதா? என் காலத்தில் (1989 ஆம்  ஆண்டில்) தேர்வுக்குழுவில் இருந்தவர்கள்  கால்நடை மருத்துவத்துறையின்  ஜாம்பவான்கள்.  முனைவர்கள் சண்முகசுந்தரம், ராகவன், ஜானகிராமன்...awe inspiring என்ற வார்த்தைகளுக்கு உரித்தானவர்கள்! வேலைப்பளுவை மறந்து, சற்று இளைப்பாற இந்த நேர்முகத்தேர்வு அவர்களுக்கு ஒரு விளையாட்டு போல! எங்களைப்போன்ற எலிகளைக்  கொஞ்ச நேரம் அந்த  பூனைகள் (புலிகள்) தட்டி விளையாடிவிட்டு வெளியே அனுப்புவார்கள்!! இப்பொழுது நான் அவர்களது  இடத்தில்!! அவர்கள் வயதும், அனுபவமும் எனக்கும் வந்து விட்டதோ? வயதாகிவிட்டது தெரிகிறது. அனுபவம்?

நேர்முக தேர்வு நடக்கும் கட்டிடத்தின் முன்  அன்று இறுதியாண்டு மாணவர்கள் கூட்டம், எதிர்பார்ப்புடன். முந்தைய தேர்வு முறைக்கும் தற்போதய தேர்வு முறைக்கும் பல வித்தியாசங்கள். முன்னாள், சாதாரண அறையில்,  மின்விசிறி இரைச்சலுடன் ஒவ்வொரு மாணவனுக்காக நேர்முக தேர்வு நடக்கும். இப்பொழுதோ, குளிரூட்டப்பட்ட அறை, சொகுசு 'பின்தள்ளு' இருக்கை என்று பல வசதிகள். தேர்வு முறையிலும் சில  மாற்றங்கள்.  ஒரே நேரத்தில், நான்கு மாணவர்களுக்குத்  நேர்முக தேர்வு நடக்கும். இரண்டு  பேர்கொண்ட மூன்று குழுக்களிடம் மாணவர்கள் ஒவ்வொருவராக, வரிசையாக தேர்வைச் சந்திப்பார்கள். இறுதியாக, தேர்வுக்குழுவின் தலைவர் முனைவர் திருநாவுக்கரசு (சிகிட்சையியல்) அவர்கள் தேர்வு நடத்துவார். நானும், முனைவர் தங்கவேலு (நுண்ணுயிரியியல்) அவர்களும் ஒரு குழு...நான் பண்ணைப் பராமரிப்பு சம்பந்தமாகவும், அவர் நுண்ணுயிரி நோய்கள் பற்றியும் தேர்வு நடத்த வேண்டும். காலை 10 மணி முதல் 11 மணி  வரை ஐந்தாறு மாணவர்களை வதைத்தாயிற்று. அடுத்து வர வேண்டிய மாணவர் , முனைவர் ஸ்ரீதர் (நோய்க்குறியியல்) மற்றும் வேறொரு பேராசிரியர் குழுவின் நேர்முக தேர்வை முடித்து, எங்கள் முன் வரத் தயாரானார் . ஸ்ரீதர் சார், அந்த மாணவர் எழுந்தவுடன், 'நல்லா படிக்கிறவன்' என்று எனக்கு தெரியும் படி சைகை செய்தார். பொதுவாக இந்த நேர்முகத் தேர்வுகளில், பல மாணவர்கள் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க' நிகழ்ச்சியல் வருவது போல, ஏறுமாறாகத்தான் பதில் சொல்வார்கள்.  நன்றாக பதில் சொல்லும் மாணவர்களுக்குக்  கேள்வி கேட்பதே ஒரு அலாதி சுகம் தான். எதிபார்ப்புடன் மாணவரை வரவேற்றேன்.அந்த மாணவர் உயராமாக, கண்ணாடி அணிந்து, மிக நேர்த்தியாக உடை அணிந்திருந்தார்......இப்பொழுதே பார்ப்பதற்கு ஒரு பேராசிரியர் போல!  என் கல்லூரிக்காலங்களில் (ஏன், பேராசிரியர் ஆன பின்னும் கூட!!) நான் இவ்வளவு ஒழுக்கமாக உடை அணிந்தது இல்லை!! அவர்  எங்கள் முன் உள்ள நாற்காலியல் அமர்ந்து, தான் கொண்டு வந்த பதிவேடுகள் மற்றும் எழுத்துப்பணி (assignment) முதலியவற்றை சமர்ப்பித்தார். அவற்றுள், பண்ணை மேலாண்மை தொடர்பானவற்றை நான் பிரித்து எடுக்க, முனைவர் தங்கவேலு அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். முதலில், காட்டுப்பாக்கம் பண்ணை பயிற்ச்சிக் காலத்தில் அவர் செய்த எழுத்துப் பணியை திருத்த ஆரம்பித்தேன். அவருக்கு அளிக்கப்பட்ட தலைப்பு முயல்வளர்ப்பு சம்பந்தப்பட்டது. அத்தலைப்பில் எழுத்துப்பணியை முடித்து, துறை அலுவலர் முனைவர் முத்துசாமி அவர்களிடமும், பண்ணைத்  தலைவர் முனைவர் கோபி அவர்களிடமும்  முதல் பக்கத்தில் கையொப்பம் வாங்கியிருந்தார்.  கையெழுத்துக்களைத்  தற்செயலாக மீண்டும் பார்த்த எனக்குத்  தூக்கி வாரிப்போட்டது!! இரண்டும் போலிக் கையொப்பங்கள்!! இந்த மாணவரா? இருக்கவே முடியாது!! கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவரை உற்றுப் பார்த்தேன். என் பார்வையை  உணர்ந்து சட்டெனெ என்னைப்   பார்த்து, மீண்டும் திரும்பிக்கொண்டார். முந்தய மாணவர்கள் விட்டுச்சென்ற எழுத்துப்பணி நகல்களை எடுத்து கையொப்பங்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். சந்தேகமேயில்லை! இரண்டு ஆசிரியர்களின்  கையொப்பங்களையும்  இவரே போட்டிருக்கிறார். ஒரிஜினல் போலிக் கையொப்பங்கள்!! என்ன தைரியம்!! அதற்குள், தங்கவேலு சார் அவர் பங்குக்கான கேள்விகளை முடித்து என்னைப் பார்த்து சைகை செய்தார். மாணவரும், கேள்விகளை எதிர்பார்த்து என்பக்கம் திரும்பினார்.  நான் அவரிடம் கேட்டேன் "பண்ணையில் தரப்பட்ட எழுத்துப்பணியைச் சரியாக செய்து, முறையாகக் கையொப்பம் வாங்கி விட்டீர்களா ?". ஆம் என்பதுபோல் தலை ஆட்டினார். என் இருக்கையில் இருந்து முன்னால் நகர்ந்து நான் அவரது எழுத்துப்பணியை முதல் பக்கம் அவருக்கு தெரியுமாறு திருப்பிப் பிடித்துக்காட்டி  உறுதியான குரலில் சொன்னேன் "இந்த ரெண்டு  கையொப்பங்களும் போலிக் கையொப்பங்கள்". அவரது முகத்தில் கொஞ்சம் கலவரம், சிறிது கோபம் மற்றும் நிறைய அதிர்ச்சி!! "இல்ல சார். அது அவங்க கையொப்பங்கள் தான்" என்றார். நான் மீண்டும் மெல்லிய குரலில் தீர்க்கமாகச்  சொன்னேன் "பொய் சொல்றீங்க! நீங்க போர்ஜரி செய்திருக்கீங்க". அவர் முகத்தில் அதிர்ச்சியை பின் தள்ளி கோபம் முன்வந்தது. புருவத்தை சுருக்கி சற்று கோபமாக "நான் அப்படிப்பட்டவனில்லை . எந்த தப்பும் செய்யல்ல" என்றார். "அப்ப நீங்க ஒதுக்க மட்டிங்க?" என்றேன். "தப்பு செஞ்சா தான ஒதுக்கணும். நான் தப்பு செய்யல்ல" என்றார் கோபத்தோடு உறுதியாக. இருக்கையில் பின் சாய்ந்து  அமர்ந்து நிதானமாகச் சொன்னேன் "அப்ப சரீங்க. எனக்கு வேற வழியே இல்லை. கல்லூரி முதல்வரிடம் பார்மலா ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து, இந்த எழுத்துப்பணியை "கேளிவிக்குரியுள்ள தஸ்தாவேஜுகளுக்கான அரசு ஆய்வாளர்' (Govt. examiner of questioned documents) அலுவலகத்தில் சமர்ப்பித்துப் போலியான்னு கண்டுபிடிக்கணும்" என்றேன். சட்டென அவர் முகம் வெளிறி விட்டது. கோபம் சுத்தமாக மறைந்து பயம் அந்த இடத்தை பிடித்தது. தடுமாற்றத்துடன் "சார்..." என்றார். "நீங்க ஒத்துக்கல்லேன்னா  எனக்கு வேற வழி இல்ல" என்றேன். "அவங்க சைன நான் தான் சார் போட்டேன்" தலையை குனிந்து ஈனமாகச் சொன்னார். "ஏன் அப்படி செஞ்சீங்க? இந்த 5 மார்க் இல்லேன்னாலும் நீங்க தேறுவீங்க.  எதுக்கு இந்த வேலையெல்லாம்? நீங்க நல்ல மாணவர்னு சில டீசெர்ஸ் சொல்றாங்க. இனிமேல் உங்கள பாக்கும்போது, இந்த  போர்ஜரி ஞாபகம் தானே எனக்கு வரும்?" என்று பொரிந்து தள்ளிவிட்டேன்! தலையை குனிந்து, இடையிடையே ' சாரி சார்', சாரி சார்' என்று சொல்லிக்கொண்டே அமர்ந்திருந்தார். "நீங்கள் போகலாம்" என்றதும் சோர்வாக  எழுந்து விடை பெற்றார். இவ்வளவு நிகழ்ந்தது எங்கள்  மூன்று பேர் தவிர யாருக்கும் தெரியவில்லை. தங்கவேலு சார் அவரது வழக்கமான புன்முறுவலோடு சொன்னார் 'எப்படி இருக்காங்க பாருங்க பசங்க' என்று. மதிய உணவின் போது ஸ்ரீதர் சாரிடம் சொன்னேன் "உங்க 'நல்ல' பையன் அப்பட்டமா போர்ஜரி செஞ்சு எங்கிட்ட மாட்டிகிட்டான்".  அவர் அதிர்ந்து போனார் "நெஜமாவா? அடப்பாவி!!". அருகில் இருந்த இன்னொரு பேராசிரியர் கேட்டார் "பாஸ் பண்ணி விட்டுட்டீங்களா? இந்த மாதிரி பசங்கள எல்லாம் பெய்ல் பண்ணனும். என் சார் விட்டீங்க?".  .ஆமாம்...ஏன் விட்டேன்? என்  நினைப்பு என்னைப்  பல வருடங்கள் பின்னால் இழுத்துச் சென்றது.
                         1982-1984 ......எவ்வளவு இனிமையான வருடங்கள்!! மதுரை டி .வி . எஸ். உயர்நிலைப்பள்ளியில் பத்தாம்  வகுப்பு முடிந்து ஏன் 'தூய அறிவியல்' எடுத்தேன் என்று தெரியாது...கணக்கில் மக்கு அல்ல. உயிரியல் படிப்புக்கு கணக்கு தேவையில்லை என்ற நினைப்புதான்!   இப்போழுது நினைக்கும் போது ,  கணக்கு என்ற 'அறிவியலின் அரசி' இல்லாத அறிவியலை எப்படி 'தூய அறிவியல்' என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.  முதல் (கணக்கு) வகுப்பு பசங்க, குறிப்பா செந்தில்நாதனோடு (இப்பொழுது அமெரிக்காவில் இதய நோய் நிபுணர்)  சண்டை, அவன் எங்களை 'கணக்கு வராத பசங்க' என்று கிண்டலடிப்பதால்.  இயற்பியல் ஆசிரியர் திரு. ராஜமன்னார் அவர்களும் அப்படியே. 'கணக்கில்லாமல் எப்படி physics படிக்கப்போறீங்க?' என்று அவருக்கே உரித்தான கர்ஜனை சிரிப்பால் மிரட்டுவார். அவரைப்போல் ஒரு அருமையான வாத்தியாரை பார்ப்பது அரிது. அவருக்கு என்னைப் பிடிக்கும்....வகுப்பில் கேள்விகளுக்கு  பதில் அளிப்பதாலும், மார்க் வாங்குவதாலும். இறுதிப் பரிட்சையும் வந்தது. ஆங்கிலப்  பரிட்சையின்போது என் பள்ளித் தோழன் ஒருவனது தாய் (அவர் வேறொரு பள்ளியில் ஆசிரியை) எங்களுக்கு அறைக் கண்காணிப்பாளராக வந்தார். பிறகென்ன? ஒரே கொண்டாட்டம் தான்!! அது தேர்வு மாதிரியே இல்லை...காப்பியோ, காப்பி! நான் தேர்வுகளில் எப்பொழுதும் காப்பி அடிப்பதில்லை (நெசமாங்க...நம்புங்க!!). ஒருவாறாக முக்கியமான பரிட்சைகள் (வேதியல், மிருகவியல், தாவரவியல்) எல்லாம் முடிந்தன. சிறப்பாகச்  செய்திருந்தேன். கடைசி தேர்வு இயற்பியல். அதற்கு முந்தின மாலை, வீட்டில் படித்துக்கொண்டிருந்தேன். வாசலில் என்  வகுப்பு தோழர்கள் மூன்று பேர் வந்தனர். எனக்கு ஆச்சர்யம். "என்னடா இன்னைக்கு வந்திருக்கீங்க?' என்று கேட்டேன். "ஒன்றுமில்லை. இயற்பியல் தேர்வு கொஞ்சம் கஷ்டம். நாங்க பாஸ் பண்ண ஹெல்ப் பண்ணுடா" என்றான் அதில் ஒருவன். "எனக்கு புரியலியே? என்றேன். "நாளைக்கு பரிட்சையில் கொஞ்சம்  எங்களுக்கு பேப்பர் தந்து ஹெல்ப் பண்ணுடா" என்றான் அனாயாசமாக. அதிர்ந்து விட்டேன். பரிட்ஷைகளில் பிறருக்கு நைசாக பதில் சொல்லித் தந்ததுண்டு. ஓரமாக என் பதில் தாளை காண்பித்ததுண்டு. ஆனால் பதில் தாளை பார்த்து எழுத இது வரை யாருக்கும் கொடுத்ததே இல்லை. அந்த வகையில் basement ரொம்ப வீக்!! "அம்மாடி! முடியாது! " உறுதியாக மறுத்தேன். "ஒன்னும் பயப்படத் தேவையில்லை. நம்ம --------- அம்மா தான் நாளைக்கும் அறைக் கண்காணிப்பாளர். அதற்க்கு school  அலுவலகத்தில் சொல்லி ஏற்ப்பாடு செய்தாயிற்று". லஞ்சத்தின் மகிமையை  நேரில் பார்த்தது அது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். எந்த நேரத்தில் 'சாத்தான்' என் மனதில் புகுந்தது என்று தெரியாது...பதில் தாள்களை பகிர்ந்துகொள்ள முதல்முதலாய் ஒத்துக்கொண்டேன்!. மறுநாள் அவர்கள் சொன்னதுபோல் என் பள்ளித்தோழனின் தாயார் தான் மீண்டும் அறைக் கண்காணிப்பாளர். இயற்பியல் பரீட்சை கேள்வித்தாள் எனக்கு மிகவும் இலகுவாக இருந்தது. உற்சாகமாக எழுதிக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கோரிக்கைகள் வரத்தொடங்கியது. "டேய், இந்த question பதில் குடுடா"...தயங்கித் தயங்கி என் பதில் தாளைக் கொடுத்தேன். அது போய்  ஒரு சுற்று  சுற்றி விட்டு மாடப்புறாபோல் மீண்டும் என் மேஜைக்கு வந்தது!! அட இவ்வளவு தானா? என் பதில் தாள்கள் ஒன்று ஒன்றாக பல மேஜைகளுக்கு சுற்றி வரத் தொடங்கியது.....அறைக்  கண்காணிப்பாளர் ஆசிரியையின் ஆசிர்வாதங்களுடன்!! சுமார் ஒன்றரை மணி நேரம் போயிருக்கும். எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தேன். அறையின் வாசலை அடைத்தபடி ஒரு ஆஜானுபாகு மனிதர் நின்றிருந்தார். எப்பொழுது வந்தார் என்று தெரியவில்லை. வெள்ளை சட்டை...பழுப்புப் பச்சை  (olive) கால்சட்டை. நெற்றியில் நாமத்துடன் கைகளை மார்புமுன்  கோர்த்த படி தீர்க்கமாக  அறைக்குள் நோட்டம் விட்ட வண்ணம் நின்றிருந்தார் .சற்றென்று திரும்பி நேராக, இரண்டாம் வரிசையில் கடைசி மேஜையில் அமர்ந்து அவரைப்பார்த்துகொண்டிருந்த என்னைப்  பார்த்தார் (அண்ணலும் நோக்கினார், இந்த அல்பனும் நோக்கினேன்!!). விறு விறுவென்று என்னை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வாகனங்களின் பளீரிடும் முன்விளக்கு ஒளியில் மெருண்டு  முழிக்கும் பெருச்சாளியை போல் வாயைப் பிளந்துகொண்டு அவரைப் பார்த்துக்கொண்டிருந்த என்னைச்  சடுதியில் நெருங்கினார். மேசையின் விளிம்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு நான் அவரை பார்த்துக்கொண்டிருக்க, அவர் என் மேசை மேல் சிதறிக்  கிடந்த என்  பதில் தாள்களை, சட சட என்று கலைத்து எதையோ தேடினார்! அவர் தேடியது கிடைக்கவில்லை போல சட்டென்று என் முன் அமர்ந்திருந்த மாணவனின் மேசைக்குச் சென்று தேடினார். என் தொண்டை உலர்ந்து, நாக்கு மேல்வாயில் ஒட்டிக்கொண்டது!! கண்களின் ஓரங்களில் நீர் முட்டியது!! ஏனென்றால் என் முதல் பக்க பதில் தாளை சற்று முன் தான் அவனிடம் கொடுத்திருந்தேன். அவனது பதில் தாள் குவியலுக்குளிருந்து எனது பதில் தாளை இலாவகமாகப் பிரித்தெடுத்தார். அதன் மேல் இருந்த பதிவு எண்ணைப் படித்து  விட்டு, என் மேஜை மேல் சாக் பீசில் எழுதியிருந்த எண்ணை ஒத்துப்பார்த்தார். " எந்திரிடா படவா ராஸ்கல்!"  அவரது கணீர்க் குரல் என்னுள் ஊடுருவி, என்னிடம் இருந்த கொஞ்ச-நஞ்ச தைரியத்தையும் பொடிப்  பொடியாக்கியது. கைப்பற்றிய பதில் தாளை மடித்து வலது கையில் பிடித்து, அதே கையினால் என் சட்டைக்காலரையும் கொத்தாகப் பிடித்து என்னை எழுப்பினார். திறந்திருந்த (பிளந்திருந்த?)என் வாயை மூடி,  ஒட்டியிருந்த நாக்கை பிரித்து பேச  முயன்றேன். "ஸா " 'இரஸ்" "ரர்'... என்று அர்த்தமில்லாத சத்தங்கள் மட்டும் தான் வந்தது, காற்றுடன் . வலது கையில் என்னையும் , இடது கையில் என் நண்பனையும் காலரைப் பிடித்து வெளியே நடத்திச் சென்றார்....கசாப்புக்  கடைக்குச் செல்லும் பரிதாப ஆடாக  நானும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட  நாயகன்  விருது வாங்கப் போகிறவன்  போல் அவனும் அறைக்கு வெளியே  இழுத்துச் செல்லப்பட்டோம். (பின்னர் தெரிந்து கொண்டேன், வந்தவர் என்னைப்போல் 'மொள்ளமாரிகளைப்' பிடிப்பதற்கென்றே அமைக்கப்பட்ட 'பறக்கும் படையின்' (flying squad) தலைவர் என்று. 35-40 பேர் உள்ள அறையில் நேராக என்னிடம் ஏன்  வந்தார் என்று தெரியாது. உளவுத்துறை  சொல்லியிருக்குமோ? உளவுத்துறை அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லையே? என் பையன் விளையாடும் கைப்பேசி விளையாட்டுகளில் பார்த்ததுண்டு...செய்ய வேண்டிய செயலினைக்  குறிக்க ஒரு அம்புக்குறி மேலும் கீழுமாக ஒரு இடத்தில் மிதந்து கொண்டிருக்கும். அது போல் என் தலை மேல் ஒரு அம்புக்குறி இருந்ததோ...இவன் தான் காப்பி அடிக்க உதவுகிறான் என்று காட்ட? யாமறியேன் பராபரமே!). வெளியே வந்தவுடன், சிறிய நீரழுத்த மண்டலமாக கண்கள் ஓரம் மட்டும் இருந்த என் அழுகை,  மிக வலிமை பெற்று  கீழ்ப்புறமாக நகர்ந்து, கண், மூக்கு, வாய் மூலம் பெரும் இரைச்சலுடன் ஒப்பாரியாக வெளிவரத்  தொடங்கியது. "Girls எல்லாம் இருக்காங்கடா . ஊளை இட்டு மானத்தை வாங்காதே!!' என்று உள்ளே ஈனமான  குரல் ஒன்று  முனகியது. 'Girls ஆவது ஒண்ணாவது!! பொழைப்பே  போச்சு!! நீ அழுடா" என்று ஒப்பாரி அந்த குரலை அமுக்கியது. "பேர சொல்லுங்கடா"...அவர் கர்ஜித்தார். ----------------------- என்று அவன் சொன்னான், அடுத்த பத்மஸ்ரீ பட்டத்துக்கு ஆள் எடுப்பது போல். ஒப்பரியினூடே "..சர். please....ஹ..என்று அர்த்தமில்லாத சத்தங்களுடன் கெஞ்சினேன்! "ஆழாக்கு உயரம் (அப்பொழுதெல்லாம் நான் ரொம்ப குள்ளம்) இருந்திட்டு copy அடிக்கிற..உன்னையெல்லாம்...பேர் சொல்லுடா'" மீண்டும் உறுமினார். விக்கி விக்கி அழுதுகொண்டே பேரைச் சொன்னேன். எங்கள் பதிவு  எண்களையும், பேர்களையும் ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டார். 'உங்கள பாஸ்  பண்ண விட்டேனா பாருங்க" சீறினார். எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியாது. "போங்கடா...போய்  பரீட்சை எழுதுங்க" என்று அனுப்பி வைத்தார். தள்ளாடிச் சென்று இருக்கையில் அமர்ந்தேன். அறையில், பரம்பரை காப்பி அடிப்பவர்கள் எல்லாம், இந்த பஞ்சத்துக்கு காப்பி அடிக்க உதவி மாட்டியவனைப் பரிதாபத்துடன் பார்த்தனர். என் கண்களில் நீர் கப்பி  எல்லாம் மங்கலாகத்  தெரிந்தது. இமைகளை அழுத்தி மூட, பொல பொலவென கண்ணீர் துளிகள் என்  பதில் தாள்கள் மேல். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் புறங்கையால் துடைத்தேன். நான் எழுதியிருந்த பதில்கள் கண்ணீரோடு கசிந்து அழிந்தது. என்ன எழுதினேன், ஏது  எழுதினேன் என்று தெரியாது.....தேம்பல்களுக்கிடையில் ஒருவாறாகப்  பரிட்சையை முடித்தேன். யாரிடமும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தேன். +2 தேர்வில் 1044 மார்க்குகள். வேதியல் -195, விலங்கியல்-183, தாவரவியல்-176. இயற்பியல்-165!! இது வரை 190க்கு குறையாமல் எடுத்த பாடத்தில் வெறும் 165!!  அவ்வருடம் புதிதாக கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வில் 48/50. எல்லாம் , சேர்த்து 227.75/250.மருத்துவ படிப்புக்கு ஆப்பு வைத்தாயிற்று என்று உடைந்துபோனேன்.  மருத்துவ படிப்புக்கு குறைந்த பட்ச மதிப்பெண் மெல்ல மெல்ல சரிந்து இறங்கி இறுதியில் 228.2 வரை வந்து நின்றுபோனது. வேறு வழியின்றி அமெரிக்கன் கல்லூரியில் 6 மாதங்கள் உயிரியல் படித்தேன். செப்டம்பர் வாக்கில், மூன்றாவதோ, நான்காவதோ பட்டியலில் TNAU வில் இருந்து அழைப்பு வர, கால்நடை மருத்துவம் சேர்ந்தேன்.
எனக்கு நிகழ்ந்த இந்த அனுபவத்தை ஒரு வரம் என்று தான் நான் கருதுவேன். என்னைக் கையும் களவுமாகப் பிடித்தவர், சட்டப்படி நடந்து  3 வருடங்கள் என்னை debar செய்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று தெரியாது! அவ்வாறு செய்யாமல், அவரது கருணை தான் இன்று என்னை நான் இருக்கும் இந்த  (நல்ல) நிலைமைக்கு கொண்டுவந்தது என்று நினைப்பதுண்டு.  இந்த நினைப்பு தான், ஒரு உந்துதலில் (impulseஇல்) தவறு செய்யும் மாணவர்களுக்கு  கொடும் தண்டனை கொடுக்க வேண்டாம் என்று என்  கையைக்  கட்டுகிறதோ? தெரியாது! கல்லூரிக்காலத்தில் செய்யும் சிறு தவறுகளுக்காக வழங்கப்படும் அதிகப்படியான தண்டனைகளால் இறுகிப்போய் தவறான பாதைகளில் சென்றுள்ள பல பேரை எனக்குத் தெரியும். ஒரு ஆசிரியனுக்கு தண்டிக்கும் அதிகாரத்தை விட மன்னிக்கும் அதிகாரம் தான் வலிமையைக் கொடுக்கிறது என்பது என் கருத்து. நான் செய்வது முற்றிலும் சரியா என்று எனக்குத் தெரியாது... ஆனால் நிச்சயமாகத் தவறில்லை!! 
"போலாமா"....தங்கவேலு சார் கேட்டது என்னை விசுக்கென நிகழ் காலத்துக்கு கொண்டுவந்தது. மீண்டும்  தேர்வு அறைக்கு சென்றோம், எஞ்சியிருந்த மாணவர்களை வதைக்க!!
(பின்குறிப்பு: "சார், இதுல என்ன தப்பு, சொல்லுங்க?'". பெயர் மறைக்கப்பட்ட அந்த எழுத்துப்பணியை பிற்ப்பாடு முனைவர் கோபியிடம் காண்பித்துக் கேட்டேன். "அடப்பாவி"...அவரது புருவங்கள் சுருங்கியது. எனக்கோ பெருமை. அவர் தொடர்ந்தார் "rabbitக்கு rabbet என்று எழுதியிருக்கான் பாரு". "அட அதில்லை சார். வேற" என்றேன் சற்று எரிச்சலுடன். "வேற என்ன? வெய்ட் ஏதாவது தப்பா  போட்டிருக்கானா ?" புரட்டிப் புரட்டிப் பார்த்துசாதுவாகக் கேட்டார். எனக்கு அழுவாச்சியே வந்துவிட்டது!! கடைசி வரை அவர் தனது கையொப்பம்  போலி என்பதைக் கண்டு பிடிக்கவே இல்லை!!)

Tuesday, September 16, 2014

சும்மா மாலுக்கு போனப்ப ஒரு அப்பா பண்ணின அலும்ப பார்த்து எழுதினது

எதிரில் அமர்ந்து ஆசையாக தான் கேட்ட சாக்லேட் கேக்கை எடுக்கப் போன மூன்று வயது மகனையும், அவனை கேக்கை தொட விடாமல் கையில் ஸ்பூனையும் ஃபோர்க்கையும் கொடுத்து எப்படி சாப்பிடனும்னு க்ளாஸ் எடுக்கும் கணவன் அருணையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஸ்வேதா... சிறிது வாய்க்கு வெளியே வந்தாலும் டிஷ்யூ வைத்து தொடைத்து விட்டுதான் அடுத்து சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான்...

அவன் அப்படித்தான்...

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறை, நாசுக்கு ... அதனால் ஒரு வேலையை முடிக்க தாமதமானாலும் பரவாயில்லை...

மணமான புதிதில் பைக்கில் ஏறி ஆசையாக அவன் இடுப்பை வளைத்து பிடித்தபடி அமர்ந்தவுடன், "எதுக்கு இப்ப சட்டையை கசக்கற .. பின்னால ஹேண்டில் இருக்கு அத பிடிச்சுக்கோ"

தரையில உட்காரக் கூடாது, சேர், சோபாலதான் உட்காரனும் ... எல்லா பொருட்களும் அந்தந்த இடத்தை விட்டு சிறிதும் இடம் மாறக் கூடாது... சோஃபால சிட்டிங் போஸ்ட்சர் மட்டும்தான்... கொஞ்சம் ரிலாக்ஸ்டா காலை நீட்டி சாயக் கூடாது..

"ஓ மை காட்... மாம்ஸ் என்ன பண்றீங்க" என்ற சத்தமான குரல் கேட்டு நிமிர்ந்தாள்...

அருணுடைய அக்கா மகன் ஆகாஷ்... ப்ளஸ் டூ படிக்கறான் . "மாம்ஸ் குழந்தைய ஃப்ரீயா விடுங்க" என்றவன் ரிஷபை தூக்கிக் கொண்டு போய் நன்றாக கை கழுவி விட்டு, மீண்டும் கேக் முன்னால் உட்கார வைத்து, "குட்டி பையா இப்ப கையால எடுத்து சாப்பிடு" என்றான்..

"டேய் என்னடா பண்ற, அவன் கை முழுக்க கிரீமாயிடும். அதோட முகம் சட்டை எல்லாம் கேக் ஆக்கிடுவான்.. பாக்கவே அசிங்கமா.."

"என்ன மாம்ஸ் இப்படி சொல்றீங்க, குழந்தை கேக், ஐஸ்க்ரீமெல்லாம் முகம் முழுக்க அப்பிக்கறது எவ்வளவு அழகு தெரியுமா .. ஃப்ரீயா விடுங்க மாமா.. கைய சுத்தமா கழுவி விட்டுட்டு சாப்ட வைங்க.. விளையாடற நேரத்துல விளையாட விடுங்க...
ரொம்ப மிலிட்டரி ரூல் இருந்தா லைஃப்ல எதையுமே ரசிக்க முடியாது... சரி மாம்ஸ் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க .. ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு ஸ்டடிஸ்னு ஃப்ரெண்ட்ஸ்லாம் ஒரு ப்ரேக்குக்காக இங்க மாலுக்கு வந்தோம்... இங்க உங்களப் பார்த்த உடன ஹாய் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்... பை மாம்ஸ், பை ஆண்டி, பை பை குட்டி பையா"
சிரித்தபடியே வெளியே காத்திருந்த நண்பர்களுடன் சென்று விட்டான்..

"அட இந்த சின்ன பையனுக்கு தோணினது தனக்கு தோணவில்லையே, குறந்தபட்சமாகக் கூட அருணுக்கு புரிய வைக்க நான் முயற்சிக்கவில்லயே" என்று நினைத்தபடியே கணவனை பார்த்தாள்..

அவன் அமைதியாக இருந்தான். யோசிக்கட்டும்.. தெளிவு பிறக்கும்..

Friday, March 21, 2014

பரீட்சை

சிறுகதை முயற்சி... ஆட்டோவில் ஆள் அனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...


காலை எழுந்திருக்கும் போதே ஒரே அசதி… தலை வலி. சரியாக தூங்காதது காரணமாக இருக்கலாம். முதல் நாள் கேள்விப்பட்ட ஒரு செய்தி இரவு தூங்க விட வில்லை. நேற்று, முன்பு என் வீட்டின் அருகில் குடி இருந்த பெண்மணியை பார்த்தேன்… முதலில் அவள் என்னை தவிர்த்த மாதிரி தெரிந்தது.. பிறகு நானே வலிய சென்று பேசிய பின் முதலில் தயங்கி தயங்கி பேசி பின் வீட்டுக்கு வரச் சொன்னாள்… எனக்கும் வீட்டில் முக்கிய வேலை எதுவும் இல்லாததால் அவளுடன் சென்றேன்.
அங்கே, அவளுடைய மகள் பெட் ரூம்ல தூங்கிக்கொண்டு இருந்தாள்…

நான் அவர்களை சந்தித்து நாலு வருஷம் இருக்கும். அப்பத்தான் அவ பொண்ணு பத்தாவது பாஸ் பண்ணி இருந்தாள்.. ஸ்கூல் ஃஃபர்ஸ்ட்… ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்… ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஒன்றாம் வகுப்பில் இருந்து க்ளாஸில் முதலில் வரும் பெண்தான்.
அவர்களுக்கு ஒரே பெண் குழந்தை அவள்.. கணவன், மனைவி இருவருக்கும் அவள் மட்டும்தான் உலகம். படிப்பு, படிப்பு படிப்பு…. விளயாடக் கூட அதிகம் விட மாட்டார்கள்.. அப்படியே சில சமயம் அனுமதித்தாலும், அம்மா, அப்பா கூடவே இருப்பார்கள்.. அதுவும் சமத்துக் குழந்தையாய் அம்மா அப்பாவ சொல் படி கேட்டு முதல் மதிப்பெண்ணே வாங்கி வந்தது.. அதனால் இந்த ரிஸல்ட் நான் எதிர்பார்த்ததுதான்.

அப்ப வாழ்த்தி விட்டு போன பின் இப்பத்தான் சந்திக்கிறேன்.
“என்ன… ஐஸ்வர்யாக்கு காலேஜ் இல்ல”

நான் கேட்டதுதான் தாமதம்… அந்த பெண் பெருசா அழ ஆரம்பித்து விட்டாள்.. எனக்கு ஒண்ணும் புரியவில்லை.. சத்தம் கேட்டு ஐஸ்வர்யா வெளில வந்து அவ அம்மாவ மலங்க மலங்க பார்த்துட்டு ஒண்ணும் பேசாமல் உள்ளே போய் கதவை சாத்திக் கொண்டு விட்டாள்…

எனக்கு டென்ஷனாயிடுத்து… மெதுவாக அவள் தோளத் தொட்டு, “என்ன ஆச்சு”

“நிறைய நடந்து போச்சு.. எங்க இருந்து ஆரம்பிக்கறதுன்னு தெரியல”

“முதல்ல தண்ணி குடிங்க, அப்புறம் பேசலாம்” என்று சொல்லி ஃப்ரிஜ்ஜைத் திறந்து தண்ணி பாட்டிலை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தேன்..

மட மடவென்று தண்ணிய குடிச்சுட்டு, முகத்த தொடச்சுண்டு ஆரம்பித்தாள்…

”இவள ப்ளஸ் ஒன் அதே ஸ்கூல்ல சயன்ஸ் க்ரூப்ல சேர்த்தோம்… எங்களுக்கு அவள டாக்டராக்கனும்னு ஆச… மொதல்ல க்ளாஸ் டெஸ்ட் நல்லா செஞ்சா எப்பவும் போல… குவார்ட்டர்லி எக்ஸாம்ல, ஏன்னு புரியல.. ஃபிஸிக்ஸ்ல ஃபெயில் மார்க் வாங்கிட்டா… எங்களுக்கு ரொம்ப ஷாக்கா ஆயிடுத்து.. அவளுக்கும்தான்.. நாங்க இன்னும் அதிகமா ப்ரெஷர் கொடுத்து படிக்க சொல்லிண்டே இருந்தோம்… அவளும் ராத்திரியும் லேட்டா கண் முழிச்சு, காலைலயும் சீக்கிரம்மா எழுந்து ரொம்பவே கோவாப்பரேட் பண்ணிதான் படிச்சா… என்னனு தெரியல, அவளுக்கு எப்பப்பாரு ஒரு பயம், படிச்சது மறந்துடுமோன்னு… அதே போல்தான் ஆச்சு.. ஹாஃப் இயர்லில மேத்ஸ், ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ட்ரி மூணுலயும் ஃபெயில் ஆயிட்டா… நாங்க ரொம்ப ஆடிப் போயிட்டோம் என்ன பண்றதுன்னே புரியல… அதுக்குள்ள இன்னொரு ஷாக்.. அவ புஸ்தகம் கிட்ட போகவே பயப்பட ஆரம்பிச்சா.. ஸ்கூல் போகனும்ன ஒரு அழுகை.. கட்டாயப்படுத்தி ஸ்கூல் அனுப்பிட்டு, ஸ்கூல் வாசல்லயே காத்துண்டு இருப்பேன், முக்கால்வாசி நேரம் அவ ரொம்ப அழறா வந்து கூட்டிட்டு போங்கன்னு கால் வரும்… அப்படியே மார்ச் மாசம் வந்தது.. கெஞ்சி தாஜா பண்ணி கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல உக்கார்ந்து படிக்க வச்சு எக்ஸாம்க்கு ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி நானும் அவ எக்ஸாம் எழுதற ரூம் வாசல்ல போய் வெயிட் பண்ணினேன்… எக்ஸாம் கொஸ்டின் பேப்பர கொடுத்த உடனயே, பயந்துண்டு அழுதுண்டே ஓடி வந்துட்டா… அப்புறம் மத்த பரீட்சைலாம் எழுதல….
பிறகு எஜுகேஷன் கவுன்சிலர் கிட்ட அழச்சுட்டு போய் கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட்.. படிக்க பயம் குறைஞ்சுருக்கு… அவள அப்படியே ஃப்ரீயா கொஞ்ச நாள் விடுங்க.. அப்புறம் அவளே தெளிவாகி வருவாள்னு சொல்லி இருக்காங்க… அவ கூட படிச்சவங்க எல்லாம் இப்ப காலேஜ் படிக்கறாங்க.. இவளப் பாருங்க இப்படி பிரம்ம பிடிச்ச மாதிரி இருக்கா.. உங்கள கூட அடையாளம் தெரியல பாருங்க… ஒரு வருஷமா வீட்ட விட்டே எங்கயும் போகாதிருந்தேன்… இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளில தலைய காமிக்கறேன்… இவர் நடை பிணமா ஆபிஸ் போய் வந்து கொண்டிருக்கார்.”

நானும் ஸ்தம்பித்துத்தான் போனேன். சிறிது நேரம் அவளுடன் பேசி எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் சொல்லி விட்டு ஐஸ்வர்யாவை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் அவள் ரூமை பார்த்துக் கொண்டே விடை பெற்று வந்து விட்டேன்…
இரவு முழுக்க இதுவே மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் சரியான தூக்கம் இல்லை….

“என்னம்மா நாழியாச்சே எழுந்து காபி போடலயா” இவர் குரல் கேட்டு எழுந்து வேலைகளை ஆரம்பித்தேன்
சாயங்காலம் காலேஜ்ல இருந்து வந்த மகன் தயங்கி தயங்கி நின்றான்..
“என்னடா”
“வந்து….. நேத்தே செம் ரிஸல்ட் வந்துடுச்சு… “
குறுக்கே வந்த கணவர், “ இல்லம்மா நேத்தே என் கிட்ட சொல்லிட்டான்.. நீ வெளில போய்ட்டு டயர்டா வந்தியா அதான் அப்புறம் சொல்லிக்கலாம்னு…..”
நான் அவனை பார்த்து,
“சொல்லு”
“ அது…. ஒரே ஒரு பேப்பர்ல …… மட்டும் அரியர் மா”
“அதுனால என்ன கண்ணா அடுத்தாப்ல எழுதி க்ளியர் பண்ணிக்கலாம்”
என்ன ஆச்சு இவளுக்கு என்ற குழப்பத்துடன் இவரும், எஸ்கேப்பான சந்தோஷத்துடன் அவனும் இடத்தை காலி பண்ணினார்கள்.

Tuesday, March 11, 2014

எனக்கு எப்பவுமே செல்ல ப்ராணிகள்ன ஒரு அலர்ஜி..

ஒரு முறை நான் கடைக்குப் போன போது ஒரு அம்மணி தன் ப்ரிய நாயையும் கடைக்கு கூட்டி வந்திருக்கிறாள் .. நான் சாமான் வாங்கிட்டு திரும்பினா கால் கிட்ட நாய், நான் அலறினவுடன, "ஜுஜு .. ஆன்டி பயப்படராங்க பாரு.. இங்க வந்துடு .." ஜுஜு என்னை தொல்லை பண்ணாமல் போனாலும் அதுக்கு ஆன்டியான கடுப்பு எனக்கு...
இன்னொரு நாள், கார்த்தால வாசல் தெளிக்கப் போனா, கண்ணுக்குட்டி ஸைஸுக்கு ஒரு நாய் வேகமா என்னை நோக்கி ஓடி வர, நான் அலறிய அலறலில் அக்கம்பக்கத்தில் நாலஞ்சு ஜன்னல் திறந்து மூடின ... சரியா அது எனக்கு அரை அடி முன்னால வரச்ச, டைகர்னு அதனுடைய வளர்ப்பன் கொடுத்த குரலுக்கு அப்படியே நின்னது... உசிர் போய் உசிர் வந்தது.. பயமும் கோபமும் டைரெக்ட்லி ப்ரொப்போஷனலா, அதனால் செமையா கத்தி விட்டேன் அந்தாள , கயிறு போட்டு நாயை கட்டாயத்துக்கு... "பாக்கத்தாங்க பெருசு.. அது கொழந்தங்க.. ( நம்ம அபு மாதிரி இருக்குமோ) ஒண்ணும் செய்யாது"
செய்யுமோ செய்யாதோ .. என் பக்கத்துல வரப்டாது ...

ஆனா அபுக்கு எதாவது ஒரு ஜீவன எடுத்துண்டு வந்து வளக்கனும்னு ஒரே ஆசை.. பன்னி, நாய், பூனை, முயல், கிளி எல்லாம் கேட்டுப் பார்த்தான்... நானா அலவ் பண்ணுவேன்...

போன மாசம், வொயிட் வாஷ் பண்ணும்போது, ஒரு வீட்டு சாமானையும் மாமியார் ரூம்ல போட்டு வச்சுருந்தோம்... (தன்னுடைய ரூம்ல எக்ஸ்ட்ராவா ஹேர் பின் கூட போட விடாத மாமியார், வொ.வா முன்னிட்டு நாத்தனார் வீட்டில்). எல்லா சாமானுடனும் மளிகை சாமானும் உண்டு.. அதனால், பொழக்கத்தில்தான் அந்த ரூமை வைத்திருந்தோம்.. எப்பாவோ கெடச்ச கேப்ல ஒரு பூனை தன்னுடைய குட்டியுடன் கட்டிலில் சாமான்களுடன் சாமானாய் ஏறி உட்கார்ந்திருக்கு.. எதையோ எடுக்கப் போன நாராயணன், "அந்த ரூம்ல பூனை இருக்கு"
நான் நம்பல .. "இப்பத்தானே நான் அங்க போய் ப்ளேட்லாம் வச்சுட்டு வந்தேன்"
ரூமுக்குள்ளே இருந்த சுபர்ணாவுக்குத் தெரியாமல் எட்டி பார்த்து உறுதி செய்த பின், அவளை வெளியே கூப்டு விஷயம் சொன்ன உடனே அலறினாள் .. எனக்கும் சுபர்ணாக்கும் பயம்.. வீட்டுக்காரருக்கு அலர்ஜி...(??)
இவ்வளவு சாமானுக்கு நடுவுல இத எப்படி வெளிய தொரத்தறது....
அப்பத்தான் வெளில போயிருந்த அபு வந்தான்.. விஷயத்த சொன்ன உடன, ஆயிரம் வாட்ஸ் பல்ப் மொகத்துல.. எங்க எங்கன்னு ஆசையா போய் பார்த்தான்...
அம்மா ஸோ ஸ்வீட் மா.. இங்கயே இருக்கட்டும்மா
"டேய் ஏற்கனவே ரூம் நிறைய சாமான்.. உனக்குத்தான் பயம் இல்லல்ல .. அதைக் கொண்டு போய் மொதல்ல வெளில விடுடா .."
உள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல வந்து, ஒரு ப்ளாஸ்டிக் கவரும் ஒரு அட்டை டப்பாவும் கேட்டான்..
"பெரிய பூனை கொஞ்சம் அக்ரஸிவா இருக்கு.. அதான் க்ளவுஸ் மாதிரி இந்த கவர போட்டுக்கபோறேன்"
உள்ள போய் கதவ சாத்திண்ட்டான்... அஞ்சு நிமிஷம் போறதுக்குள்ளே அரை மணி ஆன மாதிரி ஆய்டுத்து... அப்பூன்னு கொரல் கொடுத்தவுடன வெளில வந்தான்
"குட்டிய வேகமா கைல எடுத்தா அது ஹர்ட் ஆயிடும்னு மெதுவா பார்த்து எடுக்கறச்ச அந்த பெரிய பூனை வந்து அத வாயில கவ்விண்டு கட்டிலுக்கு அடில போய்டுத்து.... கேக்கவே எனக்கு டென்ஷன்..
"என்னடா பண்றது இப்ப"
இரும்மா என்று உள்ளே சென்றவன் கொஞ்ச நேரத்தில் வாயில் புன்னகை, பெட்டியில் பூனைக்குட்டியோடு வந்தான்.."எப்டிடா"
"கம்ப வச்சு லேசா சவுண்டெழுப்பினப்ப, பெரிய புனை பயந்து ஜன்னல் வழியா போய்டுத்து.. அப்புறம் இத தூக்கிண்டு வந்துட்டேன்.."
"சரி சரி மொதல்ல கொண்டு போய் அத வெளில விட்டுட்டு வா"
அவனிடம் சொல்லியபடியே, எல்லா ஜன்னல் கதவுகளையும் சாத்தினேன்...
"என்னடா இன்னும் போலியா"
" இந்த குளிர்ல போய் அத வெளில விடனுமா"
புலம்பியபடியே விருப்பமில்லாமல் அதை வெளியே விட்டுட்டு வந்து ஏம்மா இவ்வளவு க்ரூயலா இருக்கன்னு கேட்டுட்டு போய்ட்டான்.
"அவரவர் வாதம் அவரரவர்களுக்கு".

Monday, March 3, 2014

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

எப்பவுமே ஸ்க்ரூ. ட்ரைவர பார்த்தா எனக்கு கை நமநமன்னும்.. எதாவது வீட்ல ரிப்பேர் வொர்க் இருக்கான்னு பார்த்துண்ட்டே இருப்பேன்.. பெருசா எதுவும் தெரியாது.. கழட்டித்தான் பார்ப்பொமேன்னு தோணும்.. அதுல சில சமயம் க்ளிக் ஆயிடும் .. அதனால எதாவது சரியில்லன்ன (இத வச்சு பசங்கள ஒண்ணும் சரி பண்ண முடியல) நம்மலத்தான் கூப்டுவாங்க.. வீட்ல வொயிட் வாஷ் பண்ணினதுல லாண்ட் லைன் ஒரு மாசமா வொர்க் பண்ணல.. "நீங்க எல்லாரும் ஆளுக்கு ஒரு செல் போன் வச்சுண்டு இருக்கேள் .. எல்லாரும் வெளில போய்ட்டா எனக்கு பேச இந்த போன சரி பண்ணித்தரக்கூடாதா" .... மாமியார்..
சரின்னு என்னோட திறமைய வச்சு, மாடில போய் மெயின் போஸ்ட்லேர்ந்து வர டெலிபோன் வயரயும், கீழே டெலிபோன் கிட்ட ஜாயின் ஆகிற வயரையும் மொதல்ல இணைக்கலாம் போனேன்.. கீழ போன் கிட்ட போற வயர கத்திய வச்சு கிழிச்சா அதுக்குள்ள ஆறேழு வயர்கள்.. அதுல நாலு வெள்ளை.. சரி குழப்பமே இல்லாம இருக்கட்டும்னு ஒரு பச்சை வயரையும், நீல வயரையும் மாடிலயும் கீழயும் கனெக்ட் பண்ணிட்டு பெருமையோட கீழ வந்தா, அத விட பெருமை முகத்தோட இவர் என்னயப்பார்த்து, "என்ன முடிச்சுட்டயா"
போன எடுத்துப்பார்த்தா இன்னும் உயிர் வரல...
"அதுக்குத்தான் டெலிபோன் ஆள வந்து பாக்கச்சொன்னேன்" _ மாமியார்..
நடுவில் வந்த எலெக்ட்ரீஷியனும், இதெல்லாம் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வந்து பார்க்கனும்னு சார்னு சொல்லிட்டு போய்ட்டான்...
எல்லாம் சரியாத்தானே பண்ணிணோம் ஏன் வரலைன்னு , ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், கத்தியும் கையுமா மாடிக்கும் கீழுக்கும் அலஞ்சு ஒண்ணும் நடக்கல .. இன்னிக்கி திடீர்னு ஒரு ஸ்பார்க் அடிச்சது .. மாடியில் டெலிபோன் போஸ்ட்லேர்ந்து வந்த வயர அறுந்து போய்டக்கூடாதுன்னு, ரொம்ப பாதுகாப்பா, முதலில் தனித்தனியாக ரெண்டு வயரயும் கனெக்ட் பண்ணி அப்ப்புறம் ஒட்டுமொத்தமாக எல்லாத்தயும் முறுக்கு முறுக்குனு முறுக்கி வச்சுருக்கேன்.. அத ஃப்ரீயா வீட்டு ரெண்டு வயர மட்டும் கனெக்ட் பண்ணினனா, மேட்டர் ஓவர்....
இப்ப என்ன தொல்லன்ன, டி.வி , கம்ப்யூட்டர் எது ரிப்பேர்னாலும் என்னயே தொல்ல பண்ணுவாங்க.. எப்படி சமாளிக்கறதுன்னு புரியல..

Saturday, July 27, 2013

MEET - 9


நண்பர்களே,

நம் குழுமத்தின் ஒன்பதாவது சந்திப்பு அறிவிப்பு.
இடம் - மதுரை (GRT Hotel, பழங்காநத்தம்)
தேதி - August 4 (2013), ஞாயிற்றுக்கிழமை சுமார் 11 மணியளவில்.


வகுப்பறையில் அறிவிப்பு செய்வது பாரம்பரியமாகிவிட்டது. அனைத்து சந்திப்பு அறிவிப்புகளும் இங்கு உள்ளதால் புதியவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

நன்றி,
லெட்சு.

Wednesday, July 17, 2013

தென்றல்

இயற்கையின் செல்லக் குழந்தையாய்
தவழ்ந்து வந்து
மலையில் ஏறி
நதியில் நீந்தி
மரம் செடியுடன் கை குலுக்கி
பகல் நேர வெப்பம் தணித்து
எனைக் குளிர வைக்க
ஓடோடி வந்த தென்றலே

மலர்களை தழுவி வந்து
எங்கும் மணம் பரப்பி
இனிய பாடலொன்றை
இதமாய் சுமந்து வந்து
உறங்கிய என்னை தட்டி எழுப்பி
கூந்தலை வருடி
காதோடு ரகசியம் சொன்ன
எனதருமை தென்றலே....

Tuesday, July 16, 2013

கலங்காதிரு மனமே

யாரோ சொல்றாங்கனு மனம் கலங்கிடப்டாது மக்களே...
தொடர்ந்து வரும் தொல்லைகளை படித்துத்தான் ஆக வேண்டும்....
நீங்களே கலங்கி நின்னா,
நான் வேற எங்க போவேன்...


அலைகள்

ஆழ்கடல் மேடையிலே
அசைந்தாடும் நர்த்தகி போல்
நளினமாய் நடனமிட்டு
கரை தொடும் பேரலையே..

ஆழ்கடல் வீதியில்
துள்ளி விளையாடும் சிறு பிள்ளை
தாயாக கரையை எண்ணி
முத்தமிடும் பேரலையே..

ஆழ்கடல் களத்தினிலே
போரிடும் வீரனை போல்
ஆக்ரோஷமாய் சண்டையிட்டு
கரை கண்டு அமைதியான பேரலையே..

ஆழ்கடலெனும் தாய்க்கு
அடங்காது ஓடி வந்து
கரையெனும் தகப்பனுக்கு பயந்து
பின் செல்லும் பேரலையே..

ஆழ்கடல் ப்ரஞ்சத்தில்
புயலாய் ஆர்ப்பரித்து, பின்
தென்றலாய் அசைந்து வந்து, என்
பாதம் கழுவும் பேரலையே



மழை

வானமகள் விடும் கண்ணீரில்
பூமித்தாய்க்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி??


ஊனம்

நெடிதொரு கனவில்
ஆழ்கடலில் நீந்தினேன்
மலையின் சிகரம் எட்டினேன்
பாலைவனத்தில் கால் புதைய நடந்தேன்
மகிழ்ச்சியில் திளைத்தேன்
விழிப்பு வந்து
மரக்கால் தரையில் ஊனும் வரை


Monday, July 15, 2013

கவிதை மாதிரி ஒரு முயற்சி

என்னை நானே அடிக்க மாட்டேன் என்பதால் என் டைரியிலும், நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க அடிக்கனும்னு நினைக்க கூட மாட்டீர்கள் என்பதால் வகுப்பறையிலும் இதை எழுதுகிறேன்.

வானம் எனும் கடலினிலே
விண்மீன்கள் நீந்தி வர
வெண்ணிற ஓடமாக நீ
எங்கு செல்கிறாய் வெள்ளி நிலவே.

வானம் எனும் வீதியிலே
நட்சத்திர சொந்தம் தொடர்ந்து வர
ஊர்வலமாக நீயும்
எங்கு செல்கிறாய் வண்ண நிலவே

வானம் எனும் மெத்தையிலே
மேகமெனும் தலையணை மேல்
நிம்மதியாய் உறங்காமல் நீ
எங்கு செல்கிறாய் வெண்ணிலவே

வானம் எனும் சிறையினிலே
விண்மீன்கள் காவலாக
எத்தனை நாள்
அடைந்திருப்பாய் வெண்ணிலவே

ஆவலுடன் உனைக்காண இங்கு நான் காத்திருக்க
மேகத்திரையின் மறைவினிலே
கண்ணாமூச்சி விளையாட்டாய
எங்கு ஒளிகின்றாய் பிள்ளை நிலவே...


ஆட்டோ, டாடா சுமோ லாம். வீட்டு பக்கம் வரப்டாது சொல்லிட்டேன்....

Tuesday, May 7, 2013

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சியில், சில வாரங்களாக நாட்டு மக்களை மகிழ்விக்க ப்ரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

முதலில் பத்மஸ்ரீ கமலஹாசன். இந்த ஆளு அலும்பு தாங்க முடியலப்பா.
வர வர கமல் பேட்டி கூட ஹாலில் குடும்பத்துடன் பார்த்தால் நடு நடுவில் நெளிய வேண்டி இருக்கிறது. இதில் தான் நாஸ்திகன் தான் எனபதை யாருக்கு புரிய வைக்க இவ்வளவு ப்ரயத்தனம்னு தெரியல. இருந்துக்கோ.. யார் வேணாம்னு சொன்னாங்க?? வடிவேலு, நானும் ரெளடிதான் நானும் ரெளடி தான்னு சொல்ற மாதிரி… இதுல இன்னொரு காமெடி (என்னப்பா யாரோ கேஸ் போடப் போறாங்கனு சொன்னாங்க), மெட்ரோ ப்ரியா அண்ட் டிடி யால் வந்தது.
கமல் - “எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது” தொடர்ந்து, “ இந்த ப்ரியா டிடி மட்டும் அல்ல பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு என்னிடம் உள்ள ஈர்ப்புக்கு நான் நன்றிக் கடன் பற்றிருக்கிறேன், , , தொடர்ந்து நிறய கமா போட்டு பெரிய வாக்கியமா உங்கள் கற்பனைக்கு அமைத்து கமல் குரலில் சொல்லி கொள்ளவும்.

அடுத்து அரவிந்சாமி – இது கொஞ்சம் சென்சிபிலா இருந்தது. நடிகனை தாண்டி அவருடைய பண்முகம் வெளிக் கொணரப்பட்டது. நடிக்காத காலத்தில் பசங்களுக்கு கணக்கு ட்யூஷன் எடுத்ததாக சொன்னார். - “இந்த மாதிரி ட்யூஷன்லாம் என்னய சேக்கறச்ச உனக்கு தெரியாதே” - என்னுடைய மகள்...

அடுத்து நம் அனைவரின் ஃபேவரைட் மயிலு…. இப்ப இருக்கும் ஸ்ரீதேவி முகத்தில் மயிலை பொறுத்திக் கொண்டே முழு நிகழ்ச்சியும் பார்த்தேன். மூன்று முடிச்சில் 13 வயதுதான் என்ற போது மூர்ச்சை யாகித்தான் போனேன்.
இங்கு நடித்ததில் அல்மோஸ்ட் எல்லா படமும் ஹிட் கொடுத்த ஸ்ரீதேவி பார்க்க பார்க்க பேச பேச பிடித்தது.

லாஸ்ட்டா ரயிலு ராதிகா. சின்ன வயசுல பார்த்தாலே கோபம் வரும். பின்ன மயில பார்த்த கண்ணால ரயிலா….. ஆனா இப்பலாம் பிடிக்கும்
மிகவும் ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் பேச்சு. நோ நான்சென்ஸ். அப்புறம் அந்த தைரியம்.

முக்கியமா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு எழுத காரணம் ராதிகாவ பார்த்த அப்புறம்தான். ஏன் தெரியுமா. அந்த பேச்சும், ஒரு விஷயத்த சொன்ன உடன் புரிந்ததா என்ற பார்வையும், அப்புறம் எல்லாவற்றிகும் மேலாக அந்த சிரிப்பும் நம் தோழி ஒருவரை நினைவு படுத்தியது. எஸ்…. சங்கரிதான் அது. உங்கள் யாருக்காவது அப்படி தோன்றி இருக்கா??

சங்கரி, உன்னிடம் யாராவது சொல்லி இருக்கிறார்களா???

Thursday, December 27, 2012

உயர் திரு. குஞ்சம்மாள் ஆசிரியை

உயர் திரு. குஞ்சம்மாள் ஆசிரியை . இப்பொழுதாவது நன்றி நவில்வோம் !. நாம் மட்டும் அல்ல .நம் பள்ளியில் படித்த அணைத்து மாணவர்களுக்கும் அவர் மறக்க முடியாத ஆசிரியர் . மாணவர்களுக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே .அதை சிலர் அடித்து போதிப்பார்கள் . திருமதி . குஞ்சம்மாள் ஆசிரியை அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசம் . முதலில் வார்த்தையால் மனதை புண்படுத்தி அனைவரையும் கட்டுபாடுக்குள் கொண்டு வந்து பிறகு ஒழுக்கத்தை போதிப்பார். அந்த ஒழுக்கம் இன்றுவரை அனைவரிடம் இருக்கிறது ,அது தொடரும் . நம் நண்பர்கள் அனைவரும் பயந்தான்க்கொள்ளிகள் என்று சொல்ல முடியாது .சேட்டைக்கார பசங்க . அவர் வகுப்பறையில் நுழைந்தவுடன் எல்லோரையும் ஒரு பார்வையால் அடங்க வைத்து விடுவார் . பின்பு போதனைகள் ஆணி அடித்தார் போல் மண்டையில் இறங்கும் .எனக்கு சில விஷயங்கள் அந்த வயதில் தேவைப்பட்டது .அது அவரிடமிருந்துதான் கிடைத்தது. அவருக்கு என்னுடைய நன்றி என்றும் உரித்தாகும் . ஒன்பதாவது வகுப்புகள் இருக்கும் தாள்வாரத்தில் நடந்து சென்றால் எல்லா வகுப்புக்குள்ளும் ஒரு விவரிக்க இயலாத சப்தங்கள் அல்லது பெரீறைச்சல்கள் வரும் .ஆனால் , ஒரு வகுப்பறையில் மட்டும் நிசப்தம் இருந்தால் அது திருமதி . குஞ்சம்மாள் இருக்கும் இடமாக கொள்ளலாம் . நமக்குள் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு வித்திட்டவர் என்ற வகையில் அவருக்கு நன்றி நவில்வோம் !. அவருடைய குடும்பததாற்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள் .

Wednesday, November 28, 2012

MEET-8


நண்பர்களே,

நம் குழுமத்தின் எட்டாவது சந்திப்பு அறிவிப்பு.
 
இடம் - சென்னை (மன்னிக்கவும் பெங்களூரு வாசிகளே, அடுத்த சந்திப்பை அங்கு வைக்கலாம்)
தேதிDecember 29, 30 (2012) அல்லது January 5, 6 (2013).

உங்கள் வசதித் தேதியை தேர்வு செய்யவும். அதிகம் தேர்வு செய்யப்படும் தேதியில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம். (சுரேஷ், உனக்கு இரு தேதிகளும் ok தானே?)

நன்றி,
லெட்சு.

Wednesday, November 7, 2012

கப் மெழுகு

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

உங்கள் விழிப்புணர்வுக்காக!

Monday, October 1, 2012

தாண்டவம்




இப்பதான் சமீபத்தில் யாரோ ஒருவர், தன்னுடய திரைக்கதையை யு டீ வீ ப்ரொடக்ஷன்ஸ் தனஞ்சயனிடம் கொடுத்ததாகவும், அதை அவர் டைரக்டர் விஜய்யை வைத்து தாண்டவமாக எடுத்து விட்டதாகவும், அதற்காக அவர் போராடி வருவதாகவும் படித்தேன்.
படத்தை பார்த்தவுடன் இந்த திரைக்கதைக்கா இவ்வளவு போராட்டம் என்று தோன்றியது.

கூடுதலாக வயசான தோற்றத்தில் உள்ள விகரம் பார்க்க பாவமாக இருந்தது. கண் தெரியாத விக்ரமிடம், ஒரு காசி, தெய்வத்திருமகன் கலந்த உடல் மொழி இருந்தது. கமலைப் போல இவனும் படுத்த ஆரம்பிப்பானோ என்ற பயம் வருகிறது.

அனுஷ்கா கொஞ்சம் ஆறுதல். டெல்லியில் கண் டாக்டராக இருக்கும் அனுஷ்காவிற்கு, தான் திருமணம் செய்து கொள்ள போகிறவர் என்ன உத்யோகத்தில் இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருப்பது அபத்தம்
சந்தானம் காமெடி கூட ரொம்ப சிரிப்பு வரல.

நாசர் ஒரு காமெடி போலிஸ். கைல ஒரு ஐ பாடை வைத்துக் கொண்டு அவர் செய்யும் இன்வெஸ்டிகேஷன் பயங்கர காமெடி.

ஜீ வீ ப்ரகாஷ் 25 வது படம்னு கொடுத்த பில்ட் அப் க்கு இசை சுமார்.

வேலை வேலை என்று இருப்பதால் நம்ம எப்ப பாரு டீல்ல விடறாங்களேனு, எனக்கும் சேர்த்து டிக்கட் எடுக்க சொன்னது பிசகு.